🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரம்! உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

தமிழகத்தில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டிற்கு எதிராக சீர்மரபினர் நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் 09-ஆம் தேதி நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் தரப்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர், வன்னியர் உள்ஒதுக்கீட்டினால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலுள்ள பிற சமூகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் அச்சட்டத்திற்கு உடனடியாக தடைவிதிக்க கோரினார். ஒரு வழக்கில் தடைவிதிப்பது என்பது முழுக்க முழுக்க அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் தனி சுதந்திரம் என்றாலும், சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ ஒரு சட்டத்தை இயற்றிவிட்டால், அச்சட்டத்தைக் கொண்டுவர அரசுக்கு உரிய காரண காரியங்களும், நியாயமும், தேவையும் இருக்கும் என்று நீதிமன்றம் நம்புவதாலும், அச்சட்டம் அரசின் பல மட்டங்களில் விவாதிக்கப்பட்டு, அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனை பெற்று கொண்டுவரப்படுகிறது என்ற அடிப்படையில், அச்சட்டத்திற்கு எதிராக பெரும்பாலும் நீதிமன்றங்கள் உடனடியாக தடைவிதிப்பதில்லை. அந்தபின்னனியில் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், மாநில அரசு பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் சார்பில் வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஒருவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுக்கள் நேற்று (02.07.21) உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான நாகமுத்து, “இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதால். இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இதையும் விசாரிக்க வேண்டும். மேலும், 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். 

அப்பொழுது பேசிய நீதிபதி நாகேஸ்வரராவ், தமிழகத்தில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு உள்இடஒதுக்கீட்டுக்கு எதிரான  வழக்குகள் இதே அமர்வு முன் நிலுவையில் உள்ளதால் இடைக்காலத் தடை விதிப்பதற்கு மறுத்து, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டதுடன், மாநில அரசு மூன்று வார காலத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட்-20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நீதிமன்றம் உள்ஒதுக்கீட்டிற்கு உடனடியாக தடைவிதிக்கத்தான் முன்வரவில்லையே தவிர, மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது வழக்கமான நடைமுறைதான் என்றபோதிலும், நேற்று செய்தி ஊடகங்களில் " வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு" என்ற தலைப்புடன் "பிரேக்கிங் நியூஸ்" வெளியானதால் ஏதோ ஒருதரப்பிற்கு வெற்றி என்பது போலவும், மற்றொரு தரப்பிற்கு தோல்வி என்பது போலவும் பரபரப்பு நிலவியது. ஆனால் வழக்கு விசாரணையின் முடிவில் தான் உண்மை நிலை தெரியவரும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved