🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நம்மவர் கமலுடன் சமூகநீதி கூட்டமைப்பினர் சந்திப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அலுவலகத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசனை  சமூகநீதி கூட்டமைப்பினர் சந்தித்து பேசினர். 

வன்னியர் உள்ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள 115 சமூகத்தினர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பினர் கடந்த சில வாரங்களாக "சமூகநீதி கருந்தரங்கம் " என்ற தலைப்பில் இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமூகநீதியில் அக்கறையுள்ள அமைப்புகள், இயக்கங்களின் தலைவர்களைக் கொண்டு காணொளி மூலம் தொடர்ச்சியாக நடத்திவருகிறது.இது தவிர சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, வன்னியர் உள்ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறது. 

அதன்தொடர்ச்சியாக சமூகநீதி கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல்கட்சி தலைவர்களையும் சந்தித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகே உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். மதிமுக, மா.கம்யூ, இ.கம்யூ, விசிக, பாஜக போன்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளிடமும் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத தங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பவேண்டும் என்று கோரிக்கையையும் விடுத்துவருகின்றனர். 

இதற்கிடையே இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சமுகநீதி கூட்டமைப்பின் செயல் தலைவருமான பி.இராமராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காலை மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசனை சந்தித்து, "சமூகநீதி கூட்டமைப்பு"வை தொடங்கிட வேண்டிய அவசியத்தையும், உள்ஒதுக்கீடால் ஏற்படப்போகும் பாதிப்புகளையும், உள்ஒதுக்கீட்டிற்காக சட்டவிதிமுறைகள் வலைக்கப்பட்டதையும் விரிவாக எடுத்துரைத்தனர்.

அப்பொழுது பேசிய நடிகர் கமலஹாசன்,  இது குறித்து தேர்தலுக்கு முன்பே தான் கருத்துக் கூறியதை நினைவுகூர்ந்தவர், இது தேர்தல் கூட்டணிக்காக கொண்டுவரப்பட்டது, அப்படி இல்லாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பின்பே இடஒதுக்கீடு வழங்கப்படும் என்பதை வலியுறுத்தினார். 

இச்சந்திப்பிற்குப்பின் பேசிய சமூகநீதி கூட்டமைப்பினர் மக்கள் நீதி மையத்தலைவருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாகவும்,  எங்களின் நியாயங்களை அவர் புரிந்து கொண்டதாகவும், இடஒதுக்கீடு என்பது யாரிமிருந்தும் யாருக்கும் பறித்துக்கொடுக்கப்படாமல், உண்மையாக புள்ளி விபரங்களை சேகரித்து அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்பதை அவரின் நிலைப்பாடாக இருந்தது என்று தெரிவித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved