வாக்குறுதியை நிறைவேற்றினால் ஓட்டு இல்லையேல் வேட்டு - அமைச்சரிடம் நிர்வாகிகள் கறார்!
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட தெலுங்கு சமுதாய அமைப்புகள் சந்தித்து முதலமைச்சர் அளித்த வாக்குறுதிப்படி DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்கக்கோரி மனு அளித்தனர். இது சம்மந்தமாக தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நேற்று (26.02.2024) தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தொட்டிய நாயக்கர், ரெட்டியார், கம்மவார், கவரா, பலிஜா உள்ளிட்ட தெலுங்கு அமைப்புகள் தலைநகர் சென்னையில் மாண்புமிகு நகராட்சி துறை அமைச்சர் K.N.நேரு மற்றும் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரைச் சந்தித்து தமிழக முதல்வர் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது ஆலங்குளம் பிரச்சாரக்கூட்டத்தில் அளித்த வாக்குறுதிப்படி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் சாதிகளுக்கு DNT ஒற்றைச் சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி மனு அளித்துள்ளோம்.
மனுவைப்பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம், டிஎன்டி சாதிச்சான்றிதழ் விவகாரத்தில் முதல்வரின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-வை ஆதரிப்போம் என்பதை தெளிவுபடுத்தினோம். உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அமைச்சரான இராஜகண்ணப்பன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் கே.என்.நேரு, டிஎன்டி மக்களின் கோரிக்கையைப் பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றித்தருமாறும், இதுசம்மந்தமாக சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகளை தங்களை நேரில் சந்திக்க அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் துரதிஷ்டவசமாக, நேற்று அமைச்சர் இராஜகண்ணப்பன் சென்னையில் இல்லாத காரணத்தால் சமுதாயத் தலைவர்களால் நேரில் சந்திக்க இயலவில்லை.
அமைச்சர்களுடனான சந்திப்பின்போது தொட்டியநாயக்கர் சமூகம் சார்பாக சீர்மரபினர்நலச்சங்க செயல் தலைவர் P.ராமராஜ், தெலுங்கு பெடரேஷன் வேங்கட விஜயன், திருச்சி நாரயணன், சீர்மபினர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி , மூத்த வழக்கறிஞர் பி.பழனிச்சாமி, தொட்டியநாயக்கர் சமுதாய அறக்கட்டளை பொறுப்பாளர்கள் B.மணி Ex.VAO, மு.சரவணன், ஜெயா (மனோகர்), சின்னுசாமி மற்றும் தங்கவேல், ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.