🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இளம் வயதினரிடையே அதிகரிக்கும் ரத்த அழுத்த நோய்!

“முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர்.

மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர்.

ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்?

ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி?

மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது.

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.

ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது.

தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம்.

ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும்.

உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்?

உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை.

நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை.

இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம்.

என்ன சாப்பிடலாம்?

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார்.

“உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும்.

அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார்.

நன்றி:பிபிசி

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved