🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திருநங்கைகளையும் விட்டுவைக்காத உள்இடஒதுக்கீட்டு துரோகம்!

ஒரு சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு வழங்கி 115 சமூகங்களைச் சேர்ந்த 3 கோடி மக்களை எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு வஞ்சித்து விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இடஒதுக்கீடு மற்றுமொரு திடீர் திருப்பமாக திருநங்கைகளும் ஏமாற்றப்பட்டது அம்பலமாகியுள்ளது.

10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 115 சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளின் சார்பில்,  115 சமுதாய தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம், நேற்று (23.06.2021) இரவு காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், மூன்றாம் பாலினத்தவர் சார்பில் கலந்துகொண்ட திருநங்கையும், இவ்விசயத்தை முதன்முறையாக வெளிக்கொண்டுவந்து அம்பலப்படுத்தி பேசினர்.

அக்கூட்டத்தில் பேசிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தென்மாவட்ட அமைச்சர்கள் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்ததாக சொல்லப்பட்ட நிலையில்,  தொட்டிய நாயக்கர், போயர், முத்தரையர், கள்ளர், மறவர், மீனவர், வண்ணார், நாவிதர் போன்ற டிஎன்டி, எம்.பி.சி சமூக மக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தலைமை வகித்து வந்தபொழுது, கண்ணை மூடிக்கொண்டு பரம்பரை பரம்பரையாக அதிமுகவிற்கு வாக்களித்து வந்ததைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், அந்த சமூகங்களின் பிரதிநிதிகளையோ, கட்சியில் உள்ள அச்சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களையோ கலந்தாலோசிக்காமல், பதவி இச்சைக்காகவும், தேர்தல் வெற்றிக்காகவும்,சட்டநெறிமுறைகளுக்கு புறம்பாக, எதோச்சதிகாரப்போக்கோடும், அவசர, அவசரமாக, சட்டமன்றத்தில் விவாதம் கூட நடத்தாமல், ஆட்சி முடிவடையும் ஒருசில நொடிப்பொழுதுக்கு முன்னர், ஒருகுறிப்பிட்ட சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு வழங்கியதை கடுமையாக சாடினார்.

இதை எதிர்த்து தேர்தல் களத்தில் தீவிரமாக களமாடிய DNT சமூகத்தினர், தேர்தல் களத்தை பரபரப்பாக்கியதோடு மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் DNT குறித்தான விவாதங்களை ஏற்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்கியதோடு, துரோகமிழைத்த அதிமுக ஆட்சியையும் அகற்றி சாதனைபுரிந்த அனைத்து சமுதாய உறவுகளுக்கும் நன்றி தெரிவித்தனர். அதேபோல் கொங்கு மண்டலத்தில் அதிமுக கோலேச்சியபொழுதும், நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்தினரின் இடஒதுக்கீடு குறித்தான தெளிவான புரிதலின் விளைவாக, மொத்தமுள்ள ஆறுதொகுதிகளில் 4-இல் அதிமுக-வை தோல்வியடையச் செய்ததற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

அப்பேச்சின் தொடர்ச்சியாக, 10.5 விழுக்காடு சட்டத்தால் திருநங்கைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அக்கருத்தின் அடிப்படையில், எந்த சாதி, மதத்தில் பிறந்த திருங்கங்கையாக இருந்தாலும் MBC பட்டியலில் வரும் 2.5 விழுக்காடு பிரிவில் இடம்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

5-வயதில் பள்ளியில் சேரும் குழந்தைக்கு பெற்றோர்களின் சாதி அடிப்படையில் தான் BC-யா, MBC-யா அல்லது SC,ST என பிரிக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர் என்பதே ஒரு குழந்தை பதின்மவயதை எட்டும்பொழுது தான் தெரியவரும். முதலாம் வகுப்பில் சேரும் ஒருவர் SC பட்டியலில் இடம் பெற்றிருப்பவர், பருவ வயதை அடையும்பொழுது பாலினம் மாறுபட்டால் MBC  பட்டியலில் 2.5 விழுக்காடு பிரிவில் சேர்க்கப்படுவார் என்ற புதிய விந்தையான கண்டுபிடிப்பை அரங்கேற்றியுள்ளது எடப்பாடி தலைமையிலான அரசு. அவர் எந்த மதம், சாதியில் பிறந்திருந்தாலும், 10.5 விழுக்காடு பெற்றுள்ள வன்னியர் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும், 3 விழுக்காடு பெற்றுள்ள அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுள்ள முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இடஒதுக்கீட்டு வரம்பில் வராத உயர்சாதி வகுப்பில் பிறந்திருந்தாலும், அனைவரும் MBC-பட்டியலில் 2.5 விழுக்காடு பிரிவில் சேர்ப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கமுடியும்.

உயர்வகுப்பினர் அல்லது பட்டியலின பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த இருவரில் ஒருவர் SC-யாகவும், இன்னொருவர் MBC-யாகவும் எப்படி இருக்கமுடியும்? இதற்கான விவாதங்கள் எப்பொழுது நடைபெற்றது? யார் பரிந்துரை செய்தது? எந்த சட்டத்தில் இடமுள்ளது போன்ற கேள்விகளுக்கு விடையில்லை. இது ஒன்றே போதுமானது, 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது என்பது தெளிவாகிறது.

இந்த சம்பவங்களையெல்லாம் மூடிமறைத்து, குட்டு வெளிப்படும் முன் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். இதையெல்லாம் முறியடித்து சமூகநீதி காத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 115 சாதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தமிழக முதல்வரை விரைந்து சந்திக்க வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கினார்.

மேலும், அனைத்து சமுதாய அமைப்புகளும் இடஒதுக்கீடு குறித்தான விழிப்புணர்வை, அவரவர் சமூக இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள 115 சாதிகளைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, உள்ளாட்சி பிரதிநிகளுக்கோ தங்கள் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டு உரிமை குறித்த அடிப்படை புரிதல்கூட இல்லாமல் இருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்தார். மாறாக சமீபத்தில் 10.5 விழுக்காட்டை நடைமுறைப்படுத்த வேண்டி, ஒருகட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரை சந்தித்தபொழுது, அதே சமூகத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் அக்குழுவினருடன் சென்றதை சுட்டிக்காட்டியவர், உங்களது கோரிக்கைகள் குறித்து முதல்வரை சந்திக்கும்பொழுது, உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவராவது உடன்வருவார்களா? என்ற கேள்வியை முன்வைத்தார். ஆனால் தேர்தல் வந்தால் சொந்த சாதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பர். தங்கள் சமூக மக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட தெரியாதவர்களுக்கு வாக்களிப்பதை கைவிட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இரண்டு மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved