🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாட்டின் முதல்குடியான பழங்குடி மங்கை! வாழ்த்துகிறோம்...

இந்திய ஜனாதிபதி தேர்தல் (பாகம் 4 )

இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின  விழா வரும் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட உள்ள சூழலில்,  குடியரசு தலைவர் தேர்தல் ஜுலை 18-ல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. தேசிய ஜனநாயகக கூட்டணியின் வேட்பாளராக களம் இறங்கி உள்ள திரவுபதி முர்முவுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் காணும் யஷ்வந்த் சின்காவுக்கும் இடையிலான போட்டியில் புதிய குடியரசுத் தலைவர் யார்? என்ற கேள்விக்கு விடை காணும் விதமாக நடைபெற்ற இத்தேர்தலில், 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற வளாகத்திலும், மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம்  4033 பேரும் வாக்களிப்பதற்கு, அந்தந்த மாநில சட்டமன்ற வளாகத்திலும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடடைபெற்ற வாக்குப்பதிவின்போது, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியுடன், தாங்கள் சார்ந்த மாநிலத்தின் சட்டமன்ற வளாகத்தில் இருந்த வாக்குச் சாவடிகளில்  வாக்களித்தனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பச்சை நிற வாக்குச் சீட்டில், ஊதா நிற மை கொண்ட பிரத்யேக பேனாவினால் வாக்களித்தனர்.அதுபோலவே மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்திலான வாக்கு சீட்டுகளில், ஊதா நிற மை கொண்ட பிரத்யேக பேனாவினால் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். (மேற்கண்ட வாக்குச் சீட்டுகளில் 'வைலட்' மை நிற பேனா மூலம் தாங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள கட்டத்தில் 'ஒன்று' என எழுத வேண்டும். 2 வது வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பினால் 'இரண்டு' என எழுதலாம். இதுபோல் அவரவர் தாய் மொழி அல்லது ஆங்கிலம் அல்லது ரோம் மொழியிலும் எழுதலாம் )  

அரசியல் கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பதால், சில பேர் மாற்று அணி வேட்பாளருக்கு வாக்கு அளித்ததாக பகிரங்மாகவே தெரிவித்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு முன்பே கூட்டணி விசயத்தில் இரண்டு தரப்பிலும் சில பரபரப்புகள் நிகழ்ந்தது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஏற்கனவே சில கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இறுதியாக எதிர்க்கட்சிகளின் கூட்டணிக் கூட்டத்திற்கு மம்தா பானர்ஜியும், சரத்பவாரும் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறிய உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், உள்கட்சியின் நெருக்கடி காரணமாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் தத்தமது ஆதரவுகளை  திரவுபதி முர்முவுக்கு தெரிவித்துள்ளனர். அதுவரை எந்த கூட்டணிக்கும் இசைவு தராமல் இருந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுபோல் இறுதிவரை தேர்தல் களம் பரபரப்புடன் காணப்பட்டது என்பதே உண்மை. 


இத்தேர்தலில் 1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வாக்கு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எம்.பி க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பை கணிப்பதற்கு ஏற்கனவே சூத்திரம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் எம்.எல்.ஏ க்கள் எண்ணிக்கையை ஆயிரத்தின் மூலம் பெருக்கி, அதில் கிடைக்கும் எண்ணை வைத்து அந்த மாநிலத்தின் மக்கள் தொகையை வகுக்க வேண்டும். அதில் கிடைக்கும் எண்ணே ஒரு எம்.எல்.ஏ வின் வாக்கு மதிப்பு ஆகும். அதேபோல் எம்.பி க்களின் வாக்கு மதிப்பு இந்தியாவின் மக்கள் தொகையை வைத்து கணக்கிடப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் 234 ( 41,184) சட்டமன்ற உறுப்பினர்கள்,(நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து) 57  நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆகியோரின் மொத்த வாக்கு மதிப்பு 81,086 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.இதில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 176 எனவும், நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக உத்திரப்பிரதேசத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 208 ஆகவும், ஜார்க்கண்ட் 176, மராட்டியத்தில் 175, மேற்கு வங்கம் 151, பீகார் 173, ஆந்திரா 159 ஆகும். இதுபோல் சிறிய மாநிலங்களான கோவா எம்.எல்.ஏ வின் வாக்கு மதிப்பு 20 எனவும், மணிப்பூர் 18, மேகாலயா 17, புதுச்சேரி 16, நாகாலாந்து 9, மிசோரம் 8, அருணாச்சலபிரதேசம் 8, சிக்கிம் 7 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 

நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் இத்தேர்தலில் மொத்தம் 99.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜுலை 21-ல் (நேற்று) காலையில் தொடங்கி இரவு வரை நீடித்தது. முதல் சுற்றில் மொத்தமுள்ள 776 எம்.பி. வாக்குகளில் பதிவான 763 வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 748 வாக்குகளில் 540 வாக்குகள் திரவுபதி முர்முவுக்கு கிடைத்தன. இதன் வாக்கு மதிப்பு 3,78,000 ஆகும். அதேபோல் யஷ்வந்த் சின்கா 208 வாக்குகள் பெற்றார். இதன் வாக்கு மதிப்பு 1,45,000 ஆகும். 

ஆகவே வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே 44 கட்சிகளின் ஆதரவுடன் திரவுபதி முர்மு முன்னிலை பெறத் தொடங்கினார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்பி-க்கள் அணி மாறி, திரவுபதிக்கு வாக்களித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அகர வரிசைப்படி 10 மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏக்களின் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. மேற்கண்ட மாநிலங்களில் மொத்தமுள்ள 1,138 எம்.எல்.ஏ க்களில் 809 பேரின் வாக்குகள் முர்முவுக்கு கிடைத்தது. இவற்றின் வாக்கு மதிப்பு 1,05,299 ஆகும். இந்த சுற்றில் யஷ்வந்த் சின்கா 329 பேரின் வாக்குகள் பெற்றார். இவற்றின் வாக்கு மதிப்பு 44,276 ஆகும். இதன் மூலம் திரவுபதி முர்மு 2-வது சுற்றிலும் முன்னிலையில் தொடர்ந்தார். அடுத்த 10 மாநிலங்களின் எண்ணிக்கையில் 3-ல் இரண்டு பங்குக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற முர்முவின் வாக்கு மதிப்பு 5,77,777 ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மொத்த வாக்கு மதிப்பான 10,86,431 வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெறவேண்டும். அந்த வகையில் முர்மு 3 ஆம் சுற்றின் முடிவில் 53 சதவீதம் வாக்குகள் பெற்று தமது வெற்றியை உறுதி செய்துவிட்டார். இறுதிச் சுற்றான 4 வது சுற்றில் யஷ்வந்த் சின்கா 3,80,177 வாக்கு மதிப்புடன் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டார். சுமார் 100 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி முர்முவுக்கு வாக்களித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 4809 மொத்த வாக்குகளில் பதிவான வாக்குகள் 4754 ஆகும். இதில் 4701 வாக்குகள் செல்லத்தக்கவையாக ஏற்கப்பட்டது. 53 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது எனவும், இவற்றில் 15  வாக்குகள் எம்.பிக்களுடையது என்றும், 38 வாக்குகள் எம்.எல்.ஏக்களுடையது என்றும் தெரியவருகிறது. இந்த இறுதி சுற்றிலும் அதிகமான வாக்குகள் பெற்ற திரவுபதி முர்மு 6,76,803 வாக்கு மதிப்புடன் 64 சதவீதம் பெற்று,  அபார வெற்றியைப் பெற்றதுடன் நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக வரும் ஜுலை 25 அன்று மகுடம் சூடுகிறார்.

 இந்த வெற்றியின் மூலம் நாட்டில், ஒடுக்கப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார் முர்மு. அத்துடன் இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் , சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசு தலைவர் என்ற புகழையும் முர்மு பெறுகிறார். இப்படி பல சிறப்புகளுடன் நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராக பதவி ஏற்கும் திரவுபதி முர்முவுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர். குடியரசுத்தலைவர் பணியில் மேலும் பல சிறப்புகள் பெற  அ.காசிராஜன் ஆகிய நானும், இராஜகம்பளத்தார் சமுதாயத்தோடு இணைந்து வாழ்த்துகள் தெரிவிக்க விழைகிறேன்.

இத்துடன் இதற்கு முன்னர் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்களின் பட்டியலுடன், அவர்கள் தேர்வு பெற்ற ஆண்டு மற்றும் பெற்ற வாக்கு மதிப்பு ஆகியவற்றையும் காண்போம் :

(1) 1952 - இராஜேந்திரபிரசாத் 5,07,400., கே. டி. ஷா 92827

2-ஆம் முறையாக 1957 - இராஜேந்திரபிரசாத் 4,59,698., சவுத்ரி ஹரிராம் 2672 .

(2) 1962 - இராதாகிருஷ்ணன் 5.53.067.,சவுத்ரி ஹரிராம் 6341

(3) 1967 - ஜாகீர் உசேன் 4,71,244., கே.சுப்பாராவ் 3,63,971

(4) 1969 - வி.வி.கிரி 4,01,515., நீலம் சஞ்சீவரெட்டி 3,13,548

(5) 1974 - பக்ருதீன் அலி அகமது 7,65,587., திரிதிப் சவுத்ரி 1,89,196

(6) 1977 - நீலம் சஞ்சீவரெட்டி (மற்றவர்களின் மனுக்கள் தள்ளுபடி ஆனதால் போட்டியின்றி வெற்றி)

(7) 1982 - ஜெயில்சிங் 7,54,113., எச். ஆர்.கன்னா 2,82,685

(8) 1987 - ஆர். வெங்கட்ராமன் 7,40,148., வி.ஆர். கிருஷ்ணய்யர் 2,81,550

(9) 1992 - சங்கர் தயால் சர்மா 6,75,804., ஜி.ஜி. ஸ்வெல் 3,46,485

(10) 1997 - கே.ஆர். நாராயணன் 9,56,290., டி. என். சேஷன் 50,631

(11) 2002 - ஏ.பி.ஜே அப்துல்கலாம் 9,22,884., லட்சுமி சேகல் 1,07,366

(12) 2007 - பிரதீபா பட்டீல் 6,38,116., பைரோன்சிங் செகாவத் 3,31,306

(13) 2012 - பிரணாப் முகர்ஜி 7,13,763., பி.ஏ. சங்மா 3,15,987

(14) 2017 - ராம்நாத் கோவிந்த் 702044., - மீராகுமார் 367314

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved