🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கை நழுவிப்போன தில்லானா மோகனாம்பாள்! கம்பளத்தாரை தொடரும் துரதிஷ்டம்!

பல நூற்றாண்டுகால வரலாறு உள்ள கம்பளதார் சமுதாயத்திற்கு, இன்றைய தேதிவரை அடையாளமாக இருப்பது இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள், மன்னர்களும் தான். நவீனகால அடையாளங்களை அரசியல் அல்லது திரைத்துறையில் கோலோச்சுவதின் வாயிலாகவே அச்சமுதாயத்தின் மீதான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அரசியல் களத்தில் அன்று முதல் இன்று வரை பலர் வந்துபோனாலும், ஆளுமையால் அரசியல் களத்தில் நீடித்த நிலையான புகழைப்பெற்றவர் மறைந்த க.சுப்பு மட்டுமே.அதேபோல் திரைத்துறையில்  புகழ்கொடி நாட்டியவர் மறைந்த இயக்குனர் மாணிவாசகம். ஆனால் திரைத்துறைக்கு முன்பான நாடகத்துறையில் கால்பதித்த ஒருவர் கம்பளத்தார் சமுதாயத்தில் இருப்பது என்பது அதிசயம். அதுவும் கட்டுப்பாடுகள் குறிப்பாக பெண்கள் மீதான அபரீதமான கட்டுப்பாடுகள் இன்று வரை தொடரும் கம்பளத்தார் சமூகத்தில், 1950-களிலேயே ஒரு பெண்மணி நாடகத்துறையில் நுழைவது என்பது தான் அதிசயமே அதிசயத்துப்போகும் அதிசயம். இந்த செய்தி நம் காதுகளுக்கு எட்டியபொழுது அப்படியொரு வியப்பைத்தான் தந்தது.

கம்பளத்தார் சமுதாயத்தில் "ஒ...அப்படியா" என்று வியக்குமளவிற்கான தனிச்சிறப்பு வாய்ந்தவர்களை அடையாளம் கண்டு அறிமுகம் செய்பவர் கோவை.பிரகாஷ்தேவன். அப்படித்தான் ஒருநாள் திருப்பூரைச் சேர்ந்த திருமதி. தங்கமணி அம்மாளை நமக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தங்கமணி அம்மாளை தொடர்புகொண்டு பேசியபொழுது,தன்னைப்பற்றியும், நாடகத்துறைக்கு சென்றதைப்பற்றியும் நம்மிடம் பேசினார். இந்த சுவாரசியமான விசயத்தை தவமணி அம்மாள் பேச்சு வழக்கிலேயே கேட்போம்...

திருப்பூர்-பாப்பநாயக்கன்பாளையத்தில் 1952-ல் பிறந்தேன். அப்பா பேரு நஞ்சப்பன், அம்மா பேரு நஞ்சம்மாள். எங்கூடப்பிறந்தவங்க ஒரு அண்ணன், ஒரு தம்பி. அப்பா நூல்மில்ல வேலை செஞ்சதால கல்யாணுத்துக்கு முன்னாலயே கம்யூனிஸ்ட் கட்சியில இருந்தாரு. போராட்டம் பண்ணி அடிபட்டு ஜெயிலுக்கெல்லாம் போயிருக்காரு. அப்பாவுக்கு தியாகி பென்சன் சாகற வரைக்கும் கொடுத்தாங்க. அம்மா நாங்க சின்ன வயசா இருந்தப்பவே செத்துப்போனதால அப்பா செத்ததுக்கப்புறம் பென்சன் நின்னுபோச்சு.

ஒன்பது,பத்து வயசு எனக்கு இருக்கிறப்போ "ஸ்ரீதேவி நாடகசபா"க்காரங்க நாடகம்போட திருப்பூருக்கு வந்தாங்க. சினிமா டைரக்டர் மணிரத்தினத்தோட அக்கா வீட்டுக்காரரு "ரத்தினம்"ங்கிறவருதான் அந்த கம்பெனி முதலாளி. அப்பெல்லாம் நாடகம்போட ஒரு ஊருக்கு வந்தாங்கன்னா ஆறேழு மாசம் தொடர்ந்து அதே ஊர்ல நாடகம் போடுவாங்க. வசூல் குறையிற வரைக்கும் அதே ஊர்ல நாடகம் போடுவாங்க. அந்த சமயத்துல நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு சொல்லி வீட்டுக்கு வந்துட்டேன். சரி... நீ இங்கே சும்மா இருந்தா சரிப்பட்டு வராது, இந்த ஊரு உலகத்தைப்பத்தி நீ தெரிஞ்சுக்கனும்னு சொல்லி (பொதுவுடமை சிந்தனைவாதியல்லவா), நாடகக் கம்பெனி திருப்பூருக்கு வந்திருக்குன்னு சொல்லி கூட்டிகிட்டுபோயி "ஸ்ரீதேவி நாடக சபா"ல சேர்த்துவிட்டாரு எங்க அப்பா.

திருப்பூர்ல நாடகம் முடிச்சுப்போனப்போ முதல்ல துறையூருக்கு கூட்டிகிட்டுப்போனாங்க. அங்கதான் என்னோட முதல் நாடக அரங்கேற்றம். அதில சின்ன சின்ன வேசத்துல நடிச்சேன். மனோகர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் பார்டிக்காரங்கெல்லாம வருவாங்க. ஏ.பி.நாகராஜன் சாரும் அடிக்கடி வருவாரு. நாகராஜன் சாரு மாதிரி பலபேருகிட்ட கதை வாங்கி நாடகம் போடுவாங்க. பலவேசம் போட்ருக்கேன். குறிப்பா சொல்லனும்னா கிருஷ்ணலீலா நாடகத்தில பலராமன் வேசத்துல நடிச்சிருக்கேன். நிறைகுடம் நாடகத்தில நடிச்சிருக்கேன். அப்புறம் போஸ்ட் மேன் வேசம் போட்ருக்கேன்.

எங்க நாடகக்கம்பெனிக்கு அந்தக்கால நடிகர்கள் தங்கராசு, மனோரமா, சிவாஜி, நாகேஷ், எஸ்.எஸ்.ஆர்.பாலையா போன்ற நடிகருக எல்லாம் வருவாங்க. துறையூர் முடிச்சு பெரம்பலூர், அரியலூர், திருச்சின்னு அங்கங்கே நாடகம் போட்டாங்க.  அப்படித்தான் ஏ.பி.நாகராஜன் சார்கிட்ட கதைவாங்கி "தில்லான மோகனாம்பாள்" நாடகம் போட்டாங்க. அதுல நான் நடிச்சிருக்கேன். அதுக்கப்புறம் தில்லான மோகனாம்பாள் சினிமாவா எடுக்கையில சிவாஜி, பாலையா மாட்டு வண்டியில வந்து "மோகனாம்பாள் " வீட்டுக்கு போற வழி எது?ன்னு எங்கிட்ட கேட்பாங்க. அந்த சீன்ல நடிச்ச நானு, இப்படி போயி... அப்படிப்போகனும்னு சொல்லுவேன். அதுக்கப்புறம் நெறைய சினிமா வாய்ப்புக வந்திச்சு.

நான் நாடகத்தில நடிச்சிட்டு இருக்கிறப்பவே அண்ணனையும், தம்பியையும் கூட்டிகிட்டு வந்து நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டாரு எங்கப்பா. ஆம்பளைகள எல்லாம் நாடகம் நடக்கிற கொட்டகையிலையே தங்க வெச்சுருவாங்க. பொம்பளைப்புள்ளைங்களுக்கு மட்டும் பக்கத்தில வீடெடுத்து தங்க வைப்பாங்க. எங்களுக்கு அங்கயே சமைச்சு சாப்பாடெல்லாம் போட்ருவாங்க. நடனம், நாட்டியம், பாட்டெல்லாம் சொல்லிக்கொடுப்பாங்க. ரிகர்சலுக்கும், நடிக்கவும் மட்டும் கொட்டகைக்கு போயிட்டு போயிட்டு வந்திருவோம். 

நாடக சபாவில சேர்ந்ததில இருந்து நாலஞ்சு வருசமா வூட்டுக்கே வர்ல. கடைசியா துறையூர்ல நாடகம் போடீல தான் தாத்தாவும், பாட்டியும் என்னைப்பார்க்கனும்னு சொன்னதால அப்பா வந்து வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துட்டாரு. அப்பெல்லாம் மாசா மாசமெல்லாம் சம்பளம் கொடுக்க மாட்டாங்க. சப்பாடு போட்ருவாங்க. ஊருக்கு போகையில தான் காசு கொடுப்பாங்க. நாலஞ்சு வருசமா நடிச்சதுக்கு ஐநூறோ, அறுநூறோ அப்பா கிட்ட கொடுத்தா நியாபகம். ஊருக்கு வந்ததும் புள்ள வயசுக்கு வர்ற மாதிரி இருக்கு, ஒத்தப்புள்ளைன்னு தாத்தா, பாட்டி  மறுபடியும் நாடகத்துக்கு திருப்பி அனுப்பமாட்டேன்னு சொல்லீட்டாங்க.  

நான் போகலேன்னு தெரிஞ்சதும் அண்ணனும், தம்பியும் நாங்களும் இருக்கமாட்டோம்னு வூட்டுக்கு வந்திட்டாங்க. அதுக்கப்புறம் கொஞ்ச வருசம் கழிச்சு ஊத்துக்குளி பக்கம் கட்டிக் கொடுத்தாங்க.வூட்டுக்காரரு பேரு நஞ்சப்பன்.  அந்தக்காலத்துல மாட்டு வண்டி ஓட்டிகிட்டு இருந்தாரு. திருப்பூர் டவுன்ல இருக்கிற சந்தையில இருந்து மாட்டு வண்டியில மளிகைச் சாமனெல்லாம் ஏத்தி, கிராமத்தில இருக்கிற கடைகளுக்கு அனுப்புவாங்க. அதேபோல கிராமத்தில வெளையிறத காய்கறி, வாழத்தாரு,இலை எல்லாம் சந்தைக்கு மாட்டு வண்டியில அனுப்புவாங்க. 

எங்களுக்கு கொஞ்சநாள்ல பொம்பளப்பிள்ளைங்க ,ரெட்டக்குழந்தைங்க பிறந்தாங்க, ராமு, லட்சுமின்னு பேரு. அதுக்கப்புறம் ஒரு பையன் தனபால் பொறந்தான்.  கடைசியா பொறந்த பொண்ணு பேரு மோகனாம்பாள். முதல் ரெண்டு பொண்ணுகளும் படிக்கலை,  இங்கயே பக்கத்துல கட்டிக்கொடுத்துட்டோம்.  ஒரே பையன் தனபால்,    கடைசி பொண்ணு பேரு மோகனாம்பாள். அந்தக்காலத்திலேயே நாடகத்தில நடிச்சிருக்கீங்க ஏன் குழந்தைகளை படிக்க வைக்கலைன்னு கேள்வி எழுப்பினோம். பெரிய புள்ளைக ரெண்டும் படிக்கலை, தனபால படிக்கிறதுக்கு அனுப்பினோம். பசங்ககூடச்சேர்ந்து ஊரச்சுத்திட்டு, குரும்பு பண்ணிகிட்டு பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு சொல்லிட்டான். கடைசி புள்ள மோகனாம்பாலை மட்டும் பி.காம் படிக்க வெச்சுட்டோம். அவ இப்போ தனியார் கம்பெனியில அக்கவுன்டன்ட் வேலைக்குப்போறா. 

எங்க வீட்டுக்காரரு செக்யூரிட்டி வேலை பார்க்கராரு. நாங்க "உடுமலு" குலத்துக்காரங்க. நல்லா அழகா இருக்கிற, நடிக்க வாம்மான்னு "சபா"க்காரங்க ரெண்டு, மூனு தடவை வந்து கூப்பிட்டாங்க. தாத்தா பாட்டி முடியவே முடியாது நாங்க அனுப்பமாட்டோம்னு சொல்லீட்டாங்க. அதுக்கப்புறம் யாருகூடவும் தொடர்பு இல்லை. புள்ளைக பேரன், பேத்தீங்க எல்லாம் பக்கத்திலேயே இருக்காங்க. நானும் வூட்டுக்காரரும் தனியா இருக்கோம். அவுக அவுக ஏதோ நல்லா இருக்காங்க..ன்னு முடிச்சார் தவமணி அம்மாள்.

இப்பொழுது உங்களுடன் நடிச்சவங்க யாராவது சினிமாவுல இருக்காங்களான்னு கேட்டோம். இருக்காங்க புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரு நடிக்கறாங்க. நல்ல பேரு வாயில வரமாட்டீங்குது என்றார். 

கம்பளத்தாரில் ஒரு "தில்லான மோகனாம்பாள்" ஆக வேண்டியவர், வழக்கமாக கம்பளத்தாரை தொடரும் துரதிஷ்டம், எல்லாதுறையிலும் மயிரிலையில் வாய்ப்புகள் நழுவிக்கொண்டே செல்கிறது அன்று முதல் இன்று வரை.

காலம் மாறும்! கம்பளதார் கொடி பறக்கும்!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved