பொதுவுடமைத் தோட்டத்தில் பூத்த புனித மலர் - இராஜகம்பளத்தாரின் செவ்வணக்கம்!
பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்கள் தனது 101 வயதில் காலமானார். தனது அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்காக அனைத்து அரசியல் கட்சிகளாலும், பொதுமக்களாலும் கொண்டாடித் தீர்க்கப்படும் மனிதரான தோழர் நல்லகண்ணு தான் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்டவர் என்பது விநோதமானது. சமகால அரசியலுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவராக, தன் நூற்றாண்டுகால வாழ்வை தூய பொதுவாழ்விற்கு இலக்கணமாக தோழர் நல்லகண்ணு வாழ்ந்து சென்றுள்ளார்.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான 1925 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி விவசாயத் தம்பதிகளுக்கு 4 சகோதரர்கள், 5 சகோதரிகள் உள்ள ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர் தோழர் நல்லகண்ணு. தான் பிறந்த அதே ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தனது 18 வயதில் இணைத்துக்கொண்டார். அது முதல் பொதுவுடமை இயக்கத்தின் ஒரு அங்கமாக தனது இறுதிகாலம் வரை அர்ப்பணித்துக்கொண்டவர் தோழர் நல்லகண்ணு. மக்களுக்காக முழுநேரம் உழைக்க குடும்பம் தடையாக இருப்பதை உணர்ந்து வீட்டைவிட்டே வெளியேறியவர். பிரிட்டீஷ் ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது . வெடிகுண்டு வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது முகத்தில் இருந்த மீசையை நெறுப்பால் கறுக்கியம் வேரோடு பிடுங்கியும் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார்.
சமகால அரசியலில் நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்த நல்லகண்னுவிற்கு தேர்தல் அரசியலில் மக்கள் தோல்வியையே பரிசாகக் கொடுத்தார்கள். அதிகாரத்தை தான் விரும்பாவிட்டாலும் கட்சியின் கட்டளையை ஏற்று 1967 மற்றும் 1977 சட்டமன்றத் தேர்தல்களில் அம்பாசமுத்திரம் தொகுதியிலும், 1999-இல் கோவை மக்களவைத் தொகுதியில் இன்றைய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடம் தோல்வியைத் தழுவினார். கோவை வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து நடைபெற்ற தேர்தல் என்பதால் மிகுந்த பதற்றம் நிறைந்திருந்த வேளையில் இந்துக்கள் அதிகமிருந்த பகுதியில் பிரச்சாரம் செய்வதற்கான வேனில் கூட்டணிக்கட்சியான முஸ்லீம் லீக் கட்சியின் கொடி இல்லாததைக் கண்ட தோழர் நல்லகண்ணு, கூட்டணிக் கட்சியின் கொடியில்லாமல் சென்றுதான் வாக்கு சேகரித்து தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால் தனக்கு அந்த வெற்றியே தேவையில்லை என்றுக்கூறி முஸ்லீம் லீக் கட்சிக்கொடி கட்டிய பிறகே பிரச்சாரத்திற்கு சென்றார்.
கட்சி தனக்காக வழங்கிய ஒரு கோடி ரூபாயை மீண்டும் கட்சிக்கே வழங்கிய தோழர் நல்லகண்ணு, தமிழக அரசு வழங்கிய 10 லட்சம் பரிசுடன் கூடுதலாக தனது சொந்தப்பணம் ரூ 5000 சேர்த்து ரூ.105000 த்தை முதல்வர் நிவாரண நிதிக்கே திருப்பி வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாழ்க்கைக்கு சிறந்த உதாரணமாக விளங்கிய தோழர் நல்லகண்ணு அவர்கள் மரணத்திற்குப் பின் தனது உடலையும் மருத்துவப் படிப்பு ஆய்வுக்காக ஒப்படைத்துச்சென்றுள்ளார் என்பது அவர் மீதான மதிப்பை மேலும் மேலும் உயர்த்துகிறது.
சமகாலத்தில் வாழ்ந்த ஒப்பாரும் மிக்காருமில்லாத பொதுவுடமைத் தோட்டத்தில் பூத்த புனித மலர் தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கு இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் செவ்வணக்கத்தை காணிக்கையாக்குகிறோம்.

