🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மக்களின் மனங்களில் வாழும் மருத்துவராய் புகழ்பெறுக! - இளம் மருத்துவருக்கு வாழ்த்துகள்!

Dr.P.சுரேந்தர்.M.B.B.S.,M.S (GS) அவர்கள் 23.12.1993-இல் திருப்பூரில் திரு.பழனிச்சாமி- திருமதி.சித்ரா தம்பதியினருக்கு மூத்த மகனாகப்பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரியும், சகோதரரும் உள்ளனர். திரு.பழனிச்சாமி அவர்கள் திருப்பூரில் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். திருப்பூர், கூலிபாளையத்திலுள்ள வித்ய விகாஸ் பள்ளியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கிய சுரேந்தர் அவர்கள், தொடக்கம் முதலே வகுப்பில் முதல்மாணவனாக இருந்தார். இதன் மூலம் ஆசிரியர்களின் அன்பைப்பெற்றவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 475/500  மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சிபெற்றார். மேல்நிலைக்கல்வியை திருச்செங்கோட்டிலுள்ள வித்யவிகாஸ் பள்ளியில் தொடர்ந்தவர், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1182/1200 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாவதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றும் தேர்ச்சியானார்.


இதன்மூலம் மாணவ-மாணவியரின் மருத்துவக்கனவு சுரேந்தருக்கு எளிதாக நிறைவேறியது. மிகக்குறைந்த செலவில் மருத்துவத்துறையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப்பெற்றவர், தனது சொந்த ஊருக்கு அருகேயுள்ள புகழ்பெற்ற கோவை அரசு மருத்துவக்கல்லூரியை தேர்ந்தெடுத்து மருத்துவப்படிப்பை தொடங்கினார். பள்ளியில் முதல் வகுப்பில் தொடங்கிய அதே உத்வேகத்தோடும், ஆர்வத்தோடும் 51/2 ஆண்டுகால மருத்துவப்படிப்பிலும் தொடர்ந்தவர், அங்கும் தன் முத்திரைபதித்து மருத்துவப்பட்டம் பெற்றார். அதனைத்தொடர்ந்து மேற்படிப்பை தொடர விரும்பிய சுரேந்தருக்கு கடுமையான சவால் காத்திருந்தது. அதுவரை நுழைவுத்தேர்வு என்பதே அறிமுகமில்லாத நிலையில். உயர் மருத்துவப்படிப்புக்கு "நீட்" தேர்வை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை அநாயசமாக எதிர்கொண்ட சுரேந்தர் 2018-இல் நீட் தேர்வை எதிர்கொண்டு அகில இந்திய அளவில் 1028-வது ரேங்க் பெற்று சாதித்துக்காட்டினார். இதன்மூலம் நாட்டிலேயே புகழ்பெற்ற சென்னை ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரியில் MS (Master of Surgeon) படிக்கும் வாய்ப்பைப்பெற்றார்.

2019-இல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச்செயலாளராக இருந்த திரு.வரதராஜன் அவர்களின் மூத்த மகள் Dr.அருணா M.B.B.S.,அவர்களின் கரம்பற்றி திருமண பந்தத்தில் இணைந்த சுரேந்தர் அவர்கள் தற்பொழுது. பொதுமருத்துவத்தில் முதுகலை அறுவைசிகிச்சை- MS (General Surgeon) பட்டம்பெற்று, தனது சொந்த ஊரான திருப்பூரில் உள்ள "ஆதார் பல்நோக்கு மருத்துமனை" (Aadhaar Multi Specialty) யில் மருத்துவராக வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.


மருத்துவ பின்புலமே, வழிகாட்டுதலே இல்லாத நடுத்தர சாமானிய குடும்பத்தில் பிறந்து, தொடக்கம் முதலே படிப்பில் முழு கவனத்தை செலுத்தி, தனது கடின உழைப்பால் இலவச கட்டணத்தில் முதுகலை படிப்புவரை முடித்து சாதனை புரிந்த சுரேந்தர், சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்கள் கொண்டாடும் மக்கள் மருத்துவராக, தன் மருத்துவ சேவையின் மூலம் எளிய மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெறும் வகையில் பணியாற்றி,  கம்பளத்தாரின் கருணை உள்ளத்தை மருத்துவத்துறையிலும் நிலைக்கச்செய்து, ஈன்ற பெற்றோருக்கும், பிறந்த சமுதாயத்திற்கும் புகழ் சேர்க்க வேண்டுமாய் வேண்டி, தமிழகத்திலுள்ள லட்சக்கணக்கான கம்பளத்தார்களின் சார்பில் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved