இலக்கிய தென்றல் பழனி. திரு. AMR (எ) A.M.R.துரைசாமி.
திரு.AMR (எ) A.M.R.துரைசாமி அவர்கள் 04.01.1942-இல் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பட்டண நாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.இராமசாமி – திருமதி.முத்துவேல் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர், பின் முதுகலை பட்டமும், கல்வியியலில் முகலைப்பட்டமும் பெற்றார். இவருக்கு திருமணமாகி திருமதி.D.முத்துலட்சுமி என்ற மனவியும், D.கலைச்செல்வி, D.தமிழ்ச்செல்வி என இரு மகள்களும் உள்ளனர்.
கல்லூரிப்படிப்பிற்குப் பின் 1965-இல் பழனி ஐ.டி.ஓ. மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கிய திரு.துரைசாமி அவர்கள், அதேபள்ளியில் ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் 35-ஆண்டுகாலம் பணியாற்றி 2000-ஆவது ஆண்டில் ஓய்வு பெற்றார். 1995-96 ஆம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற திரு.துரைசாமி அவர்களிடம் பயின்ற மாணவர்கள் பலர் மருத்துவர்களாக, பொறியாளர்களாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பணியாற்றுகின்றனர். அதேபோல் தொழிலதிபர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, புகழ்பெற்ற வழக்குரைஞர்களாக, சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களாக, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழின் மீது தீராத காதல்கொண்ட திரு.துரைசாமி அவர்கள் தந்தை பெரியாரின் திராவிட இயக்க சிந்தனைகளில் கவரப்பட்டவர், பேறரிஞர் அண்ணா, கலைஞர்.மு.கருணாநிதி போன்ற திராவிட இயக்க தலைவர்களின் மேடைத்தமிழில் அதிக ஈடுபாடு கொண்டவர், மாணவப்பருவம் தொடங்கி இன்றுவரை இலக்கிய கூட்டங்கள், சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். மேலும் "தொட்டிய நாயக்கர் முரசு" மாத இதழின் இணையாசிரியராகவும் உள்ள திரு.ஏ.எம்.ஆர் அவர்கள், சிறுகவிதைகளை அவ்வப்பொழுது எழுதி வெளியிட்டு வருகிறார். இதுவரை பலநூறு கவிதைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விடுதலைக்களம் மாநாடுகளில் சிறப்புபேச்சாளராக உரையாற்றி வருகிறார்.
ஆசிரியப்பணிகளுக்கிடையே சமுதாயப்பணியிலும் அக்கறையுடைய திரு.துரைசாமி அவர்கள், இராஜகம்பள மகாஜனசங்கத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இராஜகம்பள மகாஜனசங்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்திய மாநாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும், முன்னாள் தலைவர். திரு.ஜெயராஜ் அவர்களுடன் இணைந்து பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான திரு.துரைசாமி அவர்களின், பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் பல்வேறு கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து கொடியேற்றி, கூட்டங்களை ஏற்பாடு செய்து உரையாற்றியுள்ளார். தொடர்ந்து கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடி வருபவர், 2014-ஆம் ஆண்டு முதல் விடுதலைக்களம் அமைப்புடன் இணைந்து விருப்பாச்சி கோபால் நாயக்கர் நினைவு நாளான நவம்பர்-21 ஆம் தேதியன்று, விருப்பாச்சியிலுள்ள அவரின் மணிமண்டபத்தில் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து, பல்வேறு சமுதாய தலைவர்களை அழைத்துவந்து புகழஞ்சலி செலுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எண்பதுகளை எட்டும் முதுபெரும் சமுதாயத் தலைவரான திரு.துரைசாமி அவர்கள், சமூகவலைதளங்களில் அதிக ஆர்வத்துடன் இளைஞரைப்போல சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். கவிதைகளையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் தொடர்ந்து பதிந்து வரும் திரு.துரைசாமி அவர்கள் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து சமுதாயத்திற்கு வழிகாட்டிட வேண்டும் என்று அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.