சர்வதேச மனசாட்சி நாள் - ஏன் தேவை? எதற்காகத்தேவை?

அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்கு ஆதரவாக சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை ஒரு வழக்கமான அடிப்படையில் அணிதிரட்டுவதற்கான வழிமுறையாக ஏப்ரல் 5 ஆம் தேதியை சர்வதேச மனசாட்சியின் நாளாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஜூலை 25,2019 அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 5, 2020 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், காலநிலை மாற்றம் முதல் புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான விரிவடையும் இடைவெளி வரை, மனிதகுலம் இதுவரைபார்த்திராத உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகிறது. இந்தச் சவால்களை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒன்றுபட வேண்டியது அவசியமாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வன்முறை மற்றும் கொடிய மோதல்கள் தொடர்பான அழுத்தமான உலகளாவிய சவால்கள் மற்றும் அவசரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான புதுமையான உத்திகள் குறித்து ஆலோசிக்க புகழ்பெற்ற தலைவர்கள் ஐநாவில் ஒன்று கூடி, எல்லைகளைக் கடந்த ஒரு கூட்டு மனப்பான்மையை வளர்க்கும் வழிமுரைகள் குறித்து 3 நிமிட உரை வழங்குவார்கள்.
சர்வதேச நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள் தாண்டி, பொதுவாக சாமானிய மனிதர்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு கடைபிடிக்கக வேண்டிய எளிய முறைகளை விளக்குகிறார் பொதுநல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா.
மனிதர்களாகிய நமது இயற்கை எப்போதும் குறைகளைக் கண்டுபிடிப்பதாகவே இருக்கிறது. இன்னொரு மனிதர் செய்யும் காரியங்களில் நல்லது முதலி்ல் தெரியுமுன் குறைகள் தான் கண்ணுக்குத் துருத்திக் கொண்டு தெரிகிறது. இவ்வாறு பொதுவாகவே பிறரைப் பற்றி அதிகம் குறை கூறுபவர்களாகவே நாம் வாழ்ந்து வருகிறோம்.எனினும் நமது பக்க விசயங்களில் எளிதாக நமது குறைகளை மறந்து விட்டு நமது மனதில் நிறைகள் மட்டுமே நிறைந்து இருப்பது போன்று பொய்ப் பாசாங்கு செய்து கொள்கிறோம்.
நான் நல்லவன் அவன் தான் கெட்டவன். தொழில் நட்டத்துக்கு அவன் தான் காரணம். லாபம் பூராவும் என்னால வந்தது. கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும், பெற்றோர் பிள்ளைகள் மீதும், பிள்ளைகள் பெற்றோர் மீதும், ஆசிரியர்கள் மாணவர்கள் மீதும், மாணவர்கள் ஆசிரியர்கள் மீதும், முந்தைய தலைமுறை இன்றைய தலைமுறை மீதும் என்று எப்போதும், எதிலும், எங்கும் குறை, குறை, குறை என்று கண்களில் பூதக் கண்ணாடியை மாட்டிக் கொண்டது போல குறை மட்டுமே நமக்குத் தெரிகிறது.
இதனால் நமது மனம் விரக்தி நிலையை அடைகிறது. உறவுகளில் விரிசல், தொழிலில் பற்றின்மை, கல்வியில் விரக்தி, செய்யும் வேலையில் கவனமின்மை போன்றவை ஏற்படுகின்றன. எப்போதும் பிறர் குறைகளை அதிகம் கண்டு அதை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டே சென்றால் நாளடைவில் நமது மனம் அதன் குறைகளை முழுவதுமாக மறைத்து விடும். இதனால் நாம் குணத்தால் மாற்றமடைவது தடைபட்டுப் போகும். இது நாளடைவில் நம்மை நார்சிஸ்ட் எனும் நச்சுத்தன்மை கொண்ட சுயநலவாதிகளாக மாற்றி விடும் சூழலும் உண்டு.
இதன் நேர்மாறான மற்றொரு பக்கம், தனது பக்க குறைகளை மேலதிகமாக உணர்வது - அதனால் அதீத குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி கவலையில் உழல்வது என்று பலரும் இருக்கிறோம். இவர்கள் எப்போதும் சதா தன்னாலேயே தவறு நடந்தது? தவறே நிகழாத இடத்தில் எனது கவனமின்மையால் தவறு நடந்து விட்டது என்று தங்களுக்குத் தாங்களே மனப்பிரம்மையில் சிக்கித் தவிப்பார்கள். இந்த எண்ணங்களையும் நாம் மட்டுப்படுத்தியாக வேண்டும்.
குறைகள் விசயத்தில் நாம் கொண்டிருக்க வேண்டிய எண்ணங்கள் என்று எனக்குப் படுவது இங்கு குறைகளற்றோர் என்று யாருமில்லை. உடலால் எப்படி குறைகள் இருப்பது போல் எண்ணங்களாலும் சிந்தனையாலும், செயல்களாலும் நாம் அனைவருமே குறைகள் கொண்டவர்களே. இங்கு யாருமே 100% முழுமையானவர்கள் கிடையாது (நாம் உட்பட) என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு செயலுக்கான முயற்சி நடக்கும் போது "மனிதத் தவறு" என்பது அதில் ஓர் அங்கமென ஏற்றுக் கொள்ளல் வேண்டும். அத்தகைய தவறுகள் நேரும் போது அதை சரிசெய்யவும் தேவையான திட்டமிடலை முன்கூட்டியே செய்து விட வேண்டும். ஒரு மனிதனைக் காணும் போது முன்முடிவுகள் ஏதுமின்றி அவனும் நம்மைப் போன்ற "நிறை குறை உள்ள மனிதன் தான்" என்று மனதில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது அந்த மனிதனிடம் முழுமையாகப் பழகும் முன்னமே அவன் குறித்த முன்முடிவுகளை எடுப்பதை விட்டும் நம்மைத் தடுக்கும்.
நம் மனம் எப்படி சிந்திக்கிறதோ அதற்கு நேர்மாறாக அதை வழிநடத்திட வேண்டும். சிலர் தங்கள் மீது அதிகம் குறை காண்பவர்களாக குற்ற உணர்ச்சியில் இருப்பார்கள். இவர்கள் முறையான மனநல ஆலோசனையுடன் சேர்த்து தங்களது சிந்தனையில் மாற்றம் காண முயற்சிக்க வேண்டும்.
நாம் இங்கு யாருக்கும் அடிமையாக வாழ வரவில்லை. மாறாக ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு அன்பைப் பெற்று வழங்கி இன்பமுறவே வந்திருக்கிறோம். நாம் மட்டுமே தவறுகள் செய்வதில்லை. அனைவருமே செய்கிறார்கள். எனவே அளவுக்கு அதிகமாக குற்ற உணர்ச்சி தேவையில்லை.
நம் மீது நாமே கரிசனம் கொள்ளவில்லையெனில் வேறு யார் தான் கொள்வது? நம்மை நாமே மன்னித்து விட்டு தவறுகளில் பாடம் கற்று அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்ல வேண்டும். எப்போதும் பிறர் தவறுகள் பிறர் குறைகள் மிக அதிகமாகத் தென்படுகிறதா? இதுவும் ஆபத்தான சிந்தனைப் போக்காகும். இதற்கும் மனநல ஆலோசனையுடன் கூடிய சிந்தனை மாற்றம் அவசியம்.
பிறர் குறையுடன் இருப்பது போலவே நானும் குறையுடன் தான் இருக்கிறேன். நானும் தவறு செய்யக்கூடியவன் தான்.எப்படி என்னை நான் மன்னித்து விடுகிறேனோ? அது போல பிறரையும் ஏற்று மன்னித்து விடவேண்டும்.
பிறர் குறைகளை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டே சென்றால் வாழும் காலம் நரகமாகிவிடும். எனவே என்னால் இயன்ற அளவு விருப்பு வெறுப்பின்றி பிறரை நேசித்து நானும் நேசிப்புக்குள்ளாகப் போகிறேன் என்ற சிந்தனை அவசியம்.
மனிதர்களிடம் இருக்கும் சிறு சிறு குறைகளும் அதனால் நேரும் தவறுகளும் அதற்குப் பின்பான கற்றலுமே வாழ்வின் அழகியலைக் கூட்டி சலிப்புத் தன்மை குறைவானதாக அதை மாற்றி அமைக்கிறது. பிறர் குறைகளை ஊதிப் பெரிதாக்காமல் அதுவும் வாழ்வின் அங்கமென ஏற்றுக் கொள்ளப் பழகினால்
உறவுகள் இன்னும் பலப்படும். வாழ்க்கை இன்னும் நம் வசப்படும்.