🔴 LIVE | முப்பெரும் விழா 2023


21-ஆம் நூற்றாண்டின் வீரபாண்டிய கட்டபொம்மனாக வலம்வந்த வீமராஜா காலமானார்!

பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் ஐந்தாம் தலைமுறை வாரிசுதாரர் வி.வி.ஜெ.எஸ். வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை இன்று (3.3.2026) பிற்பகல் 1.45 மணியளவில் காலமானார். அன்னாரின் மறைவுக்கு சமுதாயத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வடஇந்திய நிலப்பரப்பை எளிதாக தங்கள் கைப்பிடிக்குள் கொண்டுவந்த கிழக்கிந்திய கம்பெனியருக்கு தென்னாட்டில் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். 1799-இல் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கடும் நெருக்கடிக்குள்ளாயினர். இதனால் பல்வேறு பகுதிகளுக்கு சிதறுண்டு சென்ற அவரது வாரிசுகள், நீண்டகாலம் தங்களது அடையாளங்களை மறைத்து ஆங்கிலேயர்களின் கண்ணில் படாமல் வாழ்ந்துவந்தனர்.

1974-இல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் பாஞ்சையில் மீண்டும் கோட்டை கட்டி எழுப்பப்பட்டு, மீதமிருந்த கட்டபொம்மன் வாரிசுகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு குடியிருப்பும், நிலங்களும் இலவசமாக வழங்கப்பட்டதோடு, ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. இதனையடுத்து, பாஞ்சாலங்குறிச்சியுள்ள கட்டபொம்மன் நகரில் இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதில் 5-ஆம் தலைமுறை வாரிசாகவும், நாடறிந்தவராகவும் திகழ்ந்தவர் வி.வி.ஜெ.எஸ். வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை முக்கியமானவர்.

21-ஆம் நூற்றாண்டின் வீரபாண்டிய கட்டபொம்மனாக கம்பளத்தார் கிராமம் தோரும் வலம்வந்து, மக்களிடம் தொடர்ந்து கட்டபொம்மனாரை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தவர் வீமராஜா. சமுதாயத்தினர் தாண்டி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவராக வலம் வந்த வீமராஜா, இந்திய முன்னாள் துணைஜனாதிபதி வெங்கைய நாயுடு முதல் இளம் அரசியல் தலைவர் துரை வைகோ வரை அன்பு பாராட்டப்பட்டவர். க.சுப்பு அவர்களின் மறைவுக்குப்பின் கம்பளத்தார் அரசியல் ஆளுமையில் வெற்றிடம் ஏற்பட்டபின் அரசியல், அதிகார வட்டாரங்களில் கம்பளத்தாரின் அடையாளமாகப் பார்க்கப்பட்டவர் வீமராஜா.

சமீப காலம்வரை தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்துவந்த வீமராஜா, வயது மூப்பின் காரணமாக சுற்றுப் பயணங்களைத் தவிர்த்துவிட்டு பாஞ்சாலங்குறிச்சியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர்கூட திருச்செந்தூர் சுப்பிரமணிசுவாமி கோயில் கட்டபொம்மன் மண்டகப்படிக்கு இணை ஆணையாளர் தடை விதித்த நிலையில், தனது முன்னோர்கள் காலந்தொட்டு 500 அண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மண்டகப்படிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உதவுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு வீடியோ பதிவொன்றை அனுப்பியிருந்தார். இதனடிப்படையில், வைகோ அவர்கள் மேற்கொண்ட பெருமுயற்சி காரணமாக தடையை நீக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து மண்டகப்படி வெற்றிகரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனது கடைசி மூச்சிருக்கும் வரை கட்டபொம்மன் வம்சாவளியினரின் பாரிம்பரியத்தைக் காத்த பெருமைக்கு சொந்தக்காரரானார் வீமராஜா.

இந்நிலையில், தனது 87-வது வயதில் உடல்நிலை மற்றும் வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் இருந்துவந்த வீமராஜா அவர்களின் இன்னுயிர் இன்று பிற்பகல் சுமார் 1.45 மணி அளவில் பிரிந்தது. இதனையடுத்து பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது பூத உடல் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில்  வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதிச் சடங்கு நாளை (4.03.2026 ) மாலை 4 மணி அளவில் நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். மறைந்த வீமராஜா அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்களும், முக்கியப் பிரமுகர்களும் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தவண்ணமுள்ளனர்.

தனது இறுதிகாலம் வரை கட்டபொம்மனாரின் அடையாளமாக நாடெங்கும் சுற்றிச்சுழன்று அவரது புகழைப் பரப்பி வந்த வீமராஜா அவர்களின் மறைவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, த.வீ.க.ப.கழக பொதுச்செயலாளர் க.இராமகிருஷ்ணன், சமூகநீதிக்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பெ.இராஜராஜ் , கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved