🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி போர்க்களத்தில் சமர்புரியும் கம்பளத்து பெரியார் மு.பழனிச்சாமி.

திரு.M.பழனிச்சாமி அவர்கள் 18.09.1954-இல் திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் நாகப்பமுதலிப்புதூர் கிராமத்தில் திரு.முத்துசாமி – திருமதி.பழனியம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுர் கந்தசாமி கவுண்டர் கல்லூரியில் இளங்கலை பட்டமும், கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.சரஸ்வதி M.A., B.Ed., என்ற மனைவியும், P.விக்னேஷ் M.E., Ph.D என்ற மகனும் உள்ளனர்.


திரு.பழனிச்சாமி அவர்கள் தனது முதுகலை ஆசிரியர்பணியை திருச்சி மாவட்டம்  துவரங்குறிச்சி அரசு மேநிலைப்பள்ளியில் தொடங்கியவர், பணி மாறுதல் பெற்று  நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 16 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றினார். இதன் பிறகு பதவி உயர்வு பெற்று   திம்மநாயக்கன் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றினார். பின்னர் நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உவியாளராக (மேல்நிலைக்கல்வி - PA to CEO) பணியாற்றி 2013-ஆம் ஆண்டில்பணி ஒய்வு பெற்றார்.  

பணி ஓய்விற்குப்பின் சமுதாயப்பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட திரு.பழனிச்சாமி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள சமுதாய மூத்த முன்னோடிகளை ஒன்றிணைத்து 2015-இல் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளையை நிறுவி சிறப்பாக நடத்தி வருகிறார். இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் முழுநேர சமுதாய சேவையில் ஈடுபட்டு வரும் ஒரே அறக்கட்டளை இவரது தலைமையில் இயங்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரம் உறுப்பினர்களை அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர்களாக்கும் முனைப்பில், அம்மாவட்டத்திலுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து,  இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்களை அறக்கட்டளை உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். முதற்கட்டமாக நாமக்கல் நகரில் அறக்கட்டளையின் அலுவலகம் தொடங்கி, முழுநேர ஊழியரை பணியமர்த்தி திருமண தகவல், சாதி சான்றிதல் மற்றும் சமுதாய பிரச்சினைகளில் உதவி வருகின்றனர். மேலும், இந்த அறக்கட்டளை உறுப்பினர்களில் சிலர் கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் போன்று முழுநேர ஊழியர்கள் போன்று செயலாற்றி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் எந்த பிரச்சினை என்றாலும் அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் குறைந்தபட்சம் 20 தன்னார்வமுள்ள தலைவர்கள் ஒன்றுகூடும் வலுவான அறக்கட்டளையாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குறியது.


திரு.பழனிச்சாமி அவர்களின் அனுபவத்தையும், கடின உழைப்பையும் சமுதாயத்திற்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என விரும்பும் நாமக்கல் சமுதாய மக்கள், தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளைக்கு நன்கொடையை வாரி வழங்குவதுடன், அதன் முன்னெடுப்புகளிலும் பங்கேற்று ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து அறக்கட்டளை உறுப்பினர் சேர்க்கை மூலம் திரட்டப்பட்ட நிதியைக்கொண்டு நகரின் மையப்பகுதியில் சுமார் ஐம்பது லட்சம் மதிப்பில்  ஒரு கிரவுண்ட் வாங்கப்பட்டு, தற்போது 6000 சதுரடியில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது இந்த மாவட்டத்தில் சமுதாய மக்களிடையேயுள்ள ஒற்றுமையையும், வளர்ச்சியில் உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது என்றால் மிகையல்ல. மேலும் அறக்கட்டளை தொடங்கப்பட்ட நாள் முதல் பலதரப்பட்ட கிராம மக்களை இணைக்கும்  பாலமாக அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த முடிந்துள்ளது. எந்த பிரச்சினையையும் கூட்டாக எதிர்கொண்டு வருவதால் நாமக்கல் மாவட்டத்தில் கம்பளத்தாரின் வலிமை ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடித்தளமாக தொட்டிய நாயக்கர் அறக்கட்டளையை மிகுந்த வெளிப்படைத்தன்மையோடும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தும், அனைத்து தரப்பு கருத்துக்களையும் உள்வாங்கி செயல்படும் அறக்கட்டளை தலைவரின் பங்களிப்பு மகத்தானது. 


சமுதாய முன்னேற்றத்தில் அறக்கட்டளை அக்கறையோடு செயல்பட்டு வரும் அதேவேளையில், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் வன்னியர் இடஒதுக்கீடு மற்றும் DNT/OBC போன்ற பிரச்சினைகளில் தனிப்பட்ட முயற்சியில் பல சங்கங்களையும், சமூகங்களையும் ஒன்றிணைப்பதற்கு திரு.பழனிச்சாமி அவர்கள் அரும்பங்காற்றியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் பறிக்கப்பட்ட இடஒதுக்கீடு உரிமையை மீட்டெடுக்க உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற படிக்கட்டுகளில் போராடி  வெற்றிவாகை சூடுவதற்கு பின்னனியில் இருந்து செயல்பட்டவர்களில் முதன்மையானவர் திரு,பழனிச்சாமி. சீர்மரபினர் நலச்சங்கம், சமூகநீதி கூட்டமைப்பு, அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ஒருங்கிணைப்புக்குழு என பல்வேறு அமைப்புகள் மூலம் நாட்டிலுள்ள பல சமுதாயங்களை ஒன்றிணைத்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஓபிசி இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளை கையிலெடுத்து போராடி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக 2020-21 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி. சமுதாய மக்களை தனியாக அடையாளம் காணும் வகையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், போராட்டங்கள் மூலமும், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை நேரில் சந்தித்து மனு அளித்தும், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்தும் அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணி ஓய்வு பெற்ற பின் சுய விளம்பரத்திற்கோ, சமூகத்தில் அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ளவோ பெரியளவில் அறக்கட்டளையை நடத்தாமல், எழுபது வயது கடந்தும், இருதய அறுவை சிகிச்சைக்குப்பின்பும் வருங்கால  தலைமுறையினரின் கல்வி, வேலைவாய்ப்புகளில் சட்டப்படியான உரிமையை நிலைநிறுத்தும் வகையில் அயராது சமுதாயப்பணியாற்றி வருகிறார் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. 


நாமக்கல் மண்ணின் சிறப்பம்சம், பல்துறைகளில் கோலேச்சிய மிகப்பெரிய ஆளுமைகளை சமுதாயத்திற்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறையில் தலைமைப்பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற அமரர். திரு.நல்லப்பன், காவல்துறையில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி, பணி ஓய்விற்குப்பின் அறக்கட்டளையின் பொதுச்செயலாளராக இருந்த அமரர் திரு.ரங்கசாமி, ஏழுமலையான் கோழிப்பண்ணை அதிபர் அமரர்.திரு.முத்து நாயக்கர், தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து மறைந்த திரு.சக்திவேல், அன்று முதல் இன்று வரை சமுதாயப்பணியாற்றிக் கொண்டிருக்கும்  திரு.நாகப்பன்.Ex.B.D.O, திரு.துரைச்சாமி, திரு.சின்னுசாமி H.M, திரு.மணி. Ex.VAO, திரு.சரவணன், திரு.டிரைவர்.பாலு, திரு.ஈஸ்வரன், பொம்மக்குட்டைமேடு திரு.தங்கராசு, சாலப்பாளையம் திரு. தங்ராசு, திரு.வெங்கடாசலம், மூத்த வழக்கறிஞர் திரு.பழனிசாமி, திரு.சதீஷ்,புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் திரு.அசோகன், தொழில்துறையில் கோலோச்சும்  திரு. அன்னை தங்கவேல், ராஜேஷ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் திரு.மாதையன், திரு.துரைச்சாமி, திருப்பூர் திரு.பாலு, திரு.தேவராசு,  மும்பை திரு. சிவக்குமார் என பல ஜாம்பவான்களை சமுதாயத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்  வெளிநாடுகளிலும், ஐடி உள்ளிட்ட நிறுவனங்களிலும் முத்திரை பதித்து வருகின்றனர். சமுதாயத்தில் மிக அதிக வழக்கறிஞர்களையும், பட்டதாரிகளையும் கொண்ட மாவட்டம்  என்பதும் கூடுதல் சிறப்பம்சம். முத்தாய்ப்பாக சமுதாயத்தின் முதல் அரசியல் இயக்கமாக விடுதலைக்களம் அமைப்பை வழங்கியதும் இந்த மண்ணிற்குரிய பெருமை.  பல தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள நாமக்கல் மண்ணில் திரு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் இயங்கும் அறக்கட்டளை நாடு முழுவதுமுள்ள கம்பளத்தாருக்கு ஒரு கலங்கரை விலக்கமாக திகழும் என்பதில் ஐயமேதுமில்லை.

மாபெரும் சமூகநீதிப்போராளியாய் தமிழக மண்ணில் வளம் வந்த தந்தைப்பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-க்கு அடுத்த நாளில் கம்ப்ளத்தார் குலத்தில் பிறந்த பெரியாராக சமூக நீதிக்களத்தில்  சமுதாயத்திற்கு தனித்துவத்தையும், புதியபாதையையும் அமைத்துக்கொடுக்க அயராது பாடுபட்டு வரும் திரு.பழனிச்சாமி அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து சீரிய முறையில் சமுதாயப்பணியாற்றிட வேண்டுமாய் அன்புடன் வாழ்த்துகிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved