உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் தமிழக முதல்வருடன் சந்திப்பு!
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் சந்திக்கும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது, திருச்செங்கோடு தெற்கு ஒன்றியப் பொறுப்பாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான வி.தாமரைச்செல்வன் தமிழக முதல்வரைத் தனியாகச் சந்தித்துப் பேசினார். அதன் விவரம் வருமாறு,
இன்னும் நான்கைந்து மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியினரை ஆயத்தப்படுத்துவதற்காக, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்றத் தொகுதிவாரியாக நிர்வாகிகளைத் தனியாகச் சந்தித்து நிறை, குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். இந்த சந்திப்பின்போது மற்ற தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் யாருமின்றி, நிர்வாகிகளிடம் முதல்வரே நேரடியாக தொகுதி நிலவரம், உட்கட்சிப் பிரச்சினை போன்ற பல விவகாரங்களைக் கேட்டறிந்து வருகிறார். மேலும், சந்திக்கும் நிர்வாகி குறித்து உளவுத்துறை மற்றும் தனியார் நிறுவனம் மூலம் ஏற்கனவே பெறப்பட்டுள்ள ரிப்போர்ட்களை வைத்து ஆலோசனை வழங்குகிறார்.

இதன்தொடர்ச்சியாக, கடந்த சிலதினங்களுக்கு முன்பு திருச்செங்கோடு சட்டமன்றத்தொகுதி நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது அனிமூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், ஒன்றியச்செயலாளருமான தாமரைச் செல்வனிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து தமிழக முதல்வர் கேட்டறிந்துள்ளார். அப்போது தாமரைச்செல்வன் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒன்றியச் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டவர் என்பதால் கிளைக்கழக நிர்வாகிகளுடனான சந்திப்பு, வாக்குச்சாவடி வாரியாக நிர்வாகிகளின் ஒத்துழைப்பு குறித்தெல்லாம் கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், தனக்கு வந்துள்ள தகவலின் அடிப்படையில் தொகுதிக்குள் எந்தமாதிரி செயல்பட வேண்டுமென்று முதல்வர் ஆலோசனை வழங்கியதாகத் தெரிகிறது.

