பாரதியார் பல்கலை. முழுநேர பதிவாளராக பேரா.ராஜவேல் நியமனம்!
எட்டாண்டுகளாக நியமிக்கப்படாமல் இருந்த கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகிலுள்ள மாலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.இரா.ராஜவேல் அவர்களை முழுநேர பதிவாளராக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு,
மகாகவி பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசால் 1982 இல் கோவையில் தொடங்கப்பட்டது பாரதியார் பல்கலைக்கழகம். 2020-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்படி இந்திய அளவில் 21-ஆவது இடத்தை பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின்கீழ் 13 அரசுக் கல்லூரிகள், 1 வான்படை நிர்வாகக் கல்லூரி, 3 இணைக் கல்லூரிகள், 1 பல்கலைக்கழகம், 16 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் 99 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 133 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

2016 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பிலிருந்த செந்தில்வாசன் முறைகேடு காரணங்களுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர் மோகன் பதிவாளராக நியமிக்கப்பட்டார். அவரது பணிநியமனம் தொடர்பாக எழுந்த சிக்கலைத் தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து பேராசிரியர் வனிதா பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2017 டிசம்பரில் பதிவாளர் காலியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2018 ஜனவரி 17 வரை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளாக பதிவாளர் நியமனம் செய்யப்படாமலேயே இருந்துவந்தது.

இந்நிலையில் கடந்த 2024 ஆகஸ்டில் பல்கலை பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பங்களை பரிசீலித்த பல்கலை நிர்வாகம், மேற்படி பணியிடங்களை நிரப்ப பிப்., மாதம், சிறப்புக்குழு (பேனல்) அமைத்தது.
இதனையடுத்து நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற்ற நிலையில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த கல்வியாளர்கள் அதில் பங்கேற்றனர். இறுதியாக கடந்த ஆகஸ்டு மாதம் உயர்கல்வித்துறை சார்பில் பணி நியமனம் தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாரதியார் பல்கலையின் பதிவாளராக, சேலம் பெரியார் பல்கலையின் இயற்பியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிவந்த இரா. ராஜவேல் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகிலுள்ள மாலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.இரா.இராஜவேல் அவர்களுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி பட்டம் பெற்றுள்ள திரு.இராஜவேல் 27 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவமும் 22-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கோவை பாரதியார் பல்கலையின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்ட இராஜவேல் அவர்களை கடந்த வாரம் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் மு.பழனிச்சாமி தலைமையில் சந்தித்து அறக்கட்டளை சார்பாகவும், சமுதாயத்தின் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியீடுள்ள அறிவிப்பில் பாரதியார் பல்கலையின் முழுநேரப் பதிவாளராக இராஜவேல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதவியில் இராஜவேல் அவர்கள் மூன்றாண்டு பொறுப்பு வகிப்பார்.

