🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீடு கண்ணாமூச்சி! குரலற்றவர்களின் குரலை கேட்குமா தமிழக அரசு!

16-வது சட்டமன்றத்தின் முதல்கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று ஆளுநர் உரை முடிந்தவுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளனர். அச்சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பேசியதாக தெரிவித்தார். 

ஒருதரப்பு அரசியல் அழுத்தங்களை தொடர்ந்து அரசுக்கு கொடுத்தவண்ணமுள்ள நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள பிற 115 சமூகங்களின் நியாயமான நிலைப்பாட்டை தமிழக அரசிடம் எடுத்துரைக்க நாதியற்றவர்களாக உள்ளோம். சட்டமன்றத்தில் நமக்காக பேசுவதற்கு யாருமில்லாத நிலையில் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க, நமது தரப்பு நியாயங்களையும், கோரிக்கைகளையும் அரசிடம் கொண்டு செல்ல, நாம் ஒவ்வொருவரும் களம் காணவேண்டியது கட்டாயம். எனவே 115 சமூகங்களின் உறவுகள் சமூக ஊடகங்களின் மூலமாக தமிழக அரசுக்கு தொடர்ந்து நமது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க வேண்டும். சமுதாய நலனில் அக்கறையுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்களை நமக்காக குரல் கொடுக்க உள்ளூர் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து விழிப்புடன் இருப்பது மட்டுமே, மீண்டுமொரு அநீதி இழைக்கப்படாமல் தடுக்க முடியும். சட்டமன்றத்தில் குரல் ஒலிக்கவில்லை என்பதற்காக அரசு ஒருதரப்பிற்கு சாதகமான நிலையை எடுத்துவிடக்கூடாது. எனவே பொதுத் தளங்களில் உறவுகள் மற்ற சமுதாய உறவுகளின் மனதைப் புண்படுத்தாத விதத்தில் புள்ளி விபரங்களுடன் நமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க வேண்டும். தனி விருப்பு வெறுப்புகளை தனித் தளங்களில் தான் பதிவிட வேண்டுமே ஒழிய பொதுத்தளத்தில் பதிவிடுவது ஆரோக்கியமாக இருக்காது. நாளை சீர்மரபினர் நல சங்கம் சார்பாக நீதியரசர் மாண்புமிகு.ஏ. கே. ராஜன் குழுவிடம் நீட் தேர்வில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். 

இவண், 

சீர்மரபினர் நலச்சங்கம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved