🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் பழகு! - வழிகாட்டும் நாமக்கல்!

கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றி, தோல்வியோடு வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரம் ஓய்ந்துவிடும் என்று தான் அரசியல் கட்சிகள் நினைத்திருக்கும்.  ஆனால் நாட்கள் செல்லச்செல்ல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் வலிமை பெற்று வருகிறது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கள்ளர், மறவர் சமுதாய மக்கள் அன்றைய ஆளும் கட்சிக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்து தேர்தல் களத்தில் அமைச்சர்களை அலறவிட்டதோடு,  DNT/சீர்மரபின பழங்குடி சமுதாயங்கள் என்பவர்கள் யார், அவர்களின் பிரச்சினை என்ன என்பதுபற்றியெல்லாம் பலரும் பேச வழிவகை செய்தது. 

தென்மாவட்ட அளவிற்கு மேற்கு மாவட்டங்களில் இப்பிரச்சினை பேசப்படவில்லை என்றாலும் DNT பிரிவிலுள்ள வேட்டுவக்கவுண்டர் மற்றும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் இப்பிரச்சினையை கையிலெடுத்து கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தனர்.  இதன் விளைவாக கொங்கு மண்டலத்தில் சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக அதிகமான இடங்களை கைப்பற்றினாலும்,  நாமக்கல், கரூர் மாவட்டங்களில் படுதோல்வியைச் சந்தித்தது. 

தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், கொரோனா  பெருந்தொற்றுக்குப்பின் மீண்டும் வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. 

வன்னியர் உள்ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள 115 மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள சமுதாயங்கள் ஒன்றிணைந்து "சமூகநீதிக்கூட்டமைப்பு " என்ற அமைப்பை தொடங்கி,  முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பை கடந்தவாரம் மதுரையில் நடத்தி, உள்ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள முறைகேட்டை அம்பலப்படுத்தினர். 

இதனைத்தொடர்ந்து சமூகநீதியில் அக்கறையுள்ள அமைப்புகளை அணுகி தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வரும் அதேவேளையில்,  புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 115 சமுதாய தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர். 

115 சமுதாயங்களில் ஒன்றான தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் நலச்சங்கம் இடஒதுக்கீடு விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.  சென்ற சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக வை வீழ்த்தியதில் முக்கியப் பங்காற்றிய இதன் தலைவர்கள்,  தற்பொழுது அம்மாவட்டத்திலுள்ள ஆளும் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களை ஒன்றுதிரட்டி சுற்றுச்சூழல் அமைச்சர் மா.மதிவேந்தனை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டத்தில் சமுதாய அமைப்புகளும், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதால் அங்கு சமுதாயம் மிக வலுவாக உள்ளதோடு, அரசியல் கட்சியினர் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை புறக்கணிக்க முடியாத அளவில் சமுதாயத்தை தூக்கி நிறுத்தியுள்ளனர்.  இதேவழியை மற்ற மாவட்டங்களிலுள்ள அரசியல்வாதிகளும், அமைப்பினரும் இணைந்து செயல்பட்டால் இடஒதுக்கீடு பிரச்சினை மட்டுமல்ல,  அரசியல் வெற்றிடத்தையும் விரைவில் நிரப்பலாம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved