🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய தலைவர்கள் -சத்தியமங்கலம். திரு.பட்டக்காரர்.P.நடராஜ்

பட்டக்காரர்.திரு.T.நடராஜ் அவர்கள் 23.07.1947-இல் ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் அருகேயுள்ள, மாரனூர் கிராமத்தில் திரு.திம்ம நாயக்கர் – திருமதி.ரங்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி இறுதியாண்டு வரை படித்துள்ள திரு.நடராஜ் அவர்களுக்கு திருமதி.இந்திராணி என்ற மனைவியும், திரு.N.பிரபு மற்றும் திரு.N.சசிக்குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.


பாரம்பரியமாக  “பட்டக்காரர்” பட்டம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த திரு.நடராஜ் அவர்கள் 1967-இல் ஆசிரியராக சிலகாலம் பணியாற்றியவர், 1972-இல் மின் கட்டண உயர்வுக்கெதிரான விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று, தனது ஆசிரியர் பணியைத்துறந்து சிறைசென்றார். பின்னர், 1978-இல் கிராம முன்சீப்பாக பொறுப்பேற்று பணியாற்றினார். கிராம முன்சீப் பதவி பெரிய செல்வந்தர்கள், நிலச்சுவான்தார்கள் போன்ற சமூக அந்தஸ்துள்ளவர்களுக்கே வழங்கப்பட்டு வந்தது, அப்படி இராஜகம்பளத்து சமுதாயத்தைச் சேர்ந்தோர் மிக அதிகப்படியாக கிராம முன்சீப்களாக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் திரு.நடராஜ் அவர்களின் பாரம்பரியத்திற்கு மற்றுமொரு சான்றாக விளங்குகிறது. இதுதவிர 2000-முதல் கீழ்பவானி முறைநீர் பாசனசபை-U1 தலைவராக பதவி வகித்து, குடிமராமத்துப்பணிகளை சிறப்பான முறையில் செயல்படுத்தி, கடைமடை வரை நீரை சேதாரமின்றி கொண்டு சென்று விவசாயிகளின் துயர் துடைத்தார். மேலும் 2019-முதல் மாரனூர் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கின்றார்.

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்திலுள்ள நாற்பதற்கும் மேற்பட்ட கம்பளத்து சமுதாய மக்கள் வாழும் கிராமங்களில் கம்பளத்தார்கள் இல்லத்தில் நடைபெறும் சகல சுக-துக்கங்களிலும் முதன்மையானவராக இருந்து சீர்முறைகளைச் செய்வதுடன், கம்பளத்து சமுதாய மக்களின் குடும்பப் பிணக்குகள், தகராறு,  வம்பு, வழக்குகள் போன்றவற்றை தீர்த்துவைக்கும் பொறுப்பும் பட்டக்காரருக்கு உண்டு. 1999-வாக்கில் பிற சமுதாயத்துடன் ஏற்பட்ட கடும் மோதலை சுமூகமாக முடித்து வைத்து, இரு சமுதாயத்தினரும் இணக்கமாக வாழ வழிவகை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது வாழ்வின் பெரும்பாலான நாட்களை சமுதாயப்பணிக்கே செலவிட்டவர்கள் திரு.நடராஜ் அவர்கள் மட்டுமல்ல, அவரின் முன்னோர்களுமே என்பதை இளம் தலைமுறை கவனித்தில் கொள்ளவேண்டிய சிறப்பம்சமாகும்.


தனது சமுதாயப்பணியை சத்தியமங்கல சுற்றுவட்டார கிராம அளவில் மட்டுமே சுருக்கிக்கொண்டவரல்ல திரு.பட்டக்காரர் அவர்கள். த.வீ.க.ப.கழகத்தில் இணைந்து சமுதாயப்பணியாற்றியவர், 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ஈரோடு மாவட்ட அவைத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அதன்பின் இளம் தலைமுறைக்கு வழிவிட்டு அப்பதவியிலிருந்து விடுவித்துக்கொண்டார். பதவியில் இல்லாத நிலையிலும் த.வீ.க.ப.கழகம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுடன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கு வழிகாட்டியாக இருந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தை அடையாளப்படுத்தவே அமைப்பில் பொறுப்பு வகித்தவரே தவிர, சமுதாயத்திலுள்ள பிற அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் பாகுபாடின்றி கலந்துகொண்டு “பட்டக்காரரின்” பெருந்தன்மையையும், கௌரவத்தையும், மரியாதையையும் காப்பாற்றி வருகிறார். அந்தவகையில் உள்ளூர் அமைப்புகள்,அகில இந்திய தெலுங்கு சம்மேளனம்,விடுதலைக்களம் களம் போன்ற சமுதாய அமைப்பின் கூட்டங்களில் கலந்து கொள்பவர், எழுபது வயதைக் கடந்த நிலையிலும், 600 கிமீ தூரம் பயணம் செய்து சென்னை.வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நடத்தும் ஒவ்வொரு விழாவிலும் கலந்து கொண்டு நிர்வாகத்தை ஊக்கப்படுத்தி வருகிறார் திரு.பட்டக்காரர் அவர்கள்.

மிகநீண்ட பாரம்பரியமும், பாரம்பரியத்திற்கேற்ப பண்பு நலன்களையும் பெற்றுள்ள திரு.பட்டக்காரர் அவர்கள் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து சமுதாயத்திற்கு வழிகாட்டியாய் இருந்து இளையதலைமுறைக்கு வழிகாட்டிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved