🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எடப்பாடி வெட்டிய புதைகுழியில் சிக்கிக்கொண்ட பலமான யானை!

116 சாதிகளைக்கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தநிலையில், அதில் உள்ள வன்னியர் என்ற ஒருசாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் இறுதிநாளன்று, தமிழக சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டது. இதற்கு அப்பொழுதே பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இச்சட்டத்திற்கு கடுமையாக எதிர்வினையாற்றிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 68 சாதிகளை உள்ளடக்கிய DNT பிரிவினர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியதோடு, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

வன்னியர் உள்ஒதுக்கீடுக்கெதிரான பிரிவினரின் போராட்ட வலிமையை உணர்ந்துகொண்ட அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் உரிய ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், DNT மக்களின் கோரிக்கையான ஒற்றைச்சான்றிதழ், DNT மக்கள்தொகை புள்ளிவிபரங்களை சேகரிக்க மத்தியஅரசு கேட்டுக்கொண்டதைப்போல் “தொடர்பு அதிகாரி” நியமிக்கப்படுவார் என்ற வாக்குறுதியை முன்வைத்து தேர்தல் பிரச்சாரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த தேர்தலில் அதிமுக வீழ்த்தப்பட்டு திமுக அரியணை ஏறியது. இத்தேர்தலில் அதிமுக தோற்பதற்கு வன்னியர் உள்ஒதுக்கீடு மிகமுக்கிய காரணம் என்று பல அரசியல் விமர்சகர்களும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கூட தேர்தல் தோல்விக்குப்பின் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். எனவே புதிதாக பதவியேற்றுள்ள அரசு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும் என்ற நம்பிக்கையில், வன்னியர் உள்ஒதுக்கீட்டை உனடியாக செயல்படுத்தாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியபின்னரே அமுல்படுத்த வேண்டும் என்றும், வன்னியர் உள்ஒதுக்கீட்டு சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல புள்ளி விபரங்கள் உண்மைமைக்கு மாறானவை, மோசடியானவை என்பதை சுட்டிக்காட்டியும் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதப்பட்டது.

அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கின்ற வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 115 சாதியினரும் ஒன்றிணைந்து “சமூகநீதி கூட்டமைப்பு” என்ற பெயரில் புதிய அமைப்பை துவங்கினர். இக்கூட்டமைப்பு சார்பில் சமுதாய மக்களிடையே இடஒதுக்கீடு குறித்து தொடர்  பிரச்சாம் மேற்கொள்ளவும், போராட்டங்களை ஒருங்கிணைக்கவும்,  அரசிடம் தங்களின் பாதிப்புகளை எடுத்துரைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். இக்கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி முதல்வரிடம் நேரடியாகவும், அலுவலகத்திலும் கடிதம் கொடுக்கப்பட்டது.

அதேவேளையில் பாமக சார்பில் வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்தக்கோரி பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தியதோடு, மருத்துவர் இராமதாஸ் எழுதிய கடிதத்தையும் முதல்வரிடம் கொடுத்தனர். மேலும் வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்து பாமக உறுப்பினர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய நேரத்தில் பதிலளித்துப்பேசிய முதல்வர் இதுகுறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற உள்ஒதுக்கீட்டிற்கு ஆதரவான பதிலையே அளித்தார். ஆனால் அதே சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய முதல்வர் திமுக என்ற பலம்பொருந்திய யானை என்றும் அது சமூகநீதி, பெண்ணுரிமை, சுயமரியாதை, பகுத்தறிவு என்ற நான்கு கால்களால் வலுவாக காலூன்றியுள்ளதாகவும், எனவே திமுக-வை யாராலும், எந்தக்கொம்பனாலும் அசைக்கமுடியாது என்று பேசினார். தமிழக முதல்வரின் இந்தப்பேச்சு சமூகநீதி கூட்டமைப்பில் உள்ள 115 சாதிகளுக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

அரசின் மீதான நம்பிக்கையும், முதல்வர் பேச்சிலான மகிழ்ச்சியும் நீண்டநாள் நீடிக்கவில்லை. சமீபத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்து எந்த தகவலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி மருத்துவர் இராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டவர், உள்ஒதுக்கீடு சட்டம் நடைமுறைப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் தமிழக அரசை எச்சரித்திருந்தார். தமிழக முதல்வரும் இந்த அறிக்கைக்காகவே காத்திருந்ததுபோல், மருத்துவரின் அறிக்கை வெளியான ஒருசில மணிநேரங்களில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.  

தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி பலமுனைகளில் சமூகநீதி கூட்டமைப்பினர் முயற்சித்து வந்தபொழுதும், அதற்கு கொஞ்சம்கூட செவிசாய்க்காமல், எடப்பாடி பழனிச்சாமி அரசு எப்படி  யாரையும் கலந்தாலோசிக்காமல், புள்ளிவிபரங்களோ, போதிய தரவுகளோ இன்றி அவசர அவசரமாக சட்டமியற்றியதோ அதேவழியில் இன்றைய தமிழக முதல்வரும் தான் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக, சமூகநீதியே தன் கட்சியின் பலமான அஸ்திவாரம் என்று சொன்னதிற்கும் மாறாக, 115 சமூகங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை, அவர்களின் அபலக்குரலைக்கூட காதுகொடுத்துக்கேட்காமல் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் கட்சியின் அடிப்படைக்கொள்கைகளைத்தாண்டி வாக்கு வங்கி அரசியலே முக்கியம் என்பதை ஆளும் கட்சியும் முடிவெடுத்துவிட்டது போல் தெரிகிறது. இனியும் கழகங்கள் நம்மைக்காக்கும் என்ற மூடநம்பிக்கைகளை விட்டொழித்து,  நம் இனத்தின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் அரசியல் கட்சிகள் பாதுகாக்காது என்பதை புரிந்துகொண்டு, சமுதாய மக்களும், அமைப்புகளும் பகுத்தறிவோடு சிந்தித்து, நேச சக்திகளோடும்,சமுதாயங்களோடும் ஒன்றிணைந்து நமக்கான உரிமைகளை வென்றெடுத்து, வருங்கால சந்ததியினர் அடிமைகளாய் பிறக்காமல் இருப்பதற்கு அமைப்பாய் திரள்வது காலத்தின் கட்டளை.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved