57 பெரிய நீர்த்தேக்கங்களிலிருந்து சூரிய ஒளி மின்சாரம்!
தமிழ்நாட்டில் உள்ள 57 பெரிய நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய ஆற்றல் கட்டமைப்பை (Floating Solar Photovoltaics (FPV)) நிறுவுவதன் மூலம் 3.5 கிகாவாட்(GW) மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமென ‘க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்’ எனும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதிக செலவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 1 மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக இம்மிதக்கும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்த முடியும். இம்மிதக்கும் சூரிய ஆற்றல் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய ஆகும் செலவானது ரூ. 3.16/kWh ஆகும். இது மாநில அரசு இயக்கிவரும் அனல் மின் நிலையங்களிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலையில் (ரூ. 7.12/kWh) பாதியாகும். ஒன்றிய அரசு இயக்கிவரும் அனல் மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் சராசரி விலையைக் காட்டிலும் FPV மின்சாரத்தின் விலை குறைவாகும்.
“FPV மின்சாரத்திற்கான கட்டணம் குறைவு என்பதால் ஆண்டுக்கு ரூ. 3211 கோடியும் 5 ஆண்டுகளில் ரூ.16000 கோடியையும் சேமிக்க முடியும். இது 2023-24 நிதியாண்டில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டத்தில் பாதியாகும். அந்நிதியாண்டில் மின் வாரியத்தின் நட்டம் ரூ. 6920 ஆக இருந்து குறிப்பிடத்தக்கது” என்கிறார் க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் நிறுவனத்தின் முதன்மை செயல் தலைவர் மற்றும் இவ்வறிக்கையின் இணை எழுத்தாளர் ஆஷிஷ் பெர்னாண்டஸ். தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மொத்தமாக தற்சமயம் 1.8 லட்சம் கோடி கடன் உள்ளது, புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்(Tamil Nadu Power Distribution Corporation Limited) மட்டுமே ரூ. 90000 கோடி கடனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் மொத்தம் 20 கிகாவாட் சூரிய சக்தி மற்றும் 10,000 மெகாவாட் மின்கலன் கட்டமைப்பை உருவாக்கும் என 2022ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. நீர்நிலைகளின் மேற்பரப்பில் சூரிய மின்னாற்றலை உற்பத்தி செய்யும் தகடுகளை அமைப்பதன் மூலம் அரசு தன் பசுமை மின்னாற்றல் உற்பத்தி இலக்கைத் தாண்டி சாதிக்க முடியும். FPV அமைப்புகளின் சில தனித்துவமான பலன்களை இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது: நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை, சூரிய மின்னாற்றல் தகடுகளைப் பொருத்துவதால் நீர் ஆவியாவது தடுக்கப்படும், இதனால் நன்னீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இவ்வறிக்கையில் ஒரு நீர்நிலையின் 40% பரப்பை பயன்படுத்தி சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்வதைப் பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றி சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், மீன்பிடித்தல் அல்லது போக்குவரத்து போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நீர்நிலைகள் அவற்றின் மீதான மக்களின் சமூக உரிமைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
“தூத்துக்குடி, வடசென்னை போன்ற பழைய, அதிக செலவு பிடிக்கும் நிலக்கரி அனல் மின் நிலையங்கள் விரைவில் மூடப்பட வேண்டும். இந்த அனல் மின் நிலையங்களிலிருந்து தயரிக்கப்படும் மின்னாற்றலை மிதக்கும் சூரிய மின்னாற்றலுக்கான திட்டமிடலின் மூலம் மாற்ற முடியும். இது அனைத்து நுகர்வோர் மற்றும் மாநில அரசுக்கும் பலனளிக்கக் கூடிய ஒரு திட்டமாகும்” என்கிறர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு.
“இப்பகுப்பாய்வு மிதக்கும் சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் மாநிலத்திற்கு பெரும் வாய்ப்பிருப்பதை எடுத்துக்காட்டுகிறது, மேலும் இது முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், மின்சார செலவுகளையும் குறைக்கும். தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கைக் கொண்டுள்ளது மற்றும் அதன் காலநிலை மாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக லட்சியமிக்கப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளைக் கொண்டுள்ளது – இவ்விரண்டு இலக்குகளையும் பூர்த்தி செய்ய சூரிய மேற்கூரைகள், மிதக்கும் சூரிய மின்னாற்றல் கட்டமைப்பி (FPV) மற்றும் நிலங்களின் மேற்பரப்பில் பொருத்தப்பட்ட அமைப்புகள் உட்பட நிறைய புதிய புதுப்பிக்கத்தக்க திறன்கள் தேவைப்படும்” என்கிறார் சூரிய மேற்கூரை திட்டத்தைப் பிரபலப்படுத்த தமிழ்நாடு மின்வாரியத்துடன் இணைந்து பணியாற்றி வரும் அசார் சோசியல் இம்பேக்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி சுபிஷ் குமார்.
கார்பன் சமநிலையை எட்டுவதற்கான இந்தியாவின் இலக்கான 2070க்கு முன்பாக அதை அடைவது எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துச் செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் தமிழ்நாடு மின்வாரியமானது அதிக செலவிலான மின்கொள்முத ஒப்பந்தங்கள், நிலக்கரி விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து கடனில் இயங்கி வருகிறது. இழப்பை ஈடுகெட்ட 2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் மட்டும் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தி தனது சுமையை மக்கள் மீது ஏற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீர்நிலையின் 40% பரப்பு மட்டுமே இதில் பயன்படுத்தப்படும் என்றாலும் ஒளிச்சேர்க்கையை சூரிய மின்னாற்றல் தகடுகள் தடுக்கும் பட்சத்தில் அவை நீரின் தரத்தைப் பாதிக்கவும் நீர்நிலையின் உயிர்ப்பன்மையத்தைப் பாதிக்கும் சாத்தியங்கள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

