🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மு.ப.அவர்களுக்கு வாழும் பெரியார் விருது - அவமானங்களை தாங்கும் கேடயம்!

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அகிம்சா சோசலிஸ்ட் கட்சி, பத்து ரூபாய் இயக்கம் மற்றும் தமிழ்நாடு தகவல் அறியும் ஆணைய சீரமைப்பு குழு ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.10.2022) சென்னை, கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற  முப்பெரும் விழாவில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர், சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சீர்மரபினர் நலசங்கத்தின் உயர்மட்டக்குழு ஆலோசகர் மு.பழனிச்சாமி அவர்களுக்கு "வாழும் பெரியார் விருது" வழங்கி மேனாள் மேதகு குடியரசுத்தலைவர்  ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் முனைவர் V. பொன்ராஜ்  அவர்கள் கவுரவித்தார்.

செல்வந்தராகப்பிறந்த தந்தைப்பெரியார் எந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் தன் வாழ்நாள் இறுதிவரை போராடினாரோ, அப்போராட்டத்தின் பயனாக இன்று ஓரளவு படித்து முதல் தலைமுறையாக கல்வியறிவும், பொருளாதார விடுதலையையும் அடைந்துள்ள அதே சமூகங்களைச் சேர்ந்த ஒருபிரிவினர், இன்னும் அதிகாரத்தின் உச்சபீடத்தில் குவிந்துள்ள உரிமைகளில் தங்களுக்கான முழுமையான பயனை அடையும் முன், அதிகார பீடங்களில் அமர்ந்துகொண்டு இன்றும் பல பணியிடங்களை அபகரித்துக்கொண்டுள்ள சூழ்ச்சிகளை உணராமல், பெரியார் மீதான ஒவ்வாமையையும், வெறுப்பையும் உமிழ்ந்து வருவது அறியாமையின் உச்சம் மட்டுமல்ல சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொண்டதற்கும், ஏறிய ஏணியை எட்டி உதைப்பதற்கும் ஒப்பானது.

பெரியார் மீதான வெறுப்பை கட்டமைக்க ஆதிக்க சாதிகள் முற்படுவதும், அதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பதவிக்கு ஏங்குவோரும், அறியாமையில் தூங்குவோரும், அக்கருத்தினை ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தாக மாற்ற முயன்று வரும் வேளையில், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி அவர்களுக்கு "வாழும் பெரியார் விருது" வழங்கி கவுரவித்துள்ளது, இச்சமூகத்திற்கு பெரியார் ஆற்றிய பெரும்பணியை ஆயிரம் ஆதவன் வந்தாலும் மறைக்கமுடியாது என்பதைக் காட்டுகிறது. மதிப்பு மிக்க இவ்விருதினைப்பெற்றுள்ள மு.பழனிச்சாமி அவர்களுக்கு இராஜகம்பள சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேவேளையில், ஓய்வுக்குப்பிந்தைய தனது வாழ்க்கையை தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக, விருப்பத்தோடு அர்ப்பணித்துக் கொண்டவரை, வஞ்சிக்கப்பட்ட சீர்மரபினர் மக்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராட காலம் தத்தெடுத்துக் கொண்டுள்ளது தந்தை பெரியாரின் வாழ்க்கையோடு  ஒத்தது. தந்தைப்பெரியார் எப்படி காந்தியாரின் கொள்கையோடு ஒன்றிப்போய் சுதந்திரப்போராட்டங்களில் பங்குகொண்டவரை, பின்னாட்களில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடுவதற்கும், சுயமரியாதை உணர்வை ஊட்டவும் காலம் தத்தெடுத்துக்கொண்டதோ அதேபோல் இன்று மு.பழனிச்சாமி அவர்களை தத்தெடுத்துக்கொண்டுள்ளது.

பெரியார் போன்ற சமூகநீதி போராளிகள் சந்தித்த அதே ஏளனம், பரிகாசம்,அவமானம், பழி பாவங்களை உங்கள் மீதும் சுமத்தும் காலம் நிச்சயம் வரலாம். இன்னும் ஒருபடிமேலே, எந்த மக்களின் உரிமைகள் பறிபோகிறதென்று உங்களை வருத்திக்கொண்டு, உங்கள் வயதையும், குடும்பத்தையும் பொருட்படுத்தாது போராடுகின்றீர்களோ, அவர்களே உங்கள் மீது முதல் கல்லை எறிகின்றவர்களாக இருக்கப்போகின்றனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நீங்கள் இன்னும், இன்னும் உழைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்விருது வழங்கப்படுவதாக எடுத்துக்கொண்டு, நீங்கள் எந்த லட்சியத்திற்காக பணி ஓய்வுக்குப்பின் பணியாற்ற புறப்பட்டீர்களோ, அதையே இலக்காகக் கொண்டு பயணித்து தொட்டிய நாயக்கர் சமூகத்தோடு, இதர சமூக மக்களுக்காகவும் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved