🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோத்தகிரியில் கம்பளத்து கொடி பறக்குது!

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை பின்னோக்கிப் பார்த்தால் நினைவுக்கு வருவது பாளையங்கள், ஜமீன்கள் தவிர மக்கள் பெரும்பாலும் விவசாயக்குடிகள். தமிழகம் முழுவதும்  சமவெளிப்பகுதி, சிறு சிறு மலைகள் மற்றும் குன்றுகளை ஒட்டி பூர்வீகமாகவாழ்ந்து வருவது நாம் அறிந்ததே. மலைப்பிரதேசத்தில் கம்பளத்தார் குடும்பங்கள் பூர்வகுடிகளாக இருப்பதாக பெரிய அளவில் அறியப்படவில்லை. அந்தக்குறை சமீபகாலங்களில் குடிபெயர்ந்த ஒருசில குடும்பங்களால் நீங்கியுள்ளது.


1978-இல் ஏற்பட்ட கடும் வறட்சியால் பூமியில் விளைச்சலில்லை, கடும் உணவுப்பஞ்சம். பெண்குழந்தைகளை வைத்திருந்த ஏழை சிறு விவசாயி சின்னப்பனுக்கு வாழ வழிதெரியாமல் விழிபிதுங்கி நிறகிறார். தகவல் தொடர்பு வசதி, போக்குவரத்து வசதிகள் ஏதுமில்லாத அந்தநாளில், காதில்கேட்ட செய்தியை நம்பி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள கொண்டமுத்தனூர் கிராமத்திலிருந்து மனைவி மற்றும் இரு பெண்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கோத்தகிரியிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு கூலிவேலைக்கு செல்கிறார் சின்னப்பன். தேயிலைத்தோட்டத்து வேலை ஆபத்து நிறைந்தது. அரவம் தீண்டி ஆயுளைக்குடிக்கும்,அட்டைப்பூச்சிகள் இரத்தத்தை உறுஞ்சும் என்று யாராரோ என்னவெல்லாமோ சொன்னாலும், உயிரைவிட வறுமையும், பசியும் கொடியது என்பதை சின்னப்பனைத்தவிர யார் உணர்ந்திருக்க முடியும்.  


எஸ்டேட் ஒன்றில் தேயிலைபறிக்கும் கூலிவேலைக்கு சேர்ந்த சின்னப்பனுக்கு, பசிக்கு நிரந்தர தீர்வு கிடைத்தது. ஆபத்துகளை பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடனும், சிக்கனத்துடனும் குடும்பம் நடத்தவே வறுமையும் விரைவில் முடிவுக்கு வந்தது. கோத்தகிரிக்கு குடிபெயர்ந்த நான்காண்டுகள் கழித்து 1982-இல் சின்னப்பன்-சரஸ்வதி தம்பதினருக்கு கோத்தகிரி மண்ணில் இரமேஷ் பிறந்தார்.


ஆறாவது வரை மட்டுமே படித்த இரமேஷ், பெற்றோர்களுக்கு உதவியாக தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றத் துவங்கினார். குடும்பமாக உழைத்தவர்கள் சில ஆண்டு அனுபம், நம்பிக்கை காரணமாக எஸ்டேட் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யத்தொடங்கினர். குழந்தைகளின் திருமண காரியங்களெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டே இருந்தாலும், கோத்தகிரியில் குடியமர்ந்து 22-ஆண்டுகள் கழித்து 2000-வது ஆண்டில் சொந்தமாக நிலம் வாங்கி, மலைகளின் அரசியாம் உதகையின் நிலப்பரப்பில் தன் முத்திரையை பதித்தது திரு.சின்னப்பனின் குடும்பம்.


தந்தையாரின் அடியோற்றி கடுமையாக உழைக்கும் திரு.இரமேசுக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும், குருகிருஷ்ணா மற்றும் விஜய் என்ற இருமகன்களும் உள்ளனர். கோத்தகிரி மண்ணில் பிறந்த முதல்தலைமுறையான தனக்கு குடும்ப பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதே தேவையும் முன்னுரிமையாகவும் இருந்த நிலையில், கல்வியைத் தொடர வாய்ப்பில்லாமல் போனது. அக்குறையை தன் இரு பிள்ளைகளை கோத்தகிரியிலுள்ள தனியார் பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வியில் படிக்கவைத்து அடுத்த தலைமுறை கல்வி சாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் திரு.இரமேஷ்.


தொடர்ந்து விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வரும் திரு.இரமேஷ் குடும்பத்தினர் டீ எஸ்டேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து நிர்வாகிப்பது, விவசாய நிலத்தில் சௌ சௌ, கேரட், பீட்ரூட், பீன்ஸ், ப்ரக்கோலி போன்ற காய்கறிகளை சீசனுக்கு ஏற்றாற்போல் பயிரிட்டு “பிக் பாஸ்கட்” நிறுவனத்திற்கு விற்பனை செய்துவருகிறார்.

மலைவாசஸ்தளத்தில் கம்பளத்தாரின் இருப்பை உறுதி செய்துள்ள திரு.இரமேஷ் அவர்கள் உதகைக்கு சுற்றுலாவிற்கு வருகைதரும் நம் உறவுகளை வரவேற்க ஆர்வமாக உள்ளார். சாதாரண கூலித்தொழிலாளியாக பயணத்தை துவங்கி, இன்று வெற்றிகரமான விவசாயியாக வளம் வரும் திரு.இரமேஷ் குடும்பத்தினர் மேலும் வளர வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved