🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அடேங்கப்பா..... இதுக்கே 75 ஆண்டுகள் ஆகிப்போச்சா!!!

தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவரின் பேட்டியை சுதந்திர இந்தியாவில்  எந்த பிரதான மீடியாவும் இதுவரை பெரிய அளவில் வெளியிட்டதில்லை. அமைப்புகளும், விடுதலைக்களம் கட்சியும் நடத்தும் கூட்டங்களை, ஆர்ப்பாட்டங்களைப் பற்றி அவ்வப்பொழுது பெட்டிச்செய்தியாக வெளியாகும். முதல்முறையாக வன்னியர் உள்ஒதுக்கீட்டை  எதிர்த்து 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதிக்கூட்டமைப்பு சார்பாக மதுரையில் கடந்த ஞாயிறன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து, தொட்டிய நாயக்கர் சமுதாயம் பற்றிய செய்திகளும், இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் தலைவர் திரு.பழனிச்சாமி அவர்களின் பேட்டி பிராதான இடத்தை கடந்த இரண்டு நாட்களாக பெற்றுவருகிறது. பிறருக்கு சாதாரண விசயமாகத் தெரியும் இச்செய்தி, சமுதாயத்தை நன்கு உற்று கவனித்து வருபவர்களுக்கு பெரிய சாதனையாக தெரியும். இந்த இடத்தை அடைய 70 ஆண்டுகாலம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.பழனிச்சாமி அவர்களின் முழுப்பேட்டியை முன்னனி தமிழ் நாளிதழான தினமலர் வெளியிட்டுள்ளது. அதன் முழுவிபரம்...

வன்னியர்களுக்கான, 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது. மீறி அமல்படுத்தினால், மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்' என, 115 ஜாதிகளை சேர்ந்தவர்கள் கொந்தளிக்கின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும், 115 ஜாதிகளையும் ஒருங்கிணைத்து, எஸ்.பன்னீர்செல்வம் என்பவரை, ஒருங்கிணைப்பாளராக நியமித்து, சமூக நீதி கூட்டமைப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, மதுரை, மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள விடுதியில் கூட்டம் நடத்தி, 'அனைத்து சமூகங்களின் உரிமையை உறுதி செய்யும் வரை, வன்னியர் உள்ஒதுக்கீட்டுசட்டத்தை அமல்படுத்த கூடாது' என்று, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இது குறித்து, நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமூக அறக்கட்டளை தலைவர் எம்.பழனிசாமி அளித்த பேட்டி: தமிழகத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 116 ஜாதிகள் உள்ளன. அதில், ஒரு ஜாதி தான் வன்னியர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என, 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதில், வன்னியர் என்ற ஒரு ஜாதிக்கு மட்டும் உள்ஒதுக்கீடாக, 10.5 சதவீதத்தை கொடுத்து விட்டால், மீதியுள்ள 115 ஜாதிகளுக்கு, 9.5 சதவீத இட ஒதுக்கீடு தான் கிடைக்கும். வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவிப்பதற்கு முன், முதல்வராக இருந்த இ.பி.எஸ்.,சை, 115 ஜாதிகளை சேர்ந்தவர்கள் சந்திக்க முயன்றோம்.

எங்களை சந்திப்பதாக கூறி, நாட்களை கடத்தினார். சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன், சட்டசபையில், அது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்து விட்டார்.அதற்கு கவர்னர் ஒப்புதலும் பெற்று சட்டமாக்கி விட்டார். எடப்பாடி தொகுதியில், எப்படியாவது வன்னியர் ஓட்டுக்களை வாங்கி, தான் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்பதற்காகவே,வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அறிவித்து விட்டார். அதற்கு பழிவாங்கவே, 115 ஜாதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, அ.தி.மு.க.,வை தோற்கடித்தோம். தென் மாவட்டங்களில், அ.தி.மு.க., கடும் தோல்வியை சந்தித்ததற்கு, இதுவே பிரதான காரணம்.

இப்போது, தமிழகத்தில் ஆட்சி மாறி விட்டது. அதை அமல்படுத்தச் சொல்லி, அரசுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நெருக்கடி கொடுக்கிறார். அவரது நெருக்கடிக்கு அரசு பணியக் கூடாது. மீறி அமல்படுத்தப்பட்டால், 115 ஜாதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் மிகவும் பாதிக்கப்படுவர். அதனால் தான், 115 ஜாதிகளை சேர்ந்த பிரதிநிதிகள், மதுரையில் கூட்டம் நடத்தி ஆலோசித்தோம்.வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு அளித்த இ.பி.எஸ்., மற்ற ஜாதியினரை ஏமாற்ற, ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில், ஒரு கமிஷன் அமைத்தார்.

அந்த கமிஷன் பல்வேறுகட்ட விசாரணைகளை நடத்தி, அரசுக்கு கொடுக்கும் பரிந்துரை அடிப்படையில், வன்னியர் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். அதுவரை, இந்த உள் இடஒதுக்கீடு தற்காலிகமானதே என்றும் அறிவித்திருந்தார். ஏற்கனவே, இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, சட்டநாதன், ஜெகநாதன், அம்பா சங்கர் என, பல கமிஷன்கள் அமைக்கப்பட்டு, பரிந்துரைபெறப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த பரிந்துரைகளை பார்த்தால், ஒவ்வொன்றும் முரண்பாடாக உள்ளன. அதுமட்டுமல்ல, இப்படி அமைக்கப்பட்ட கமிஷன் தலைவர்களில் பெரும்பாலானோர் வன்னியர்களே.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் நியமிக்கப்பட்டிருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டுமல்ல, மற்ற அதிகாரிகளும் வன்னியர்களாகவே இருப்பதால், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையமே, ஒரு ஜாதிக்கானதாகி விட்டது. சட்டநாதன் கமிஷன், 1970ல் எடுத்த ஜாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலையும், அம்பாசங்கர் ஆணையம், 1985ல் எடுத்த ஜாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலையும் ஒப்பிட்டு பார்த்தோம். எல்லாவற்றிலும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. 1970ல், 8.26 லட்சமாக இருந்த மறவர் மக்கள்தொகை, 15 ஆண்டுகள் கழித்து, 1985ல், 4.97 லட்சமாக குறைந்து விட்டது.

அதேபோல, கள்ளர் இன மக்கள்தொகை, 5 லட்சத்தில் இருந்து 3.37 லட்சமாகவும், ஒட்டர், போயர் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து வெறும், 76 ஆயிரமாகவும், முத்தரையர் மக்கள் தொகை, 9 லட்சத்தில் இருந்து, 4.57 லட்சமாகவும் குறைந்து விட்டது. இது எப்படி? காலம் போகப் போக, ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை கூடுதலாகாமல், குறைந்தால் அது மோசடி தானே.இப்படி தவறான அறிக்கையை தான், ஆணைய தலைவராக இருந்த அம்பா சங்கர், அரசுக்கு கொடுத்திருக்கிறார். காரணம்,- அம்பாசங்கரும் ஒரு வன்னியர். அவரது பரிந்துரை அடிப்படையில் தான், தற்போதைய உள் ஒதுக்கீட்டையே, அரசு அறிவித்திருக்கிறது. இது, எப்படி நியாயமாக இருக்க முடியும்?

அம்பா சங்கர் ஆணையத்தில், தலைவர் தவிர, 21 உறுப்பினர்கள் இருந்தனர். அதில், 14 உறுப்பினர்கள் தலைவரின் அறிக்கையை நிராகரித்தனர். 14 பேரும் சேர்ந்து, தனியாக சில பரிந்துரைகளை, அரசுக்கு கொடுத்துள்ளனர். இப்படி கமிஷனே பிரிந்து நின்று, அரசுக்கு தனித்தனியாக அறிக்கை கொடுத்ததால், அரசு பரிந்துரைகளை கிடப்பில் போட்டது. இப்படி பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை, தேர்தலுக்காக இரவோடு இரவாக மசோதாவாக தயார் செய்து, துணை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.,சுக்கு தெரியாமல், முதல்வராக இருந்த இ.பி.எஸ்., சட்டசபையில் தாக்கல் செய்து, அதை சட்டமாக்கி விட்டார். இந்தச்சட்டத்தை எதிர்த்து, வழக்கு தொடர்ந்திருக்கிறோம். ராமதாஸ் வழியில் போராடவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள திரு.பழனிச்சமி அவர்களின் பேட்டி.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved