🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு தடையில்லையா? - நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு சம்பவங்கள்!

உண்மையில் நடந்தது என்ன?

வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கிடும் 08/2021 சட்டத்தை கல்வி, வேலைவாய்ப்புகளில் அமுல்படுத்த தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டது. சமூகநீதியை அடிப்படைக்கொள்கையாக கொண்டுள்ளதாக கூறிவரும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான புதிய அரசு, 115 சமுதாயங்கள் கடுமையாக எதிர்த்துவரும் இச்சட்டத்தை அமல்படுத்துவதில் அனைத்து அம்சங்களையும் சீர்தூக்கிப்பார்த்து செயல்படும் என்றே அனைவரின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில், எடப்பாடி அரசால் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டுவரப்பட்டதே இச்சட்டம் என்று அன்றைக்கு திமுக-வால் விமர்சிக்கப்பட்டதை மறந்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. 

இச்சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் பல வழக்குகள் நிலுவையில் இருந்துவரும் நிலையில், அரசு வெளியிட்டுள்ள இந்த தற்பொழுது அரசாணையால் விளிம்புநிலை சமூகங்கள் பாதிக்கப்படும் என்றும் எனவே இந்தவழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மீனவர் சமுதாயத்தைச்சேர்ந்த பெண்வழக்கறிஞர்.பி.ரஜினி முறையிட்டார். (அரசாணைக்கு தடைவிதிக்கக்கோரி தனியாக மனுவைத் தாக்கல் செய்தோ அல்லது ஏற்கனவே நிலுவையிலுள்ள இந்த வழக்கு விசாரணையின் பொழுதோ இந்த விசாரணை நடைபெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நீதிமன்ற வார்த்தைகளில் "மென்சன்" செய்தார் வழக்கறிஞர் ரஜினி).

உடனே அங்கிருந்த அரசு வழக்கறிஞரிடம் அரசாணை ஏதும் தமிழகஅரசு வெளியிட்டுள்ளதா? வழக்குகள் நிலுவையில் இருக்கும்பொழுது அரசாணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்று வினா எழுப்பினார் தலைமை நீதிபதி. சுதாகரித்துக்கொண்ட அரசு வழக்கறிஞர் அரசாணை வெளியிட்டது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிப்பதாக கூறினார். அப்பொழுது குறுக்கிட்ட மற்றொரு நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி, இச்செய்திதான் எல்லாநாளிதல்களிலும்  வந்துள்ளதே என குறிப்பிட்டார். இது குறித்து பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கமளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு உத்தரவிட்டார் தலைமை நீதிபதி.

பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இச்சட்டத்திற்கெதிராக சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கலாகி உள்ளதாகவும், அவ்வழக்குகளில் அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டதின் பேரில் பதில்கள் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீட்டு அரசாணை ஏப்ரல் மாதமே வெளியிட்டு விட்டதாகவும்,  அதன் தொடர்ச்சியாகவே இந்த அரசாணை வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.  கூடுதலாக இச்சட்டத்திற்கு தடைகோரும் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாகவும் உண்மைக்கு புறம்பான செய்தியையும் நீதிமன்றத்தில் குறுப்பிட்டார். அப்பொழுது மனுதாரர் தரப்பில் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை என்றும் உயர்நீதி மன்றம் இதைமுதலில் விசாரிக்கட்டும் என்று தெரிவித்துள்ளது என்று மறுப்பு தெரிவித்தார். (மேலும் பாதிக்கப்பட்ட 115 சமூக மக்களின் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இச்சட்டத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டது, இந்த எளிய மக்களின் குரல் அரசின் காதுகளுக்கு சென்று சேரவில்லை என்பதை காட்டுகிறது). இறுதி கட்டத்தில் மேற்கொண்டு அமுல்படுத்த ஏன் தடைவிதிக்கக்கூடாது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். தடைவிதிக்கும் சூழல் உருவான நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் குறுக்கிட்டு சுழற்சி முறையிலான ஒதுக்கீட்டுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாருக்கும் பாதிப்பில்லை என்று வாதிட்டார். தலைமை வழக்கறிஞரின் பிடிவாதமான போக்கால் வழக்கு விசாரணையை ஆகஸ்டு இரண்டாவது வாரத்திற்கு வழக்கை தள்ளிவைத்து தலைமைநீதிபதி உத்தரவிட்டார். 

மேலும்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்ற காரணத்தால் தொடர்ந்து விசாரணையை நடத்தாமல், அரசாணைக்கு தடைகோரும் மனுவை தனியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டார். ஏற்கனவே நிலுவையில் வழக்கை சுட்டிக்காட்டி முறையிடாமல், அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக மனு தாக்கல் செய்து விசாரிக்கப்பட்டிருந்தால் விசாரணையின் போக்கு  மாறியிருக்கக்கூடும். ஆதலால் உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது என்பது போன்ற மாயத்தோற்றத்தை ஊடகங்கள் மூலம் பரப்பி, பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரீதியாக சமாதானம் செய்யும் முயற்சியை முறியடித்து, மனம் தளராமல், நம்பிக்கையோடும், உறுதியோடும் தொடர்ந்து போராடி, நம் குழந்தைகளுக்கான உரிமையை வென்றெடுக்க தயாராவோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved