🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தேனி தந்த கலங்கரை விளக்கமே!!! - திரு.P.இராமராஜ்...

திரு.P.ராமராஜ் அவர்கள் 23.02.1959-இல் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, கோடி பொம்மி நாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.பெருமாள்சாமி நாயக்கர் – திருமதி.ஜக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். விருதுநகரிலுள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப்படிப்பில் சேர்ந்தவர், கட்டிடவியல் துறையில் (DCE) 1978 ஆம் ஆண்டில் மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர். அதன்பின் கோல்கத்தாவிலுள்ள Institution of Engineers-இல் AMIE (Civil) பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி திருமதி. R.ஜெயந்தி என்ற மனைவியும், R.லாவண்யா B.E., R.திவ்யா B.E., என்ற மகள்களும்,  R.கௌதம் B.Tech., என்ற மகனும் உள்ளனர்.


1978-இல் மத்திய அரசின் நேரடி தேர்வு மூலம் ஜூனியர் இன்ஜினியராக தேர்வு செய்யப்பட்டவர், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1983-ஆம் ஆண்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று உதவி பொறியாளராக பாண்டிச்சேரியில் ஆறு வருடங்கள் பணியாற்றிய திரு.இராமராஜ் அவர்கள், பாண்டிச்சேரி விளையாட்டு வளாகம், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம், கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் வருமானவரித்துறை , மத்திய கலால் துறை போன்ற அலுவலகங்களுக்கு பல கட்டிடங்களை கட்டியுள்ளார்.  1992 - இல் திருச்சிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு உதவி பொறியாளராக பணியாற்றிய தருணத்தில் திருச்சியில் வருமானவரித்துறை, மத்திய கலால் துறை, பிராந்திய பொறியியல் கல்லூரி, மத்திய வாழை ஆராய்ச்சி மய்யம் போன்ற அலுவலகங்களுக்கு பல கட்டிடங்களை நிறுவியுள்ளார். மேலும் திரு.இராமராஜ் அவர்களின் மேற்பார்வையில் 1997-1999 காலகட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர்.இராஜீவ் காந்தி அவர்களுக்கு நினைவகம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1999-இல் மும்பைக்கு பணியிடை மாறுதல் செய்யப்பட்டவர் 2002 வரை வருமான வரி மதிப்பீட்டு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். 2002-இல் மதுரைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு 2002 முதல் 2007 வரை செயற்பொறியாளராக பணியற்றினார். 2007 முதல் 2010 வரை திருச்சியில் செயற்பொறியாளராக பணியாற்றியுள்ளார்.  இந்த  காலகட்டத்தில் செயற்பொறியாளராக மதுரை Subsidiary Interlligence Bureau, காந்திகிராமிய பல்கலைகழகம், திருச்சி தேசிய பொறியியல் கல்லூரி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் திருச்சி வருமானவரித்துறை போன்றவற்றில் பல கட்டிடங்கள் உருவாக முக்கிய பங்காற்றினார். 2010-இல்  சென்னைக்கு பணியிடமாற்றம் மற்றும் நிர்வாகப்பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். 2010- 2019 காலகட்டத்தில் சென்னையில் நிர்வாகப்பொறியாளர், Project Manager IIITDM ( Indian Institute of information Technology Design and Manufacturing), District Valuation Officer (Income Tax Department), Director, CPWD  போன்ற பதவிகளில் பணியாற்றினார். தான் பொறுப்பேற்ற அனைத்து பதவிகளிலும் சிறப்பாக பணியாற்றிய திரு.ராமராஜ் அவர்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணி நிறைவு பெற்றார்.  


பணி ஓய்வுக்குப்பின் சமுதாயப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட திரு.இராமராஜ் அவர்கள், இராஜகம்பளத்தார் மேன்மக்கள் என்ற அறக்கட்டளையைத் துவங்குவதற்கு காரணமாக இருந்ததுடன் அறக்கட்டளைக்கு தன்னுடைய பங்களிப்பாக  ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கி அறக்கட்டளை சிறப்புடன் செயல்பட உறுதுணையாகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் திறமையான மாணவர்கள் மற்றும் வருமையினால் கல்வியைக் கைவிடும் மாணவர்களை அடையாளம் கண்டு கல்வி உதவித்தொகை வழங்குவதுடன், ஆங்காங்கே சமுதாயத்தினர் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடையாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இடஒதுக்கீட்டில் முழுமையாக பலன்பெற்று தனியார் துறைகளிலும், அரசுத்துறைகளில் கடைநிலை ஊழியர்களாக பணியில் இருப்பவர்கள் கூட, சமுதாயத்தின் மீது அக்கறையில்லாதவர்களாக, சமுதாயத்தை ஏறேடுத்தும் பார்க்காதவர்களாக, பிள்ளைகளுக்கு வரன்தேடும்பொழுது மட்டும் ஒருசில ஆண்டுகள் சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்களாகவும், அன்புகொண்டவர்களாகவும் காட்டிக்கொள்ளும் போக்கை, சமுதாய அமைப்புகளில் பயணிப்பதால், அனுபவரீதியாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், வழிகாட்டுவதற்கு ஆளில்ல காலத்தில் முழுக்க முழுக்க தன் சொந்த திறமையால் படிப்படியாக உயர்ந்து, மத்திய அரசுப்பணியில் மதிப்புமிக்க உயர்பதவிகளை அலங்கரித்தவர், பணி ஓய்விக்குப்பின் சமுதாய மேன்மைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள திரு.இராமராஜ் அவர்களுக்கு, “மேன்மக்கள் மேன்மக்களே” என்பதை நிரூபிக்கும் வகையில் சமுதாயப்பணிக்கு அவர் தேர்ந்தெடுத்த பாதைக்கு “இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை” என்ற பெயர் இயல்பிலேயே அமைந்தது, அவரின் குணத்திற்கும், சேவைக்கும் காலம் கொடுத்த கொடை என்றால் மிகையல்ல. கம்பளத்தார் சமுதாயத்தில் மதிப்புமிக்கவர்களில் ஒருவரான திரு.இராமராஜ் அவர்கள், கலங்கரை விளக்கமாக இருந்து இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும், சமுதாய அமைப்புகளுக்கு வழிகாட்ட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved