🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் தொட்டிய நாயக்கர் சமூகம்! - காரணம் என்ன?

சமீபத்தில் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 ,9 தேதிகளில் நடைபெறவுள்ளது.  அதில் திருநெல்வேலியில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டமும் ஒன்று. அம்மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பனேரி ஊராட்சிக்குட்பட்ட வலசை கிராம மக்கள் அங்குள்ள ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டு வந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து வந்தனர்.  தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள் வாழ்ந்துவரும் இக்கிராமத்தில் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிதான் வாக்குச்சாவடி மையமாக செயல்பட்டு வருகிறது.  

இதற்கிடையே அதே கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளிக்கு  வாக்குச்சாவடியை அதிகாரிகள் மாற்றியுள்ளனர். ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு கனரக வாகனங்கள் எளிதில் செல்லமுடியும் என்பதோடு கழிவறைகளும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மையத்திற்கு வாக்குப்பெட்டிகளை எடுக்க செல்லும் வாகனம்கூட எளிதில் செல்லமுடியாதபடி நெருக்கமான சாலை என்பதோடு, அடிப்படை கட்டமைப்பும் இல்லாதது. அப்படியிருந்தும் அதிகாரிகள் வாக்குச்சாவடி மையத்தை மாற்றியதற்கு ஏதாவது சதி இருக்கும் என்று பிற சமுதாய மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்புதிய வாக்குச்சாவடிக்கு செல்லும் பாதை ஒருகுறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் இடத்தின் வழியாக செல்வதால், ஏற்கனவே அச்சமுதாய மக்களுடன் வேறொரு சமுதாயத்தினருக்கு பிரச்சினை இருப்பதால், இது மீண்டும் சாதிய மோதலுக்கு வழிவகுக்கும் என்று தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். 

வாக்குச்சாவடி மையத்தை மாற்றுவதற்கு ஆரம்பகாலம் தொட்டே எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள கம்பளத்தார்கள்,  மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. அதிகாரிகள் தங்கள் கோரிக்கைக்கு செவி மடுக்க மறுப்பதால் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து அக்கிராமத்தில் பேனர் மற்றும் இல்லம்தோறும் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.

வரும் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்வுள்ள நிலையில் தேர்தலைப்புறக்கணிக்கும் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தக்கூட மாவட்ட நிர்வாகம் முன்வராதது ஜனநாயக விரோதமானது என்பதோடு தங்களுக்கு எதிரான சதியின் பின்னனியில் குறிப்பிட்ட ஒருசில அதிகாரிகளே உடந்தையாக இருப்பாட்களோ என்ற அச்சம் ஏற்படுவதாக அக்கிராமவாசி ஒருவர் தெரிவிக்கின்றார்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த கம்பளத்து உறவுகளை நேற்று (20.09.2021) சந்தித்து ஆதரவு தெரிவித்தார் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன். அவருடன் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி மற்றும் பலர் சென்றிருந்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved