🔴 LIVE | முப்பெரும் விழா 2023


90's kids தலைமையேற்போம்!- 200 ஆண்டுகால வெற்றிடத்தை நிரப்புவோம்!

மாவீரன் கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற ஆளுமைகளுக்குப்பின் இருநூறு ஆண்டுகளாக அடையாளமின்றி தவித்து வரும் இனத்தில் எங்களின் காலம்வரை தோற்றுவிட்டோம்.இளைஞர்களே வாருங்கள் உங்களின் கட்டளையேற்று பணியாற்றிட நாங்கள் தயாரகவுள்ளோம் என்று தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் திரு.பழனிச்சாமி கம்பளத்தார் சமுதாய இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகளே வணக்கம். தமிழகத்தில் ஆண்ட பரம்பரை கதை பேசித்திரியும் சமூகங்களில் கம்பளத்தார் சமூகத்திற்கு தனியிடம் உண்டு. இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கட்டபொம்மன், கோபால நாயக்கர், எத்திலப்ப நாயக்கர் என பாளையக்காரர்களை அடையாளம் காட்டி பெருமைபொங்க வரலாறு பேசுவதில் நமக்கு நிகர் நாம் தான். வரலாற்றில் என்றுமே வெற்றியாளர்களே பேசப்படுவார்கள். அந்த வகையில் நமக்கு முன் வாழ்ந்தவர்கள் வெற்றியாளர்களாக இருந்துள்ளனர். அதனால் இன்னும் பேசிக்கொண்டுள்ளோமே தவிர, நாம் வாழும் காலத்தில் வெற்றியாளர்களாக இருக்கின்றோமா என்றால்? இல்லை.இருநூறு ஆண்டுகால வெற்றிடத்தை க.சுப்பு என்ற ஆளுமையின் சுவடுகளைத் தவிர நம் பாட்டன், முப்பாட்டன், ஏன் நாம்மில் கூட யாருடைய அடையாளமும் இந்த இனத்தின் வரலாற்றுப்பக்கங்களில் இல்லை என்பதே எதார்த்தம்.

மானிட வாழ்க்கையில் அதிகாரத்தை கைப்பற்றுவதே தொன்றுதொட்டு இருக்கும் நடைமுறை. அதனால் தான் கம்பிளி தேசத்திலிருந்து தக்கவைத்துக்கொண்ட அதிகாரங்களைக் கொண்டே நம் இனத்தை இன்றுவரை அடையாளப்படுத்திக்கொள்கிறோம். சமகாலத்தில் மாறிவரும் சூழலுக்கேற்ப இனக்குழுவாக இயங்கி, தங்களை தகவமைத்துக்கொள்ளாததே கம்பளத்தார்களுக்கு ஆட்சி அதிகாரம் கைகளுக்கு எட்டாத தூரத்திற்கு சென்றுவிட்டதற்கு காரணம். வாக்கு அரசியல் வலுப்பெற்றபின் பெரும்பான்மையே இங்கு கோலேச்சுகிறது. ஆனால் அதையும் தாண்டி சில வைரங்கள் ஜொலிக்கத்தான் செய்கின்றன. இரண்டிலும் இதுவரை கம்பளத்தார்கள் தோற்றுத்தான் வருகிறோம்.

அதிகாரத்தில் நாம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அரசியலில் நாம் இல்லாமல் இல்லை. கழகங்களில் இல்லாத கம்பளத்தார் கிராமங்கள் கிடையாது. அப்படியிருந்தும் அதிகாரத்தை கைப்பற்றும் சூத்திரம் தெரியாததால் பின்தங்கி உள்ளோம். ஆனால் காலம் நமக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியபின், பல சமூகங்களுக்கிடையே நற்புணர்வு ஏற்பட வழிவகுத்துக்கொடுத்துள்ளது. அப்படி கிடைத்த வாய்ப்பின் மூலம் தொட்டிய நாயக்கர் சமூகம் இன்று 114 சமூகங்களோடு இணைந்து செயல்படும் வாய்ப்பை பெற்றுள்ளோம். ஒருசில சமூகங்களுக்கிடையேயான சேர்க்கையின் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்று நாமக்கல் மாவட்டம் கற்றுக்கொடுத்துள்ளது. கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டை என்று மார்தட்டிய நிலையில் நாமக்கல்லில் அது எடுபடாமல் போனதிற்கு காரணம் தொட்டிய நாயக்கர்-வேட்டுவக்கவுண்டர் வாக்குகளே.

இப்படி ஒருசில சமூகங்கள் இணைந்து அரசியல் மாற்றங்களை நிகழ்த்தமுடியும் என்று நிரூபிக்கப்பட்டபின், 115 சமூகங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள "சமூகநீதி கூட்டமைப்பு" மூலம் தமிழக அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கிடமுடியும்.
இக்கூட்டமைப்பு நேரடி அரசியல் களத்தில் இறங்கவில்லை என்றாலும், இதில் இணைந்து பயணித்து சமுதாயப்பணியாற்றுவதன் மூலம் சொந்த சமுதாயத்தில் உங்களுக்கான வாய்ப்புகள், பிற சமுதாய தலைவர்களுடன் ஏற்படும் பழக்க வழக்கம், நட்பு, கூட்டமைப்பு பயிற்சி பட்டறைகள் மூலம் கிடைக்கும் அரசியல் அறிவு, சமூகநீதியில் தெளிவு, போராட்டக்களங்களின் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவம், உங்களின் வருங்கால அரசியலுக்கு நுழைவு வாயிலாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சமுதாயத்திற்கு பல புதிய தலைவர்களை உருவாக்கிட முடியும். அப்படி உருவாகும் தலைவர்கள் கண்டிப்பாக தற்போதைய அரசியல் தலைவர்கள் போல் ஒருகுறுகிய வட்டத்திற்குள் இயங்குவதைப்போல் இல்லாமல், பரந்துபட்டு செயல்படக்கூடிய வாய்ப்புகளை வழங்கும்.

எனவே அரசியல் மட்டுமல்லாது தொழில், வியாபாரம் என எந்தத்துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் "சமூகநீதி கூட்டமைப்பில்" இணைந்து பணியாற்றி, சமுதாயப்பணியோடு உங்களுக்கான வாய்ப்புகளையும் பெற்று, நமது சமுதாயத்தை அதிகாரத்தை நோக்கி நகர்த்திட கரம் கோர்ப்போம் இளையோரே வாருங்கள் அன்போடு அழைக்கின்றோம் என்று கூறியுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved