நாடுபோற்றும் நல்லாசிரியர் மறைவு - புத்தாண்டு தந்த பேரிடி

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவரும், கௌரவத்தலைவரும், நாடுபோற்றும் நல்லாசிரியருமான ஐயா மு.சங்கரவேலு (83) அவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரது மறைவு கம்பளத்தார் சமுதாயத்தை துயர்கொள்ளச் செய்துள்ளது. சமுதாயத்தின் முதுபெரும் தலைவர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐயா.மு.சங்கரவேலு அவர்களின் மறைவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஐயா மு.சங்கரவேலு, நேற்று காலை வரை பார்த்த முகம் மாலை வேளையில் மறைந்தது என்பது புத்தாண்டு தந்த பேரிடி.
ஐயா மு.சங்கரவேலு அவர்கள் ஒரு சகாப்தம். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள அயன்ரெட்டிபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்து, ஆசிரியப்பணியிலும், சமுதாயப்பணியிலும் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். அரசு சம்பளம் பெறும் ஆசிரியர் பணியில் 58 வயது வரை பணியாற்றினாலும், தன் வாழ்நாள் இறுதிநொடி வரை சமூகத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுத்திக்கொண்டவர். நாதியற்ற கம்பளத்தார் சமுதாயம் மேன்மையுற நாளும், பொழுதும் சிந்தித்துச் செயலாற்றிய நற்குணம் மிக்கவர். அமைதியான சுபாவம், அதேவேளையில் நாவன்மைமிக்க நல்லாசிரியர். வரலாற்றை வார்த்தைகளால் அலங்கரித்து கேட்போர் மனதைக் கொள்ளைகொள்ளும் ஆளுமை பெற்றவர் ஐயா.மு.சங்கரவேலு.
யாரிடமும் பகமை பாராட்டா குழந்தை மனம். ஏச்சுப்பேச்சு, ஏளனம் என எதையும் பொறுட்படுத்தாமல் தன் பணி, பணி செய்து கிடப்பதே என்று முழுமையாக சமுதாயப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தவவாழ்வு வாழ்ந்தவர். தன்னலம்ற்ற சமுதாயப்பணிக்கு இளைஞர்களுக்கு முன்னோடி. கடைசி நிமிடம் வரை தங்களிடம் சமுதாயப்பணி குறித்தே பேசியதாக பலரும் தங்கள் இரங்கல் செய்தியில் பதிவிட்டு வருவது, சமுதாயமாகவே வாழ்ந்து மறைந்தார் என்பது தெளிவாகிறது.
கம்பளத்தார் சமுதாயம் ஒரு நல்ல தலைவனை, வழிகாட்டியை இழந்துள்ளது. நல்லாசிரியர் ஐயா.மு.சங்கரவேலு அவர்களின் இடம் யாராலும் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடமாகவே இருக்கும். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும், த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தினருக்கும் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்,