🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வன்னியர் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்ற தீர்ப்பின் உண்மையும் -மருத்துவர் ராமதாஸின் திசைதிருப்பும் முயற்சியும்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை தமிழகத்தில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த 22-ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தைத் தொடங்கிய தமிழக முதல்வர் கடந்த 29-ஆம் தேதி தர்மபுரி,கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப்பேசினார். இதற்கு அடுத்தநாள் சேலம் மாநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதை விமர்சித்து சாடினார். சமூகநீதி பேசும் மருத்துவர் ராமதாஸ் பாஜகவுடன் கை கோத்த மர்மம் என்ன என்று பாமக நிறுவனர் ராமதாசையும் விமர்சித்து பேசியிருந்தார்.

இதுகுறித்து மார்சி 30 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட மருத்துவர் ராமதாஸ் அவர்கள் "தமிழகத்தில் சமூக நீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் முதல்வர் ஸ்டாலின், சமூக நீதி குறித்த கவலை கொள்ள வேண்டாம்" என்று காட்டமாக தமிழக முதல்வருக்கு பதிலளித்தார். மேலும், சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவரின் அறிக்கையில் வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கிவிட்டது போலவும், அதற்கு தமிழக அரசு எதிராக இருப்பதுபோலவும் சித்தரிக்க முயல்வதாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது வன்னியர் சமுதாய மக்களை குழப்பவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் உண்மைத்தன்மையை மறைத்து அதிகாரமட்டத்தில் வன்னியர் இடஒதுக்கீடுக்கான லாபியை மருத்துவர் தொடங்கியுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர். மருத்துவரின் திரிபுவாதத்தை முறியடிக்கும் வகையிலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் உண்மைநிலையை சாமானிய மக்களுக்கு விளக்கும் வகையில் சோசலிச மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மருதுபாண்டியன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு,

சமூக நீதி குறித்து தமிழக முதல்வருக்கு பாடம் எடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் பல சமயங்களில் பொய்களைத் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டே வருகிறார். அவர் மட்டுமல்ல வன்னியர் சங்கத்தைச் சார்ந்தவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் பலரும் கூட உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தவறாக, தந்திரமாக திரித்துப் பரப்பி வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கியமான அம்சங்களை மட்டும் நாம் இப்போது விவாதிப்போம்.

ஒரு குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டு தொகுப்பில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை இந்த தீர்ப்பு தெளிவாக விளக்கியுள்ளது. ஆனால் உள் ஒதுக்கீடு எந்த அளவுகோலின் படி கொடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது. 

 1.ஒரு தொகுப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவிற்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், அந்தத் தொகுப்பில் உள்ள மற்ற சமூகங்களை காட்டிலும் அது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையில் இருப்பதை தரவுகளோடு உறுதி செய்ய வேண்டும். 

2. இட ஒதுக்கீடு வழங்க சாதி ஒரு தொடக்கப் புள்ளி தான். மற்ற கூறுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், அதை அரசு தரவுகளோடு நிரூபிக்க வேண்டும்.

இவை தீர்ப்பின் மிக முக்கியமான அம்சங்களாகும். இவை குறித்து பார்ப்போம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது,"on the issue of caste based classification, Indra Sawhney (Supra) has, in precise and unambiguous terms, started that caste can be the starting point for identifying backward classes, but it cannot be the sole basis என்று தெளிவாகக் கூறுகிறது. மேலும், "Accordingly while caste can be the starting point for providing internal reservation, it is incumbent on the state government to justify the reasonableness of the decision and demonstrate that caste is not the sole basis" என்றும் கூறுகிறது.

அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கும் போது பட்டியலின தொகுப்பில் மற்ற சமூகங்களை காட்டிலும், அதாவது பள்ளர் பறையர் சமூகங்களை காட்டிலும் அருந்ததியர் எவ்வளவு கீழான நிலையில் உள்ளனர், சமூக, கல்வி ரீதியாக அவர்களின் நிலை எத்தகைய அளவில் உள்ளது என்பதை பற்றிய சரியான புள்ளி விவர ஆதாரங்களோடு அறிக்கை பெறப்பட்ட பிறகு தான் கலைஞர் அதை சட்டம் ஆக்கினார்.

ஆனால் வன்னியர் உள் ஒதுக்கீட்டில் MBC மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற சமூகங்களை காட்டிலும் வன்னியர்கள் எந்த அளவில் சமூக ரீதியாகவும்,  கல்வி ரீதியாகவும் பின்தங்கி உள்ளனர் என்று எந்த தரவுகளும் இல்லை. மற்ற சமூகங்களை காட்டிலும் முன்னேறிய நிலையில் தான் உள்ளனர் என்பது தான் உண்மையான புள்ளி விவரம். எடுத்துக்காட்டாக MBCயில் உள்ள 108 சமூகங்களில் குறவர், மீனவர்,வலையர், தொட்டிய நாயக்கர், ஊராளி கவுண்டர், வேட்டுவ கவுண்டர், கள்ளர், மறவர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை விட இவர்கள் எந்த அளவு கல்வி ரீதியாகவும் சமூக நிலையில் கீழாக உள்ளனர்?  குறவர்களை விட, வலையர்களை விட தொட்டிய நாயக்கரை விட, மீனவர்களை விட வன்னியர்களின் நிலை தாழ்ந்தா உள்ளது? அரசியலாளர்களும் சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் சிந்திக்க வேண்டும். ஆக உச்ச நீதிமன்ற தீர்ப்பு இப்படி இருக்க, உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை என்று கூறிவிட்டது என்று திரும்பத் திரும்ப பொய்யான செய்திகளை ராமதாஸ் அவர்கள் கூறிக் கொண்டே உள்ளார். உள் ஒதுக்கீடு வழங்க தடை இல்லை.  ஆனால் ஒரு குறிப்பிட்ட வகுப்புகளுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் அந்த பிரிவில் உள்ள மற்ற சமூக மக்களை காட்டிலும் அவர்கள் கீழான நிலையில் உள்ளனர் என்பதை தரவுகளோடு நிறுவ வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாரம். 

இரண்டாவது மக்கள் தொகை எண்ணிக்கையை மட்டும் வைத்து இட ஒதுக்கீடு வழங்கியது சட்டத்திற்கு புறம்பானது தவறானது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது. எனவே நாங்கள் மக்கள் தொகையில் இவ்வளவு எண்ணிக்கையில் உள்ளோம். எங்களுக்கு இவ்வளவு விழுக்காடு வேண்டும்  என்று கோர முடியாது. இந்திரா சகானி வழக்கிலும், மராத்தா வழக்கிலும், 10.5% உள் ஒதுக்கீடு வழக்கிலும் நீதிமன்றங்கள் தெளிவாக கூறியுள்ளன. Adequate representation தான் கோர முடியுமே தவிர Proportional representation கோர முடியாது என்பதை  நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக விளக்குகின்றன. Population has been made the soul basis for recommending internal reservation for the Vanniakula Kshatriyas, which is directly in the teeth of the law laid  down by this court என்று 10.5% வழக்கில் உச்ச நீதிமன்றம்  தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது. அதாவது மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளது. நாங்கள் இரண்டு கோடி பேர் உள்ளோம்; மூன்று கோடி பேர் உள்ளோம். நாங்கள் எண்ணிக்கையில் பெரிய சாதி; எங்களுக்கு இட ஒதுக்கீடு அதிகம் வேண்டும் என்றெல்லாம் கோர முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவாகக் கூறியுள்ளது.


எனவேதான்  சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். கல்வி வேலை வாய்ப்புகளில் எந்தெந்த சமூகங்கள் எவ்வளவு பயன் பெற்றுள்ளன என்பதை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாம் தொடர்ந்து கூறுகிறோம். ஆனால் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் அவர்களோ தொடர்ந்து  சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று மட்டும் கூறுகிறார்கள். கல்வி வேலை வாய்ப்புகளில் யார் யாருக்கு எத்தனை விழுக்காடுகள் வழங்கியுள்ளன என்பதை பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்பதை பற்றி வலியுறுத்துவதில்லை. ஏனென்றால் அந்த அறிக்கை வெளி வந்தால் வன்னியர்கள்  MBCயில் உள்ள மற்ற சமூகங்களைக் காட்டிலும் எந்த அளவு பலன்களை அதிக அளவில் பெற்றுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். எனவே தந்திரமாக அந்த கோரிக்கையை போதிய அளவு வலியுறுத்த மறுக்கிறார்கள். 

நாம் இத்துடன் இன்னொரு கோரிக்கையையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்தமாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 50%லிருந்து 75% ஆக உயர்த்த வேண்டும். இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து போராடினால் தான் நாம் அனைத்து சமூகங்களுக்குமான சமூக நீதியை குறைந்து பட்சம் பெற முடியும். அதை விடுத்து தனிப்பட்ட சாதிக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வேண்டும் என்பது சட்டப்படி சாத்தியமே கிடையாது. ஒருவேளை அரசியல் பலத்தாலும், அதிகார பலத்தாலும் நெருக்கடி தந்து, மீண்டும் தமிழக அரசு சட்டம் இயற்றினாலும், அந்தச் சட்டம் நீதிமன்றத்தால் தூள் தூளாக்கி நொறுக்கப்பட்டு விடும். ஆட்சியாளர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அதன் அடிப்படையில் தான் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மறைத்து தான் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு சமூக நீதி பற்றி வகுப்பெடுக்கிறார்.  காலக்கொடுமை. 

10.5% இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மேலும் பல விடயங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.

தோழமையுடன்,
மருதுபாண்டியன்
சோசலிச மையம்.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved