🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம் ; வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா?

ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற்ற சூரிய கிரகணத்தின் மீது உலகத்தின் கவனம் குவிந்துள்ள நிலையில், ஒரு இறந்த வெண் குறுமீன் (White Dwarf) மற்றும் ஒரு வயதான செம்பெருமீன் (Red Giant) ஆகியவற்றை உள்ளடக்கிய கொரோனா பொரியாலிஸ் பைனரி அமைப்பு (இரும விண்மீன் - இரட்டை நட்சத்திர அமைப்பு) வெடித்து சிதறுவதற்காக விண்வெளியில் காத்துக்கொண்டிருக்கிறது.

பூமியிலிருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கொரோனா பொரியாலிஸ் அமைப்பானது, டி கொரோனே பொரியாலிஸ் (T Coronae Borealis) அல்லது T CrB என்று சுருக்கமாக அழைக்கப்படும் வெண் குறுமீனின் இருப்பிடமாக உள்ளது. இதன் வெடிப்பு நிகழ்வை, 'வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஏற்படும் வெண் குறுமீன் வெடிப்பு (நோவா)' என்று நாசா கூறுகிறது.

இந்த அரிய பிரபஞ்ச நிகழ்வு வரும் செப்டம்பர் 2024-க்கு முன்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அது நடக்கும்போது அதை வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

இதை காண விலையுர்ந்த தொலைநோக்கி எதுவும் தேவை இல்லை என்றும் நாசா கூறியுள்ளது.

T CrB வெடிப்புகள் 80 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கின்றன, அப்படி கடைசியாக 1946-இல் இதுபோன்ற வெடிப்பு நிகழ்ந்தது.

இதுகுறித்து பேசிய நாசாவின் விண்கல் சுற்றுச்சூழல் திட்ட மேலாளர் வில்லியம் ஜே குக், "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இது ஹாலி வால் நட்சத்திரம் போன்றது. இந்த வெடிப்பு 75 முதல் 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது. ஆனால் ஹாலி வால் நட்சத்திரம் பெறும் கவனத்தை, நோவாக்கள் பெறுவதில்லை" என்று கூறினார்.


இந்த நட்சத்திர வெடிப்பு வானில் சில நாட்களுக்கு ஒளிர்வதை நம்மால் பார்க்க முடியும்.

விஞ்ஞானிகளுக்கு எப்படி தெரியும்?

பெரும்பாலான சமயங்களில் , வெண் குறுமீன் வெடிப்பு (நோவா) எப்போது நிகழும் என்று நாசா நிபுணர்களுக்கு தெரியாது என்று கூறுகிறார் குக். ஆனால் "தொடர் நோவாக்கள்" (recurrent novas) என்று அறியப்படும் 10 நோவாக்கள் உள்ளதாக விளக்குகிறார் அவர்.

"தொடர் நோவா என்பது அவ்வப்போது வெடிக்கும் நிகழ்வுகளாகும்," என்று கூறும் குக், "டி கொரோனே பொரியாலிஸ் அதற்கு ஒரு முக்கிய உதாரணம்" என்கிறார்.

ஆனால் T CrB குறிப்பாக அடுத்த சில மாதங்களில் வெடிக்கப் போகிறது என்று நாசாவுக்கு எப்படி உறுதியாகத் தெரியும்? இது கணித கணக்கீடுகள் மற்றும் கண்ணுக்கு எட்டிய சான்றுகள் குறித்த விஷயம். உதாரணமாக, T CrB கடைசியாக ஒரு நோவா வெடிப்பை 1946-இல் எதிர்கொண்டது. இது நடந்து 78 ஆண்டுகள் ஆகிறது.

T CrB வெடிப்பதற்கு தயாராகி வருகிறது என்பதற்கு மற்றொரு அறிகுறி இருக்கிறது என்றும் கூறுகிறார் குக்.

"நோவாவாக மாறுவதற்கு முன்பு குறிப்பிட்ட நட்சத்திரம் சுமார் ஓராண்டுக்கு மங்கிவிடும். டி கொரோனே பொரியாலிஸ் மார்ச் 2023 இல் மீண்டும் மங்கத் தொடங்கியது. அதனால்தான் இது இப்போதிலிருந்து செப்டம்பர் இறுதி வரை நோவாவாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்."

படக்குறிப்பு,வானில் டி கொரோனே பொரியாலிஸ் ஒளிர்வதை எங்கு பார்க்க வேண்டும் என்பதை விளக்கும் படம்.

T CrB விண்மீன் நோவா மறுநிகழ்வு விகிதம் இதுவரை பல ஆண்டுகளாக அடையாளம் காணப்பட்ட பல நோவாக்களிலிருந்து அதை வேறுபடுத்துகிறது. மேலும் இதுவே இந்த நட்சத்திர வெடிப்பை மிகவும் சிறப்பானதாகவும் ஆக்குகிறது.

"இதுவரை ஏராளமான நோவாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மீண்டும் நிகழுமா என்று தெரியாது. அவை மீண்டும் எப்போது வரும் என்றும் எங்களுக்குத் தெரியாது," என்று கூறுகிறார் மெரிடித் மேக்ரிகோர்.

இவர் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் வில்லியம் எச். மில்லர் III இயற்பியல் மற்றும் வானியல் துறையின் பேராசிரியர். மேலும் ஸ்டெல்லர் செயல்பாட்டில் நிபுணத்துவம் பெற்றவர்.

விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியரான ரிச்சர்ட் டவுன்சென்ட் கூறுகையில், ஒரு நோவாவின் தொடர் செயல்திறனுக்கான கால அளவு ஒரு ஆண்டு முதல் கோடிக்கணக்கான ஆண்டுகள் வரை இருக்கலாம் என்கிறார்.


நோவா என்பது என்ன? அதைத் தூண்டுவது எது?

T CrB போன்ற சில கணிக்கக்கூடிய நோவா நிகழ்வுகள் எப்போது நிகழும் என்பதை அறிவதுடன், அவை ஏன் நிகழ்கின்றன என்பதையும் நாசா நிபுணர்கள் அறிவார்கள்.

உதாரணமாக, டி கொரோனா பொரியாலிஸ் வெண்குறுமீன் ஒரு இரட்டை நட்சத்திர அமைப்பில் உள்ளது. அதாவது இது ஒன்றையொன்று சுற்றி வரும் இரண்டு நட்சத்திரங்களில் (இரண்டு சூரியனைப் போல) ஒன்றாகும். இதில் மற்றொன்று சிவப்பு மற்றும் பெரிய நட்சத்திரம்.

வெண் குறுமீன்கள் சூரியனைப் போன்ற நிறையை கொண்டுள்ளது. ஆனால் அதன் நூறு மடங்கு சிறிய விட்டம் பூமியுடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கும் என்று கூறுகிறார் ரிச்சர்ட். அந்த அதிக நிறை ஆனால் ஒப்பீட்டளவில் சிறிய அளவு ஆகியவை இந்த சிறிய வெள்ளை நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையை வலிமையாக்குகின்றன.

T CrBஇன் இரட்டை நட்சத்திர அமைப்பில் உள்ள செம்பெருமீன் (Red Giant) ஹைட்ரஜன் உள்ளிட்ட தனது கூறுகளை வெளியேற்றுவதால், T CrB இன் ஈர்ப்பு விசை அதை ஈர்த்துக்கொள்கிறது அல்லது சேகரிக்கிறது. அவற்றை தனது வரம்பை அடையும் வரை பல ஆண்டுகளாக அது செய்து கொண்டிருக்கிறது.

"இரட்டை நட்சத்திர அமைப்பில் செம்பெருமீன் அதன் கூறுகள் அனைத்தையும் வெண் குறுமீனின் மேற்பரப்பில் வெளியிடுகிறது" என்று கூறுகிறார் குக்.

"மேலும், வெண்குறுமீனின் (T CrB) மேற்பரப்பில் அந்த கூறுகள் அதிகமாகும் போது, வெடிகுண்டில் நடப்பது போன்ற ஒரு தெர்மோநியூக்ளியர் வினை நிகழ்கிறது. அப்போது வெண்குறுமீன் பெரும் வெடிப்பை நிகழ்த்துகிறது.”

இதைத்தான் நோவா என்கிறார்கள்.

படக்குறிப்பு,"வழக்கமாக ஒரு நோவாவைப் பார்க்கும் அளவிற்கு உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். ஆனால் டி கொரோனா பொரியாலிஸ் அதை மிக வேகமாகச் செய்வதாகத் தெரிகிறது.""வழக்கமாக ஒரு நோவாவைப் பார்க்கும் அளவிற்கு உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். ஆனால் டி கொரோனா பொரியாலிஸ் அதை மிக வேகமாகச் செய்வதாகத் தெரிகிறது."

பூமியில் இருந்து நோவாவை எப்படிப் பார்க்க முடிகிறது?

T CrB இல் போதுமான அளவு கூறுகள் குவிந்து அதன் வெப்பநிலை சில மில்லியன் டிகிரி செல்சியஸை எட்டியதும், அணுக்கரு இணைவு எதிர்வினை நிகழத் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நோவா நிகழ்வை உருவாக்குகிறது என்று டவுன்சென்ட் கூறுகிறார்.

"இவை சூரியனின் மையப்பகுதியில் நடந்து கொண்டிருக்கும் அதே எதிர்வினை தான். மேலும் இந்த எதிர்வினை வெண்குறுமீனின் (White Dwarf) மேற்பரப்பு அடுக்குகளில் மிகப்பெரும் அளவிலான ஆற்றலை வெளியிடுகின்றன" என்று டவுன்சென்ட் தெரிவிக்கிறார்.

"இந்த ஆற்றல் வெளியீடு தற்காலிகமாக வெண்குறுமீனை அதன் துணையாக இருக்கும் செம்பெருமீனவிட அதிகமாக மிளிரச் செய்கிறது. மேலும் இந்த இரண்டு நட்சத்திரங்களிலிருந்தும் வெளியாகும் ஒட்டுமொத்த ஒளி இங்கே பூமியில் இருந்து காணும் போது 1000 மற்றும் 100,000 காரணிகளால் அதிகரிக்கிறது."

இந்த வகையான வெடிப்பு நிகழ்வுகள், இரட்டை நட்சத்திர அமைப்புகளில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடையே நிகழும் நிறை பரிமாற்றம் மற்றும் வெண்குறுமீன் நோவாவாக மாறும் போது ஏற்படும் தெர்மோநியூக்ளியர் வெடிப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள நாசா நிபுணர்களுக்கு உதவுகிறது. இது T CrB விஷயத்தில் மீண்டும் மீண்டும் நடக்கும் ஒரு செயல்முறையாகும்.

"இது மீண்டும் மீண்டும் பெரிய நட்சத்திரத்திலிருந்து கூறுகளை சேர்க்கும் இந்த சுழற்சியை செய்துக் கொண்டிருக்கிறது," என்கிறார் மேக்ரிகோர்.

"வழக்கமாக ஒரு நோவாவைப் பார்க்கும் அளவிற்கு அது உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். ஆனால் டி கொரோனா பொரியாலிஸ் அதை மிக வேகமாகச் செய்வதாகத் தெரிகிறது, இதுவே அதை அரிதான ஒன்றாக மாற்றுகிறது."

"டி கொரோனா பொரியாலிஸ் நட்சத்திரம் மிகவும் சிறியவை, அவற்றை நாம் வெற்றுக்கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், அணுசக்தி எதிர்வினைகள் மூலம் தற்காலிகமாக பார்க்க முடியும்."


T CrB நோவா வெடிப்பு நிகழும் போது நீங்கள் என்ன காண்பீர்கள்?

நாசாவின் கூற்றுப்படி, பொதுவாக T CrB நட்சத்திர அமைப்பின் ஒளிரும் தன்மையின் அளவு (visibility magnitude) +10 ஆகும். ஆனால் வரவிருக்கும் T CrB நோவா வெடிப்பு நிகழும்போது, ​​இந்த அளவு கணிசமாக +2 வரை உயரும் என மதிப்பிடப்படுகிறது. இது +10 ஐ விட மிகவும் பிரகாசமானது. இந்த +2 அளவு என்பது வடக்கு நட்சத்திரமான போலரிஸின் ஒளிரும் அளவைப் போன்றது.

அந்த நேரத்தில், T CrB வெற்று கண்களுக்கேத் தெரியும்.

நோவா நிகழ்வை பார்க்க விரும்புவோர், பூட்டெஸ் மற்றும் ஹெர்குலிஸுக்கு அருகிலுள்ள சிறிய, அரைவட்ட வளைவான கொரோனா பொரியாலிஸ் அல்லது வடக்கு கிரவுன் விண்மீன் கூட்டத்தை வானில் பார்க்க வேண்டும் என்று நாசா கூறியுள்ளது.

"இங்குதான் இந்த நோவா வெடிப்பு ஒரு 'புதிய' பிரகாசமான நட்சத்திரமாக தோன்றும்" என்று அது விளக்கமளித்துள்ளது.

ஆனால் நடப்பது ஒன்றும் உண்மையில் ஒரு புதிய நட்சத்திரத்தின் உருவாக்கம் அல்ல. மாறாக, T CrB வெறுமனே நம் கண்களுக்கு தெரிவதற்கு அங்கு தொலைவில் நடக்கும் அணுசக்தி எதிர்வினைகளுக்கே நாம் நன்றி சொல்ல வேண்டும்.

"இது ஏற்கனவே அங்கு இருக்கும் ஒரு நட்சத்திரம் தான். ஆனால் அதை நம்மால் எப்போதும் பார்க்க முடியாது. அதனால்தான், இது ஏதோ புதிய நட்சத்திரம் உருவாவது போல் நமக்கு தெரிகிறது ," என்று விளக்குகிறார் மேக்ரிகோர்.

"டி கொரோனா பொரியாலிஸ் நட்சத்திரம் மிகவும் சிறியது, அதை நாம் வெற்றுக்கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் அதில் ஏற்படும் இணைவு எதிர்வினை(fusion reaction) காரணமாக, நம்மால் தற்காலிகமாக பார்க்க முடிகிறது. நீங்கள் இரவில் உங்கள் வாகனத்தில் சென்றுக்கொண்டே கூட இதைப் பார்க்கலாம்."

T CrB இன் ஒளிர்வுத்தன்மை அதன் உச்சத்தை அடைந்தவுடன், அது செவ்வாய் கிரகத்தைப் போல பிரகாசமாக இருக்கும் என்று கூறுகிறார் குக்.

மேலும் இது குறைந்தபட்சம் சில நாட்களுக்காவது வெற்றுக் கண்களுக்கு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் வெடிப்பு நிகழ்வு ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும்.

சிறிய வெள்ளை நட்சத்திரம், பெரிய சிவப்பு நட்சத்திரத்தில் இருந்து ஈர்த்த அனைத்து கூறுகளையும் வெளியேற்றியபிறகு, T CrB மீண்டும் ஒருமுறை தெளிவற்றதாக மாறி விடும். அதன் பின் பல ஆண்டுகளுக்கு அதை பார்க்க முடியாது.

நன்றி:பிபிசி

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved