பாஜக மாவட்டச் செயலாளராக க.குணசேகரன் நியமனம்!
பாஜக மாவட்டச் செயலாளராக க.குணசேகரன் நியமனம்!
பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) அணியின் மாவட்டச் செயலாளராக பொள்ளாச்சியைச் சேர்ந்த க.குணசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஆறுமாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்றெடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பல வியூங்களை வகுத்து வருகின்றன. முன்பெல்லாம் தேர்தல் நேரங்களில் மட்டுமே கட்சிப்பணி என்பதைத்தாண்டி, தற்போது கிளைப்பொறுப்பாளர்கள் வரை முழுநேர அரசியல் செய்தால் மட்டுமே பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்ற அளவுக்கு உட்கட்சிகளுக்குள் போட்டிகள் அதிகரித்துள்ளது.
நாட்டை ஆளும் பாஜகவில் மற்ற கட்சிகளைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான துணை அமைப்புகள் உள்ளன. இவை பெயரளவில் என்றில்லாமல் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, தனித்தனியாக கூட்டங்களை நடத்துகின்றன. இது அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதோடு, அரசியல் பரவலாக்கத்திற்கும் வித்திட்டுள்ளது என்றால் மிகையல்ல.
அரசியல் கட்சிகள் வழங்கும் இந்த வாய்ப்புகளை கெட்டியாகப்பிடித்துக்கொண்டு முன்னேறி வருகிறார்கள் நமது இளம் அரசியல் தலைவர்கள். தற்போது பல்வேறு கட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நியமனங்களில் பல இளம் இரத்தங்கள் முட்டிமோதி மேலேழும்பி வருவதை ஒவ்வொரு கட்சியிலும் பார்க்க முடிகிறது.
அந்தவகையில், கோவை தெற்கு மாவட்ட ஓபிசி பிரிவு செயலாளராக, பொள்ளாச்சி வட்டம் குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்த க.குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். விவசாயக் குடும்பப் பின்னனியோடு, இளங்கலைப்பட்டம் பெற்றுள்ள க.குணசேகரன் தனியார் நிறுவனமொன்றில் மேலாளராகப்பணியாற்றி வருகிறார். கல்லூரிக்காலந்தொட்டே பாரதிய ஜனதா கட்சியில் ஈடுபாடுடைய குணசேகரன், இதற்கு முன் கோவை தெற்கு மாவட்ட ஓபிசி பிரிவு துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது கட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்களின் அடிப்படையில் ஓபிசி அணியின் மாவட்டச் செயலாளராக க.குணசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க இளைஞரணிச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டச் செயலாளராக குணசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் மற்றும் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

