🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்

பாஞ்சாலங்குறிச்சி பாளையம் பல நூற்றாண்டு வரலாற்று பெருமை கொண்டது. அதில் 18ம் நூற்றாண்டில்  வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரா்களின் போரை பற்றியும், அவர்களை பற்றி அறிந்திராத தகவல்கள் மட்டுமே இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. விரிவான வரலாற்றை “கம்பிளி பேரரசு முதல் கட்டபொம்மன் வரை” என்ற தொடரில் காண்போம்…


வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று குறிப்பு:

21−3−1757 திங்கட்கிழமைபங்குனி மாதம் 11ம் தேதி சகவருடம் 1678கலியுகம் ஶ்ரீதத்து 4857ம் வருடத்தில் ரேவதி நட்சத்திரம் யுகாதி திருநாளில் ரகு வீரபாண்டிய கட்டபொம்மன்−அம்மாளம்மாள் பேரனும், பால்பாண்டிய கட்டபொம்மன்−துரைகண்ணம்மாள் மகனுமான திக்விஜய ஜெகவீர கட்டபொம்மனுக்கும் (லேட்) ஜெயலான் சிவத்தைசாமிநாயக்கர்−வெள்ளையம்மாள் மகளும், காடல்குடி கெடுவெட்டூர் நாயக்கர்−(சிக்கம்மாள்) தங்கையுமான ஆறுமுகத்தாயம்மாளுக்கும் பாஞ்சாலங்குறிச்சியில் கர்நாடக நாவப் சிராஜ்−தெளலத்−முகமது அலிகானின் பிரதிநிதி தாத்தாரப்ப முதலியார் அவா்கள் தலைமையில் திருமணம் நடந்தது.

இத் தம்பதிகளுக்கு 03−01−1760 வியாழக்கிழமை 22−மார்கழி மாதம் சகவருடம் 1681ல் ஶ்ரீ பிரமதி 4860 கலியுக வருடம் புனர்பூச நட்சத்திரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். இவருடன்  ஊமைதுரை, சிவத்தையா, ஈஸ்வரவடிவு, துரைகண்ணு ஆகியோர் சகோதர சகோதரிகள்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் முதல் போர்களம்:

1767 ல் பாஞ்சாலங்குறிச்சிக்கு மேஜர் பிளிண்ட் கேம்பல் என்பான் படையெடுத்து வந்தான். அந்த போரில் வெள்ளைதளபதிகள் பலர் கொல்லப்பட்டாலும், கட்டபொம்மனின் உறவினர்கள் 800பேர் கொல்லப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சியார் தோல்வியடைந்தார். தனது 7வது வயதில் தன் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை எண்ணி மனம் வருந்தினார். ஆயுத பயிற்சியை ஆரம்பித்தார்.

தனது 23வது வயதில் முதல் முதலாக போர்களம் செல்கிறார் கட்டபொம்மன். ஹைதர் அலியையும், திப்பு சுல்தானையும் பல போர்முனையில் சந்தித்த, 1781ல் அவர்களை தோல்வியடைய செய்த, கர்னல் வில்லியம் புல்லர்டான் என்பான் 1783ல் படையெடுத்து வருகிறான்.

இச்சமயம் திக்விஜயகட்டபொம்மன் சொக்கம்பட்டியில் சண்டையிட்டு கொண்டிருக்கிறார். அவர் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைத்து வருகிறான் வெள்ளையன். அந்த சமயத்தில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் போரில் ஈடுபட்டார்.

வெள்ளையருக்கு ஏற்பட்ட இழப்பையும், திக்விஜய ஜெகவீர கட்டபொம்மன் சொக்கம்பட்டியிலிருந்து 8000வீரர்களுடன் வந்ததையும், புல்லட்டான் என்பான் இந்தியா மீது பிரிட்டிஷாரின் ஆர்வம்−ஒரு சிறப்பு பார்வை என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மேலும் கஜானாவை கொள்ளையிட்ட வெள்ளையன் 40ஆயிரம் வராகன் பணத்தை கொள்ளையடித்து அவர்களது போர் வீரர்களுக்கு பிரித்து கொடுத்திருக்கிறான். புல்லட்டான் என்பான், வீரபாண்டிய கட்டபொம்மனின் தங்கை 3வயது துரைகண்ணுவை கடத்திச்சென்று, பணம் கேட்டு மிரட்டியிருக்கிறான். இதையும் அவனே பதிவு செய்கிறான்.

1798ல் இராமநாதபுரம் ராமலிங்க விலாசப்போர். இதில் லெ.கர்னல் கிளார்க் என்பான் கட்டபொம்மனின் கையால் கொலை செய்யபட்டான் என்று மார்டின்ஸ் என்பவன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகிறான். பின்பு நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில், இராமநாதபுரப் போருக்கு காரணமாக இருந்த W.C. ஜாக்சன் பதவி நீக்கம் செய்யப்படுகிறான். அதன்பின்பும் வரிகெட்டாமல் வெள்ளையர்களுக்கு சாக்குபோக்கு சொல்லி வந்ததால் கோபமடைந்த கலெக்டர் லூசிங்டன் மேலிடத்திற்கு தெரிவிக்கிறான்.

அதன்பின் கர்னல் அலெக்ஸாண்டர் ஜான் பானர்மேன் என்பான் 05-09-1799 அன்று படையெடுத்து வருகிறான். 4 வெள்ளை அதிகாரிகளும், 93சிப்பாய்களும் கொல்லப்படுகிறார்கள். இரண்டு அதிகாரி சிகிச்சை பலனின்றி பாளையங்கோட்டையில் இறந்து விட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பிய கட்டபொம்மனும், அவரது சாகாக்களும் கோலார்பட்டி பாளையத்தில் தஞ்சமடைகிறார்கள். கட்டபொம்மன் கோலார்பட்டியிலிருப்பதை அறிந்த எட்டப்பன், வெள்ளையர்களிடம் தகவல் கொடுத்து டல்லாஸ் தலைமையில் கோலார்பட்டியை முற்றுகையிட்டனர். அதில் எதிரிகளின் முற்றுகையை உடைத்து, அவர்களை சேதப்படுத்தி தப்பிய கட்டபொம்மனும் அவரது சகாக்களும் திருக்களம்பூர் காட்டுக்குள் சென்றுவிட்டனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற எட்டப்பன், அவர்களை பிடிக்க முடியாமல் திரும்பி, நாகலாபுரத்தில் முகாமிட்டிருந்த கலெக்டர் லூசிங்டனிடமும், பானர்மேனிடமும் பொம்மனார் சென்ற இடத்தை காட்டிக் கொடுக்கிறான்.

இதன்பின் புதுக்கோட்டை தொண்டைமானுக்கு வெள்ளையர்கள் கடிதம் எழுதி பிடித்துக்கொடுக்க கட்டளையிடுகிறார்கள். எப்போதுமே வெள்ளையர்களுக்கு விசுவாசியாக இருந்த தொண்டைமான் அவரது தளபதி முத்துவைரவ அம்பலகாரரை அனுப்பி நயவஞ்சகமாக பேசி கைதி செய்கிறார்கள். பின் வெள்ளையர்களுக்கு தகவல் அனுப்பி நடத்தியே கூட்டிவந்து கயத்தாரில் சிறை வைத்தனர். பின்பு அக்டோபர்16ல் விசாரணை என்ற பெயரில் நாடகமாடி தூக்கிலிட்டனர்.

மறுநாள் பானர்மேன் மேலிடத்திற்கு எழுதிய கடிதத்தில், கட்டபொம்மனின் வீரமிக்க கடைசி நிமிடங்களையும், எட்டப்பனையும், சிவகிரியானையும் கோபத்துடன் துச்சமாக பார்த்ததையும், அவர் தூக்குமேடைக்கு திடகாத்திரமாக நடந்து சென்றதையும், செல்லும் வழியில் தன் தம்பியை பற்றி  நினைத்ததையும் குறிப்பிடுகிறான்.

கர்னல் ஜான் பானர்மேனால் நடத்தப்பட்ட போரில் 4 வெள்ளை தளபதிகள் மரணம் அடைந்தனர். இவர்களின் சமாதி ஒட்டப்பிடாரம் நீராவி அருகே உள்ளது. அதுபோல் ஊமைதுரையால் கொல்லப்பட்ட 43 தளபதிகளின் சமாதி கவர்னகிரி போகும் வழியில் உள்ளது.

பாஞ்சாலங்குறிச்சி போர்கள்:

1. 1755ல் ஹெரான் என்பவனால் நடத்தப்பட்டது.

2. 1760ல் மருதநாயகம் படையெடுப்பு

3. 1761ல் பிரீஷ்மேன் என்பவனால் நடத்தப்பட்டது.

4. 1762ல் பிளின்ட் கேம்பல் என்பவனால் நடத்தப்பட்டது.

5. 1776ல் கேப்டன் ஹாப்கின்ஸ் படையெடுப்பு

6. 1781ல் கேப்டன் எடிங்டன் படையெடுப்பு

7. 1781ல் புல்லட்டன் மற்றும் பிளின்ட் என்பவரால் தனி தனியாக இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளது.

8. 1783ல் புல்லட்டனால் பெரிய அளவில் நடத்தப்பட்டது.

9. 1790ல் டச்சிக்காரா்களுக்காக தூத்துக்குடிப் போர்.

10. 1792ல் மேக்ஸ்வெல் படையெடுப்பு.

11. 1798ல் ஜாக்ஷனுடன் ராமநாதபுரப் போர்.

12. 1799ல் ஜான் பானர்மேனால் நடத்தப்பட்டது.

13. 1799ல் கோலர்பட்டியில் டல்லாஸ்யுடனான போர்.

14. 1801ல் மெக்காலேவால் நடத்தப்பட்ட போர்.

15. 1801ல் ஹாசார்டு என்பவரால் நடத்தப்பட்ட காடல்குடிப் போர்.

16. 1801ல் அக்னியூவால் நடத்தப்பட்ட போர்.

17. 1801ல் மானாமதுரைப் போர்.

18. 1801ல் மணப்பாச்சேரிப்போர்.

19. 1801ல் திருக்காட்டூர்ப் போர்

20. 1801ல் சிறுவாயல்ப் போர்.

இது தவிர பாஞ்சைக்கு வெளியே திண்டுக்கல், பிரான்மலை, விருப்பாட்சி, திருமயம் போன்ற இடங்களிலும் நடந்திருக்கிறது.

இவற்றின் கதாநாயகர்கள் பால்பாண்டிய கட்டபொம்மன், திக்விஜயகட்டபொம்மன்,வீரபாண்டிய கட்டபொம்மன், சிவத்தையா, ஊமைதுரை, மற்றும் காடல்குடி குசலவீர கஞ்செய நாயக்கர் ஆவார்கள்.

பெரும்பாலும் நம்மவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி மட்டும் அறிந்திருக்கிறார்கள். இந் நன்னாளில் பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றை மக்களுக்கு எடுத்துச்செல்வோம்…

வாழ்க கட்டபொம்மன் புகழ்!


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved