🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீட்டில் தமிழக அரசின் துரோகம்! சென்னை சங்கத்தின் தன்னிச்சையான செயல்பாடு!- திரு.மாரையா கடும் தாக்கு.

இடஒதுக்கீட்டில் தமிழக அரசு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது குறித்தும், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைத்துச்செல்ல முயற்சிகளை மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்படுவது குறித்தும் இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜன சங்கம் நிறுவன தலைவர் திரு.மாரையா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


இராஜகம்பள சமுதாயப்பெருமக்களே!வணக்கம். 

தேசிய பெருந்தலைவர் திரு.காமராஜ் அவர்கள் அ.தி.மு.க, திமுக இவர்களை குறிப்பிடும்போது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று குறிப்பிட்டார். அது தற்சமயம் உறுதியாகிவிட்டது. இட ஒதுக்கீட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி தவறிழைத்தார்,என்ற காரணத்தினால் பிற்படுத்தப்பட்ட மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நாங்கள் ஆட்சி அமைத்தால் மக்கள் போராட வேண்டியதில்லை, கோரிக்கை வைத்தாலே நிறைவேற்றி விடுவோம் என்று கூறினார். மக்கள் அதை நம்பினார்கள். வாக்களித்தார்கள். ஆனால், அவர் முதல்வராக வந்தவுடன் அதிகாரிகள் ஆலோசனையை கேட்டு மக்களுக்கு எதிரான அரசாணை வெளியிட்டு தேர்தல் வாக்குறுதியை வழக்கம்போல் காற்றில் பறக்க விட்டார். 

இதை நாம் எப்படி எதிர்கொள்வது? தொட்டிய நாயகர்களை பாதித்துள்ள இந்த அரசாணையை, எதிர்ப்பது என்பது சுலபமான காரியமல்ல. சென்னை இராஜகம்பள சமுதாய நலச் சங்கம் கடந்த இரண்டு வருடங்களாக இந்த இட ஒதுக்கீடு குறித்து ஜூம் மீட்டிங் நடத்தியும் வாட்ஸப்பில் செய்தி வெளியிட்டும் போராடி வருகிறார்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் நடப்பதாலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிலைமை மாறும் என்பதாலும், நாம் அமைதி காத்தோம். ஆனால், இன்று நாமும் போராட்ட களத்தில் குதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். 

இராஜகம்பள சமுதாய நலச் சங்கத்தின் பொருளாளர் திரு.இராமராஜ் அவர்களுடன் தொடர்பு கொண்டு தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் உள்ள சங்கத்தார்கள் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றனர் என்றும், அணிசேர வேண்டும் என்றும் செய்தியை வெளியிட்டுள்ளீர்கள். அனைத்து சங்கத் தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒற்றுமை ஏற்படுவதற்கான கூட்டத்தை மதுரையிலோ சென்னையிலோ கூட்டுங்கள். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவோம் என்றேன். நாங்கள் கலந்துகொண்டு இரவில் பேசுகிறேன் என்றார்.இதுவரையிலும் தகவல் இல்லை. 

அதற்கு மாறாக உண்ணாவிரதம் நடத்த போகிறோம் என சென்னை ராஜகம்பள சமுதாய நல சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இது தனிப்பட்ட இயக்க நடவடிக்கைகளைத்தான் காட்டுகிறது. தொட்டிய நாயக்கர் சமுதாயதத்தில் ஒற்றுமை இல்லை. குழுக்களாக சேர்ந்து செயல்படத் தெரியவில்லை என மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளாதாக, செய்தி வந்துள்ளது. வளர்ச்சியடைந்த BC இனத்தைச் சேர்ந்த கவரா, பலிஜா, நாடார் போன்றவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக அழைக்கப்படும் இசை வெள்ளாளர், மறவர்கள், ஆப்பநாட்டு மறவர்கள் போன்றவர்களும் திரளாக கலந்து கொள்ளவில்லை என்பதை அந்தப் பத்திரிகையாளர் புரிந்துகொள்ளவேண்டும். 115 சாதிகளைக் கொண்ட அழைப்பில் 7, 8 சாதிகள்தான் கலந்துள்ளனர். மீதி சாதிகள் கலந்து கொள்ளவில்லை என்பதை பத்திரிக்கையாளர் புரிந்துகொள்ளவேண்டும். தொட்டிய நாயக்கர்கள் மட்டும் ஒற்றுமையாக இல்லை என்பது உண்மையாகாது.

தோழர் தியாகு உரையில்,பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும்,சென்னை இராஜகம்பள சமுதாய நலச் சங்கம் வெளியிட்டுள்ளது. உண்மை. ஒன்று படுவதற்கான முயற்சிகளை எடுத்து, தொட்டிய நாயக்கர் அமைப்புகளை ஒன்று படுத்தும் முயற்சியில் சென்னை இராஜகம்பள சமுதாய நலச் சங்கம் முன்வரவேண்டும். முயற்சி எடுத்து பலன் அளிக்காவிட்டால் தனித்தனி இயக்கங்களாக போராடலாம். இது என் பணிவான எண்ணம். சென்னை ராஜகம்பள சமுதாய நலச் சங்கம், சமுதாய அமைப்பாளர்களை ஒன்று படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.


மா.மாரைய்யா, MA, BL,
தலைவர், இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜன சங்கம், மதுரை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved