நாவினில் நர்த்தனமாடும் நாயகன் - ஈச்சனாரி. திரு.R.A.கணேசன்.
திரு.R.A.கணேசன் அவர்கள் 1971 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், ஈச்சனாரி கிராமத்தில் திரு.அய்யாசாமி – திருமதி.பார்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.சுமதி என்ற மனைவியும், K.விகாசினி.BSC., K.கனிஷ்கா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் திரு.கணேசன் அவர்கள், இயல்பிலேயே மிகுந்த பேச்சாற்றல் மிக்கவர். உள்ளூர் நிகழ்ச்சிகளில் இவரின் பேச்சற்றலை கவனித்த ஈச்சனாரி திரு.மகாலிங்கம் அவர்கள், சமுதாயப்பணிக்கு செல்கையில் இவரையும் அழைத்துச்சென்றவர், அப்பொழுது நடக்கும் கூட்டங்களில் திரு.கணேசனுக்கு பேச வாய்ப்பளித்து, இவரின் பேச்சுக்கலையை மெருகூட்டினார். மாவட்ட செயலாளர் திரு.குமார் அவர்கள், இவருக்கு முறையாக பயிற்சி அளித்து எதுகை மோனையுடன் ஏற்ற இறக்கத்துடன் ஆர்ப்பரிக்கும் சிறந்த பேச்சாளராக உருவாக்கினார்.
விடுதலைக்களாம் சார்பில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கோவை மாவட்டம், நல்லட்டிபாளையத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திரு.கணேசன் ஆற்றிய எழுச்சிமிக்க உரையின் மூலம் சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்தார். இவரின் பேச்சாற்றல் இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி உண்டாக்கியது.
விடுதலைக்களம் அமைப்பிற்கு கோவை மாவட்டம் முழுவதும் கம்பளத்தார் வாழும் கிராமம் தோறும் கிளை அமைத்து, அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றினார். 2008 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற விடுதலைக்களத்தின் மண்டல மாநாட்டில் ஆற்றிய உரை திரு.கணேசனின் மேடைப்பேச்சுகளில் தனித்துவமாக அமைந்தது. இதனையடுத்து விடுதலைக்களத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக திரு.கணேசன் நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து 2008-இல் நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டிலும், ஈரோடு, விருதுநகர், சேலம், ஆகிய இடங்களில் நடைபெற்ற விடுதலைக்களம் மாநாடுகளிலும் சிறந்த மேடைப்பேச்சை வழங்கியுள்ளார். கோவை மாவட்டம் ஈச்சனாரி கிராமத்தில் 2010-இல் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவில் சொற்பொழிவாற்றி மேடையில் வீற்றிருந்த அமைச்சர் பெருமக்கள், அரசியல் கட்சியினரின் வாழ்த்துக்களை பெற்றார். கடந்த சில ஆண்டுகாலமாக சென்னை, இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, சமுதாய நலங்களுக்காண கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார்.
சமுதாயத்தில் அரசியல் கட்சிகளில் எத்தனையோ தலைவர்கள் இருந்தும், அரசியலுக்கு அடிப்படைத் தேவையான பேச்சுக்கலையை வளர்த்துக்கொள்ள தயங்கிவருபவர்களில் மத்தியில் இயல்பிலேயே பேச்சுக்கலையை கைவசம் கொண்டுள்ள திரு.கணேசன் அவர்கள் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை தட்டியெழுப்பிட தனக்கு கிடைத்துள்ள இந்த காந்தக்குரலை பயன்படுதிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.