🔴 LIVE | முப்பெரும் விழா 2023


115 சாதியினரையும் சபாஷ் போட வைத்த தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்கள்!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள 116 சாதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், அதிலுள்ள ஒரே ஒருசாதிக்கு (வன்னியர்) மட்டும் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, தன் ஆட்சிகாலத்தின் இறுதி நொடிகளில் அவசர அவசரமாக சட்டத்தை கொண்டு வந்தது.

ஆறாண்டுகாலமாக ஒற்றைச்சான்றிதழ் உட்பட பலகோரிக்கைகளை வலியுறுத்தி DNT சமுதாய மக்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தியும், ஒன்றைக்கூட நிறைவேற்றாத எடப்பாடி அரசு, அம்மக்களை மேலும் பாதிக்கின்ற வகையில் 68 சாதிகளோடு மேலும் 25 சாதிகளை இணைத்து 7 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி, DNT என்ற அ,டையாளத்தையே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது அம்மக்களை கொதிப்படையச்செய்தது. இதனால் வெகுண்டெழுந்த DNT சமுதாயத்தினர் எடப்பாடி அரசுக்கு எதிராக கடந்த சட்டமன்றத் தேர்தலில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து எடப்பாடி ஆட்சியை தூக்கி எரிந்தனர்.

இச்சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய மராத்தா இடஒதுக்கீடு வழக்கு உட்பட பலவழக்குகளில் ஒருகுறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிரான தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், சமீபத்தில் நீதிமன்ற காலிபணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிட்ட விண்ணப்பத்தில், MBC பிரிவினருக்கு 20 விழுக்காடு வழங்கும் நடைமுறையே தொடரும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அரசை எப்படியாவது நிர்ப்பந்தப்படுத்தி 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் பாமக ஈடுபட்டுவருகிறது.

உள் இடஒதுக்கீட்டால் பிற 115 சமுதாயத்தைச்சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால கல்வியும், வேலைவாய்ப்பு உரிமையும் பறிபோவதை தடுத்து நிறுத்திடும் வகையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இச்சட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று 115 சமுதாயங்களும் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் வாக்கு அரசியலையே அரசியல்கட்சிகள் முன்னெடுக்கும் என்பதை கடந்தகால அனுபவங்கள் உணர்த்துவதால், MBC யில் உள்ள வன்னியர் தவிர்த்த 115 சாதிகளும் இணைந்து சமூகநீதிக் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட தீர்மானித்தன.

அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகநீதிக்கூட்டமைப்பு சார்பில் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மதுரையில் நடைபெற்றது. இதில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டி தமிழகத்திலுள்ள அனைத்து முன்னனி நாளிதழ்களுக்கும், செய்தி சேனல்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. பொதுவாக சாதிய அமைப்புகளின் கூட்டங்களில் சலசலப்பும், கைகலப்பும் ஏற்படுவது வாடிக்கை. ஆகையால் 115 சாதிகள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தினால் கண்டிப்பாக ஏககளோபரம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஊடகத்துறையினர் வந்திருந்தனர். ஆனால் கூட்டம் மிகவும் கட்டுக்கோப்பாக அமைதியான முறையில், பரஸ்பர நட்புடன் நடைபெற்று முடிந்தது. இது செய்தியாளருக்கே ஆச்சரியமாக இருந்தது. அதை உறுதிபடுத்தும் வகையில் முன்னனி நாளிதழான தமிழ் இந்துவின் இணைய பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

இக்கூட்டத்தில் நாமக்கல் திரு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் கலந்துகொண்ட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டியுள்ளது. இதேபோன்ற கருத்தை வெளிப்படுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஒருங்கிணைப்பாளர்களும், இராணுவக்கட்டுப்பாட்டோடும், மேடை நாகரீகத்தோடும், கூட்டத்திற்குண்டான கண்ணியத்தோடும், ஒழுக்கத்தோடும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் நடந்துகொண்டதாக பாராட்டு தெரிவித்தனர். 

தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், பிற சகோதர சமுதாயங்களோடு இணக்கமாக, நம்மைவிட சிறுபான்மை, சேவை சமூகங்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் அளித்து, அவையின் கண்ணியத்தைக்காத்து, சமுதாயத்தை பெருமையடையச்செய்த திரு.பழனிச்சாமி, திரு.சௌந்திரபாண்டியன், திரு.தங்கவேல், திரு.கார்த்திகைச்சாமி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved