🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொளுத்தியெடுக்கும் கோடை வெயில் - தண்ணீர் குடிக்க மறந்திடாதீங்க...

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்? எப்ப குடிக்கலாம்? 

காலை எழுந்ததுமே ஒரு பாட்டில் தண்ணீர் குடிப்பேன் இதனால் எதுவும் பாதகமா? 

இப்படி பல கேள்விகள் வருகின்றன. அதற்கான விடை இதோ!  

உணவு,காற்று போல மனிதன் உயிர்வாழ  அத்தியாவசியத்தேவையாக இருப்பது "நீர்". "நீரின்றி அமையாது உலகு" என்று வள்ளுவப் பெருந்தகையும் அதன் முக்கியத்துவம் அறிந்து  சுட்டுகிறார். நம் உடலின் ஒவ்வொரு செல்லும் நன்றாக இயங்குவதற்கு அவற்றுக்கு உள்ளேயும் வெளியேவும் சரியான அளவு நீர் இருந்தாக வேண்டும். 

ஒவ்வொரு செல்லுக்கும்  சக்தி மற்றும்  ஊட்டச்சத்துகளைக் கொண்டு சேர்க்கும் குருதியும் நீர் வடிவம் தான். 

உண்ணப்பட்ட உணவை செரிமானம் செய்ய வாயில் சுரக்கும் எச்சிலில் இருந்து ஜீரண மண்டலத்தில் சுரக்கப்படும் நொதிகள் மற்றும் நம் உடலின் நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் அனைத்து ஹார்மோன்களும் நீர் வடிவம் தான். 

கரு உருவாக பெண்ணின் முட்டையில் சேர்க்கை புரிய வேண்டிய விந்து வெளியேறுவதும் நீர் வடிவம் தான். 

நாம் தாயின் கருவறைக்குள் இருக்கும் போது நம்மை பத்து மாதங்கள் சுற்றி இருந்து காக்கும் பனிக்குடத்தில் இருப்பதும் ஆம்னியாடிக் திரவம் எனும் நீர் வடிவம் தான். 

இப்படியாக நீரை நம்பியே  மனிதனின் இயங்குவியல் இருக்கிறது.உணவின்றி முப்பது முதல் நாற்பது  நாட்கள் கூட தண்ணீரை மட்டும் அருந்தி (Wet fasting)  நமது உடலில் சேர்த்து வைத்துள்ள கொழுப்பை எரித்து வாழ முடியும். ஆனால் நீரின்றி மூன்று நாட்களை கடப்பது கடினம். (Dry Fasting / Starvation without Water) அதிகபட்சம் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் ( நூறு மணிநேரங்களுக்குள்)  மரணம் சம்பவிக்கும். 

அத்தனை இன்றியமையாதது நீர் சத்து. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நீரை தினமும் எவ்வளவு அருந்த வேண்டும்? அவரவர் தேவைக்கு ஏற்பத் தான். என்ன தேவைக்கு ஏற்பவா? 

ஆம்!

வயது, வாழும் இடத்தின் தட்பவெப்ப சூழ்நிலை, அவரவர் செய்யும் வேலை, உடல் கொண்ட நோய்கள் , அவரவரின் உடல் எடை போன்றவற்றை வைத்து தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். தினமும் எட்டு  கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும் என்ற பொதுவான விதி இருப்பதெல்லாம் பிறகு எதற்காக? 

தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத் தான் அந்த பொதுவான விதி. 

சரி, நமது உடலுக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை எப்படி அறிவது? தண்ணீர் தேவை என்று அனிச்சையாக எழும்.

"தாக உணர்வை" வைத்துத் தான். நமது மூளையில் இதற்கென பிரத்யேக மையம் செயல்படுகிறது. இதன் வேலையே நமது உடலில் உள்ள நீருக்கும் உப்புக்கும் இடையே சமநிலையை தக்கவைப்பதாகும். உடலில் நீர் குறையும் போது உப்பின் அளவு கூடும். அப்போது தாக மையம் உந்தப்பட்டு,நீர் அருந்தத்   தூண்டப்படுவோம்.

உடலில் நீர் கூடும் போது சிறுநீரகங்களுக்கு கட்டளை பறந்து சென்று தேவைக்கு மிகுதியாக உள்ள நீர் வெளியேற்றப்படும். எனவே தாகத்துக்கு ஏற்றவாறு நீர் அருந்தவது சிறப்பானது சரியானதும் கூட. 

வயது முதிர்ந்தவர்களுக்கு மற்றும் சிலருக்கு தாக உணர்வு சரியாக ஏற்படுவதில்லை. தாக உணர்வை ஏற்படுத்தும் இந்த நுட்பம் முறையாக வேலை செய்வதில்லை.

அவர்களுக்கு தாங்கள் சரியாக நீர் அருந்துகிறோமா என்பதை தோராயமாக அறிவதற்கு இருக்கும். வழிமுறைகள் மூன்று முதல் நான்கு  மணிநேரங்களுக்கு ஒரு முறையாவது சிறு நீர் கழிக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும். 

மூன்று முதல் நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும். பகலில் விழித்திருக்கும் போது ( காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரை ) ஐந்து முதல் ஆறு தடவை சிறுநீர் கழிப்பது நல்லது. 

இரவில் ஒரு முறை சிறுநீர் கழிக்க எழுவதும் நார்மல் தான். ஆறு மணிநேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் செல்வது நல்லதல்ல.  சரியான கழிப்பறை வசதிகள் போதாமையால், பயணங்களின் போது சிறுநீர் வராமல் இருக்க பெண்கள் நீரை அருந்தாமல் இருப்பார்கள். இதனால் நீர்சத்து குறைபாடு ஏற்படும்.  இதற்கடுத்த படியாக, சிறுநீரின் நிறத்தை வைத்து நம்மால் நீர் சத்து உட்கொள்ளலின் அளவை அறிந்து கொள்ள முடியும். 

சிறுநீர் - சுத்த வெள்ளை நிறமாக ( Clear)  அல்லது வெளிர் மஞ்சள் ( Pale Yellow or Straw Coloured)  நிறத்தில் இருந்தால் நாம் நீர் குடிக்கும் அளவுகள் சரி என்று தோராயமாகக் கொள்ளலாம்.

சிறுநீர் - அடர் மஞ்சள் ( Dark Yellow)  / பழுப்பு நிறம் ( Brown) / சிவப்பு ( Red)  நிறத்தில் சென்றால் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். சில நேரங்களில் உட்கொள்ளப்படும்  மாத்திரைகளின் நிறம் சிறுநீரில் வெளிப்படும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

தொடர்ந்து அதீத நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் போது சிறுநீர் வெளியேறும் போது சிறுநீர் பாதையில்  எரிச்சல் உணர்வு  ஏற்பட்டு நீர்க்கடுப்பு (Dysuria)  உண்டாகும். இதுவே சிறுநீர் பாதை தொற்றுக்கு வழிவகுக்கும் (Urinary Tract Infection) .

வயது வந்த ஒரு மனிதன் - தினசரி 2 லிட்டர் அளவு சிறுநீராக வெளியேற்றுவது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுக்க உதவும் என்று அறியப்படுகிறது. 

காலை எழுந்ததும் ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் அருந்துவதால் பலன் பாதகம் என்ன? 

இரவு பல மணிநேரங்கள் நீர் அருந்தாமல் இருப்பதால் காலை எழுந்ததும் கழிக்கும் சிறுநீர் - அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கலாம். அது நார்மல் தான். கவலைப்பட வேண்டாம். நல்ல நிலையில் சிறுநீரகங்கள் இயங்கும் ஒருவர் - தாராளமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் காலை நேரத்தில் குடிக்கலாம். 

இதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை. தேவைக்கு அதிகமாக நீர் சேர்ந்தால் அதை சிறுநீரகம் தானாக வெளியேற்றி விடும் என்பதால் ஒரு லிட்டர் வரை பிரச்சனை இல்லை.  அதிகாலை நீர் அருந்துவதால் உடலில் உள்ள கெட்ட நச்சுத்தன்மை (TOXINS)  கொண்ட பொருட்கள் வெளியேற்றப்படுமாமே? 

பல்வேறு வளர்சிதை மாற்ற விளைவுகளால் ரத்தத்தில் அதிகமாக வெளியேற்றப்பட வேண்டிய பொருட்கள் உண்டாகினால் சிறுநீரகங்கள் தானாக சிறுநீர் உற்பத்திய அதிகரித்து அவற்றை வெளியேற்றி விடும். 

உதாரணம், ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் மிதமிஞ்சி ஏறும் போது சிறுநீர் அதிகமாக வெளியேறும்.

இதற்கும் நீர் அருந்துவதற்கும் சம்பந்தமில்லை. 

நாம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும். எவ்வளவு சிறுநீர் வெளியேற வேண்டும் என்பதை நமது உடல் நிர்வகிக்கும். எனினும் மாரத்தான் ஓட்டக்காரர்கள் அதிலும் புதிதாக ஓடுபவர்கள் நீண்ட நேரம் ஓடும் போது தொடர்ந்து தாகம் எடுத்து நீரை அளவுக்கு அதிகமாக குடித்து கொண்டே இருந்தால் அரிதாக அவர்களுக்கு நீர்ச்சத்து மிக அதிகமாகி உடலில் உள்ள சோடியம் உப்பு குறைந்து "ஹைப்போநாட்ரீமியா" ஏற்பட்டு வாந்தி குமட்டல் மயக்கம் ஏற்படலாம். மூளை வீங்கி மரணம் ஏற்படலாம். 

இதை சரிசெய்ய இத்தகையோர் "நீரும் உப்பும் கலந்த கலவையான திரவங்களை" அருந்த வேண்டும். 

நாம் பருகும் நேரடியான நீர் அன்றி ஒருநாளில் பருகும் காபி / டீ ஊற்றிக்கொள்ளும் குழம்பு, குடிக்கும் பழச்சாறுகள், வெள்ளரிக்காய் , நீர்ப்பழம் போன்ற பழங்களில் உள்ள அனைத்தும் நீர் சத்தில் தான் சேரும். 

இதய செயலிழப்பு (Congestive Heart Failure), சிறுநீரக நோய் (Chronic Kidney Disease), கல்லீரல் நோய் (Liver Disease) இருப்பவர்கள் அவரவர் மருத்துவர் பரிந்துரைத்த நீர் அளவுகளை உட்கொள்ள வேண்டும். நீர் எனும் அமிர்தத்தை முறையாக அருந்தி  சிறுநீரகங்களின் நலனையும் நமது உடல் நலனையும் பேணி வாழ்வோம். 

நன்றி.  

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved