🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தடையை தடுக்கும் அரசியல்!

எப்போது ஒரு சட்டம் தடை செய்யப்படும்?

பொதுவாக பாராளுமன்றமும், சட்டமன்றமும் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டால், அந்தச் சட்டம் சரியாகத்தான் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றங்கள் அனுமானித்துக் கொள்ளவேண்டும். இடைக்கால தடைகள் எதுவும் வழங்க முடியாது. ஆனால்  ஒரு சட்டம்

1.ஒரு சட்டம் சட்டமியற்றும் மன்றத்தின் அதிகார வரம்பை மீறி உள்ளது என்றோ 

2.அதிகாரமே இல்லாமல் போடப்பட்டுள்ளது என்றோ 

3.மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கப்படுகிறது என்றோ  

4.அரசியலமைப்பு சட்டதிட்டங்களுக்கு எதிராக உள்ளது என்றோ பார்த்த மாத்திரத்திலேயே அறிந்து கொள்ளக்கூடி வகையில் ஒரு சட்டம் இருந்தால் அந்தச் சட்டத்தை நீதிமன்றங்கள் தடை செய்ய வேண்டும். இதுதான் சட்ட விதி.

வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம், மேற்படி குறைபாடுகளோடு போடப்பட்டுள்ள சட்டமா? என்று பார்த்தால் 100 விழுக்காடு இந்த நான்கு அளவுகோல்களின்படி இச்சட்டம் உள்ளது. எனவே நீதிமன்றம் தடை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தும் மனுக்களை தள்ளுபடியும் செய்யாமல் மேற்படி அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் செயல்படுத்தப்பட்டால் அந்த செயல்பாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற வழக்குகளின் இறுதி தீர்ப்பைப் பொறுத்தே அமையும் என்று பூசி முழுகி, கடுகளவும் பிரயோஜனம் இல்லாத, நீதி, தர்மம், சட்டம் எதற்கும் உட்படாத ஒரு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  அப்படி எப்படி வன்னியர் சட்டம் பார்த்த மாத்திரத்திலேயே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று சொல்ல முடியும் என்றால்,

1. அரசமைப்புத் திருத்தச் சட்டம் 102 மற்றும் 105 அதோடு சேர்த்து 5.5.2021ல் உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்டஅமர்வின் மாராத்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசாங்கத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பிரிவு செய்வதற்கான அதிகாரம் ஆகஸ்ட் 11 2018 முதல் ஆகஸ்ட் 18 2021 வரை மாநில அரசுக்கு இல்லை என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரம் இல்லை என்பதை தெரிந்திருந்தும் நீதிமன்றம் அதிகாரம் இருந்ததா? இல்லையா? என்பதைக் கூட வழக்கில் தான் பார்க்க முடியும் என்றும், அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவாக வரையறுத்துக் கூறியும் அதை உயர் நீதிமன்றம் ஏற்றுச் செயல்படுத்த மறுத்திருப்பது வருத்தத்திற்குரியது.

2. இரண்டாவது காரணம் மேற்படி சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் தமிழக அரசாங்கம் இதுபோன்ற ஒரு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன்பாக கண்டிப்பாக  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைக் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அப்படி ஆலோசிக்கவில்லை என்ற விபரம் சட்டத்திலும், அரசு தரப்பின் பதில் மனுவிலும் தெளிவாகவும் விரிவாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, என்பதைச் சட்டத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அறிந்துகொள்ளலாம். எனவே இச்சட்டம், அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதல்படி கொண்டுவரப்படவில்லை என்று தெரிந்திருந்தும் நீதிமன்றம் தடை விதிக்க தயங்கியிருப்பது வேதனையாக உள்ளது.

3. மூன்றாவதாக ஒத்த நிலையில் இருக்கின்ற சமூகங்களை வேறு வேறு பிரிவுகளில் வைத்து ஒருதலைப்பட்சமாக நடத்தியிருப்பது சமத்துவ அடிப்படை உரிமையைப் பறிப்பதாக இருக்கிறது. அதுவும் ஜாதி பெயரை தவிர வேற எந்த வேற்றுமை இல்லாத சமூகங்களை தனித்தனிப் பிரிவுகளாகவும், அதே போன்று வேறு வேறு குணங்களைக் கொண்ட ஜாதிகளை ஒரு பிரிவிலும் செய்திருக்கின்ற சட்டம்  பார்த்த மாத்திரத்திலேயே மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கின்றச் சட்டம் என்று தெரிந்திருந்தும் தடை செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.

4. நான்காவதாக ஏற்கனவே தமிழகத்தில்  மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 45/1994 நிறைவேற்றப்பட்டு அரசமைப்புச் சட்டம் சரத்து 31Cயின் கீழ் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்தை ஜனாதிபதி ஒப்புதல் இல்லாமல் மாற்ற முடியாது. அதோடு மட்டுமல்லாமல் மேற்படி சட்டம் சரத்து 31Bயின் கீழ் பாராளுமன்றத்தின் மூலமாக அரசமைப்புச் சட்டத்தை திருத்தி 76வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலமாக பாராளுமன்றம் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் வரிசை எண் 257Aவில் வைத்துள்ளது. இப்படி அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற ஒரு சட்டத்தை மாநில  சட்டமன்றம் தங்கள் அதிகார வரம்பை மீறி ஒருதலைப்பட்சமாக அச்சட்டத்தை மாற்றி புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது பார்த்த மாத்திரத்திலேயே அதிகார வரம்பை மீறி செயல் என்பது தெரியவரும். அப்படி தெரியவந்ததும் அதை கண்டும் காணாமலும் இடைக்கால மனுவில் மனுவை தள்ளுபடி செய்யாமலும் இருப்பது வருத்தமளிக்கிறது.


அதைவிட மேலாக அந்த இடைக்கால தீர்ப்பில் மேற்படி சட்ட விரோதச் சட்டத்தை வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டு கல்விச் சேர்க்கை, பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருப்பது நடைமுறைக்கு சாத்தியப்படாத தீர்ப்பாகும். ஏனென்றால் மேற்படி அசைக்கமுடியாத சட்ட காரணங்கள் இருக்கின்ற காரணத்தினால் இந்த சட்டம் கண்டிப்பாக செல்லுபடியாகாது அதனால் இந்த சட்டத்தை நிலைக்கச் செய்யவேண்டுமென்று அநீதியாக அரசே பல பொய்யான விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கின்ற காரணத்தினாலும், எந்தவிதமான நியாயம், தர்மம் இல்லாமல் பொய் விளக்கங்களை கூறி நீதியை சூறையாட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு பணியாற்றுகின்ற பல உறவுகள் இருக்கின்ற காரணத்தினாலும் வழக்கு விரைவில் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு. ஓராண்டுக்குப் பிறகோ, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகோ, இறுதி தீர்ப்பாக இச்சட்டம் செல்லாது என்று வருகின்ற பட்சத்தில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்று வருகின்ற மாணவர்கள் படித்துப் பெற்றப்பட்ட பட்டம் செல்லாத பட்டமாக மாறிவிடுமா? நீதிமன்றங்களால் அப்பட்டங்களை திரும்ப பறிக்கமுடியுமா? கல்லூரியில் இடம் கிடைக்காமல் கல்லூரிக்கே செல்ளாமல் இருக்கின்ற 115 சமுதாய மாணவர்களுக்கு கல்லூரிக்கே போகாமல் பட்டம் வழங்கி விடமுடியுமா? கல்லூரிகளில் சேர்க்கையைப் பழையச் சட்டப்படி, உண்மையானச் சட்டப்படி, நீதிமன்றம் ஏற்றுக்கொண்டச் சட்டப்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20%  செயல்படுத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். பணியில் வேண்டுமானால் கூட, பணியில் சேர்ந்த வரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு உரியவருக்கு அந்த பணி வழங்க முடியும். ஆனால் ஒரு படிப்பை, ஒரு பட்டத்தை பின்தேதியிட்டு வழங்க முடியாது. எனவே இந்தத் தீர்ப்பு முறையாக ஆராயாமல், பரிசீலிக்காமல், சாதக, பாதகங்கள், நடைமுறைச் சிக்கல்கள், குடி மக்களுடைய உரிமைகள், சட்டம் காட்டியுள்ள வழிமுறைகள், எதைப் பற்றியும் அலசி ஆராயாமல் கோடிக்கணக்கான மக்களுடைய ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி, மன உளைச்சல்கள், நிலையற்ற தன்மையை நீதிமன்றங்கள் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது நாம் உண்மையான ஜனநாயகத்தையும், ஆரோக்கியமான நிறுவனங்களையும், இந்த தேசத்தில் கட்டியெழுப்ப வேண்டியது மிக மிக அவசியமாக இருக்கிறது. அதன் முயற்சியாக மக்கள் மத்தியில் நேர்மையான தூய்மையான வெளிப்படையான நிர்வாகம் இருந்தால் மட்டுமே ஜனநாயகம் வலுவுள்ளதாக எல்லா மக்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதாக இருக்க முடியும். இல்லையென்றால் போலியான, உதவாத, மலடான மக்களாட்சியாகத்தான் இருக்க முடியும். எனவே சமூகநீதி கூட்டமைப்பு உறவுகளே எத்தனை அநீதிகள் சுனாமி போல் பொங்கி வந்தாலும் உண்மை என்ற உரைகள் நம்மை காத்து நிற்கும். நம்பிக்கையோடு பயணிக்கவும். நல்ல மாற்றங்கள் வந்தே ஆகவேண்டும். பொய் பேசி அரசு நடத்துகிறவர்கள் அனைவரும் கண்டிப்பாக துரத்தியடிக்கப்பட வேண்டும். சென்னையில் நடக்கின்ற பெருந்திரளான சமூகநீதி மக்கள் பேரணியில் சமூகநீதி முழக்கம் உலகம் முழுவதும் உற்று பார்க்கின்ற அளவுக்கு நமது உழைப்பும் ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் இருக்க வேண்டும். வாழ்க உண்மை. வளர்க ஒற்றுமை. வெல்வோம் சமூகநீதி. 

வீரவேல் வெற்றிவேல். வீரவேல் வெற்றிவேல். வீரவேல் வெற்றிவேல்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved