🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மகா சக்தியின் மூல வடிவம் பெண்!- மீண்டும் நிரூபித்த மாளவிகா ஹெக்டே!

இந்தியாவின் மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனம் தான். அதன் நிறுவனர் இந்தியாவிலேயே மிக அதிகமான காப்பித் தோட்டங்களுக்கு சொந்தக்காரர். நேர்மையும் பண்பும் நிறைந்தவர். பாரம்பரிய செல்வந்தர் குடும்பத்தின் வாரிசு.

அவருக்கு அவர் குடும்பத்தைப் போன்றே இன்னுமொரு செல்வ குடும்பத்திலிருந்து வந்த அன்பான மனைவி. ஆசைக்கும், ஆஸ்திக்குமாக இரண்டு அருமையான குழந்தைகள்.

மிக நன்றாகச் சென்று கொண்டிருந்த தொழிலில் ஒரு சிறு சறுக்கல், அதை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல், 2019 ஜூலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

"நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை முடக்கி விட்டது. வங்கி கடன் கணக்குகள், நிறுவன பரிவர்த்தனைகள் அனைத்தும் முடங்கிவிட்டன. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர்" என்று விரக்தியுடன் தற்கொலைக் கடிதத்தில் அவர் கூறியிருந்தார்.

அந்த சம்பவத்தில் அனைவரையும் கலங்கவைத்தது தனது கணவரின் முகத்தை பார்க்கக் கூட மன உறுதியில்லாமல் கதறி தவித்த அவரது மனைவியின் துயரம்.

அந்தப் பெண்ணுக்கு அவரது அன்பான கணவன் விட்டுச்சென்ற நினைவுகளைப் போன்றே, அவர் பாக்கி வைத்து விட்டுச் சென்ற கடன்களும் மிக அதிகமாக இருந்தது. அதாவது சுமார் 7,000 கோடிகள்.

இந்தச் சூழலில் அந்தப் பெண்ணைச் சுற்றி வளைத்த கஷ்டங்கள், எப்பேற்பட்ட இரும்பு மனிதர்களையும் உருக்கிக் குடித்திருக்கும்.

ஒருபுறம் கணவரின் எதிர்பாராத மரணம். மறுபுறம் ரூ. ரூ.7,000 கோடி கடனில் சிக்கி மூழ்கி வரும் கணவரின் கனவு நிறுவனம்.

நிறுவனத்தில் பின்னி பிணைந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம்.

கடனை திருப்ப செலுத்த நெருக்கும் வங்கிகள், கடன்காரர்கள்.

இது எதுவும் புரியாத வயதில் இரண்டு பிள்ளைகள்.

இப்படியான சவால்கள் அந்த பெண் முன் நிற்க, மிகக் கடினமான, துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார் அப்பெண்.

மனத்தை தேற்றிக்கொண்டு தன் கணவரின் நிறுவனத்தில் தலைமைப் பெறுப்பை ஏற்றார். அதுவரை பெரிதாக அலுவலகம் பக்கமே எட்டிப் பார்க்காத அவர், தன் கணவரின் அலுவலகப் படிகளில் ஏறினார். அதன் நிர்வாக பணிகள் அனைத்தையும் கற்று தேர்ந்தார்.

2020ல் அதை வழிநடத்தும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். தன் அன்புக் கணவர் விட்டுச் சென்ற அதே CEO நாற்காலியில் அமர்ந்தார்.

முதலில் பத்து கோடி, இருபது என  சிறு சிறு கடன்களை அடைத்தார்.

பெரிய கடன்களை செலுத்த வங்கிகளிடம் அவகாசம் கேட்டு பெற்றார்.

லாபம் தராத இடங்களில் இருந்த கிளைகளை மூடினார். முக்கிய வணிக வளாகங்களில் புதிய கிளைகள் திறந்தார்.

தொழிலாளர்களோடு நல்லுறவில் இருந்தார். அவர்களும் தோள் கொடுக்க தயங்காமல் நின்றனர்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கான வலியை ஏற்றுக்கொண்டனர். கடன்களை அடைக்க குடும்ப சொத்துக்கள், நிறுவனத்தின் சொத்துக்கள் என பலவும் விற்கப்பட்டன.

அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக, ஒரே ஆண்டில் நிறுவனத்தின் கடன் பாதியாகக் குறைந்தது.

மார்ச் 2019 இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் கடன் ரூ. 7,200 கோடி. மார்ச் 2020 இறுதியில் அது ரூ. 3,100 கோடியாகக் குறைக்கப்பட்டது.

அந்த நிறுவனத்தை நம்பி முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் புது நம்பிக்கை பிறந்தது.

நிறுவன ஊழியர்களிடம் முழு உற்சாகம் புதிதாக பிறந்தது.

இதோ மீண்டும் தன்னை கட்டியெழுப்பி நிமிர்ந்து நிற்கிறது அந்த நிறுவனம்.

அந்த நிறுவனம் தான் Coffe Day.

தன் கணவரின் வி.ஜி.சித்தார்த்தாவின் கனவு நிறுவனத்தை, மீண்டும் தூக்கி நிறுத்திய அந்தப் பெண் தான் மாளவிகா ஹெக்டே.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் செல்ல மகள்.

அடுத்து வருவதும் இதைப் போன்றதொரு சம்பவம் தான்.

அவர் ஒரு பெண் பொறியாளர். அவரது தந்தை ஒரு புகழ் பெற்ற மருத்துவர். கல்வியே பெண்களை சுயமரியாதையுடன் உலகில் வாழ வைக்கும் என திடமாக நம்பியவர். எனவே தன் மகளை நன்கு படிக்க வைத்தார். மகளும் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள பி.வி.பூமரட்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் துறையில் (EEE) மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். அதற்கான தங்கப்பதக்கத்தைக் கூட வென்றார். அதன் பின்னர் மேற்படிப்பிற்காக பெங்களூருவில் உள்ள  இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் கல்லூரியில் சேர்ந்து ,கணிணித் துறையில் எம்டெக் பட்டம் பெற்றார். அதிலும் மாநிலத்தில் முதலிடம். அதற்காக தங்கப் பதக்கம் பெற்றார்.

படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தவரின் கண்களில் அன்றைய நாளிதழில் வந்த ஒரு வேலை வாய்ப்புச் செய்தி தென்பட்டது. அது டாடா குழுமத்தின் டாடா இன்ஜினியரிங் அண்ட் லோகோமோட்டிவ் கம்பெனி (TELCO) சுருக்கமாக டெல்கோ என்ற நிறுவனம் தந்த விளம்பரம். அதில் அந்நிறுவனத்தில் காலியாக இருந்த பணியிடங்களைக் குறிப்பிட்டு இதற்காக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடைசி வரியில் பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இளம் வயதிலிருந்தே சுயமரியாதை சிந்தனையுடன் வளர்க்கப்பட்ட அப்பெண்ணால் இதை ஏற்க முடியவில்லை. அந்த நிறுவனப் பணிக்கான அனைத்துத் தகுதிகளும், திறமைகளும் தனக்கு இருந்த போதிலும், பெண் என்பதற்காக தனக்கு பணி மறுக்கப்படுகிறதே என்று வேதனைப்பட்டார். தன் வேதனையை அப்படியே ஒரு போஸ்ட்கார்டில் கொட்டினார். டாடா போன்ற பெரிய நிறுனவங்களே இப்படி பாலினப் பாகுபாடு காட்டலாமா? என்று அதில் எழுதினார். அதை டாடா குழுமங்களின் தலைவரான ஜே.ஆர்.டி டாடாவிற்கே அனுப்பி வைத்தார். தகவலைப் படித்ததும் பதறிப் போனார் டாடா. உடனடியாக தன் நிறுவன அதிகாரிகளை அழைத்து, இந்தப் பணிக்கான தகுதிகள் இந்தப் பெண்ணுக்கு இருந்தால், அவரை உடனடியாக பணியில் அமர்த்துங்கள் என்று உத்தரவிட்டார். உத்திரவிட்ட கையோடு இனி டாடா குழும நிறுவனங்கள் எவற்றிலும் பணிகளுக்கான நடைமுறையில் ஆண் பெண் என எந்தப் பாகுபாடும் காட்டப்படக்கூடாது என ஆணையே பிறப்பித்தார். அந்தப் பெண்ணுக்கு பணி கிடைத்தது.

தன் துணிச்சலான செயல்பாட்டால் ஒரு பெரும் நிறுவனத்தின் விதியையே மாற்றி எழுதிய அந்தப் பெண் தான், பிற்காலத்தில் தான் உழைத்துச் சம்பாதித்து சேர்த்த பணத்தில் பத்தாயிரம் ரூபாயை தன் கணவரின் கனவுத் திட்டமான அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். அவரது அந்த பத்தாயிரம் ரூபாயை முதல் முதலீடாகக் கொண்டு உருபெற்ற அந்த நிறுவனம் தான் இன்று பல லட்சக்கணக்கான கோடிகள் பெறுமான நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்று வரை வேலைவாய்ப்பை தந்து கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின், ஒரு சமுதாயத்தின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று நிருபித்த அந்த பெண் பொறியாளர் தான்,

திருமதி சுதா நாராயணமூர்த்தி,...

Infosys நிறுவனத்தை தொடங்கிய என். ஆர். நாராயணமூர்த்தியின் மனைவி.

நம் நாட்டின் கலாச்சாரம் பெண்களை சக்தியின் வடிவமாகப் பார்க்கிறது.

அப்பேற்பட்ட சக்தியை இன்னும் இந்த நாடு முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. பெண் சக்தி இன்னமும் Un Talled Potential என்ற நிலையில் தான் இருக்கிறது.

பெண்கள் மகா சக்தியின் வடிவம், அவர்களே ஆற்றலின் மூலங்கள்.

காலங்கள் கடந்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை உருவாக்கிய, ராஜராஜ சோழனையே உருவாக்கியது குந்தவை எனும் பெண் தான்.

கீழ்திசை உலகம் எங்கும் புலிக் கொடி பறக்கவிட்ட ராஜேந்திர சோழனை உருவாக்கியதும் பஞ்சவன் மாதேவி எனும் பெண் தான்.

"உன் மகனுக்கு படிப்பு வரவில்லை. மக்குப் பயலாக இருக்கிறான்..." என்று பள்ளி நிர்வாகம் ஒதுக்கித் தள்ளிய தாமஸ் ஆல்வா எடிசனை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை, இருபத்தோரு வயது வரையில் தான் உன் மகன் உயிரோடு இருப்பான் என்று மருத்துவ உலகம் கூறிய Steven Hawkimgs உருவாக்கியதும் அவர்களது தாயாகிய பெண் தான்.

"உன்னால் நடக்கக் கூட முடியாது" என்று மருத்துவ உலகம் கைகளை விரித்த போது,"மருத்துவர்கள் என்ன கடவுளா? நான் உன்னைப் பெற்ற தாய் சொல்கிறேன். நீ நடப்பாய்.." என வைராக்கியம் கொண்டு தன் மகளை உருவாக்கி ஒலிம்பிக்கில் அதி வேக ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வைத்ததும் ஒரு தாய் தான். அந்தத் தாயின் துணையில் தான் நடக்கவே முடியாத Wilma Rudolph ஒலிம்பிக்கில் ஓட்டப் பந்தயத்தில் ஓடி ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றார்.

இந்த வரலாற்று வரிசையில் இன்றைக்கு தமிழ்நாடும் இணைந்திருக்குது.

"ஆம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பணிக்கு செல்லும் பெண்கள் சதவீதம் 43% ஆக இருக்கிறது..." என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சரும், ஒன்றிய தொழில் துறை அமைச்சரும் சென்னையில் நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், நேற்று முன்தினம் ஒரு சேர அறிவித்திருக்கிறார்கள்.

இந்த எண்ணிக்கை இந்தியா முழுக்க உயர வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சியாக, மகாத்மா காந்தி, தந்தைப் பெரியார் தொடங்கி பல தலைவர்கள் கனவு கண்ட பெண்கள் வளர்ச்சியாக, இந்த நாட்டின் முன்னேற்ற வளர்ச்சியாக இருக்கும்...

நன்றி: துரை மோகன்ராஜ்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved