🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொங்கு மண்டலத்தில் உருவாகும் புதிய கூட்டணி! - ஈரோட்டில் அடித்தளம்.

வன்னியர் உள்இடஒதுக்கீடு விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள 115 சமுதாயங்கள் இணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அரசியல் அதிகாரம் எட்டாக்கனியாகவுள்ள பல சமுதாயங்கள் ஒன்றுடன் ஒன்று நட்பு பாராட்டி, இடஒதுக்கீட்டை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது அச்சமுதாயங்களிடையே  பரஸ்பர நம்பிக்கையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


அந்தவகையில் மேற்குமண்டலத்தில் கோவை,ஈரோடு,திருப்பூர், நாமக்கல், கரூர் போன்ற பகுதிகளில் பரவலாக வசிக்கும் தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர் சமுதாயங்கள் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளன. தொட்டிய நாயக்கர் அடர்த்தியாக உள்ள ஈரோடு , நாமக்கல்,கரூர் மாவட்டங்களில் அதற்கான அச்சாரமிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில்  கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் திரு.முனுசாமிக் கவுண்டர் ஏற்பாட்டின் பேரில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த பட்டக்காரர் திரு.நடராஜ், சத்தியமங்கலம் திரு.பவுல்ராஜ், கூகலூர் திரு.பிரதாபன் ஆகியோர் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இவ்விரண்டு சமுதாயமும் இணைந்து இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வுக்கூட்டங்களை சத்தியமங்கலம் பகுதிகளில் நேற்று (01.08.2021) நடத்தினர். மேலும் இச்சமூகங்களுடம் சமூகநீதி கூட்டமைப்பிலுள்ள போயர், வண்ணார்,நாவிதர்,  கொங்கு செட்டியார்கள், தெலுங்குபட்டி செட்டி, ஆண்டிப்பண்டாரம் சமுதாயத்தினரையும் இணைக்கும் பட்சத்தில், ஈரோடு மாவட்டத்தில் இச்சமூகத்தினருக்கு அரசியல் அந்தஸ்துகிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகும்.


கரூர் மாவட்டத்தில் வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த இராயனூர் முருகேசன் இப்பிரச்சினையில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். இவர் தொட்டிய நாயக்கர் உக்கியஸ்தர்களிடன் நல்ல நட்புடன் இருப்பதால் ஒருகோடி கையெழுத்து இயக்கத்தை தொட்டியநாயக்கர் சமுதாயத்தினரையும் இணைத்து செயல்பட்டு வருகிறார். நாமக்கல்லில் ஏற்கனவே தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை சிறப்பான பணியினை முன்னெடுத்துவருவது கடந்த சட்டமன்றத்தேர்தல்களிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது.  இடஒதுக்கீடு விவகாரம் என்பது நீண்டகால போராட்டம் என்பதால் வரும் காலங்களில் இச்சமுதாயங்களிடையே நல்ல புரிந்துணர்வும், நட்பும் ஏற்பட வழியிருக்கிறது. இது எல்லா சமுதாயங்களுக்கும் புதுவலிமையை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


இன்னும் திண்டுக்கல், தேனி,விருதுநகர்,தூத்துக்குடி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் 115 சமுதாயங்களுடன் இணைந்து பணியாற்றுவது அரசியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும். கிடைக்கின்ற இந்த சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி வாய்ப்புள்ள இடங்களில் கம்பளத்தாரும், பிற பகுதிகளில் சகோதர சமுதாயங்களையும் ஆதாரித்து அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்பதே சமுதாய மக்களின் விருப்பமாக உள்ளது. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved