🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இன அரசியல்-1 : மனித இனத்தின் தோற்றமும் - பரவலும்

பிரபஞ்சம் மற்றும் உயிர்த் தோற்றம்:

பிரபஞ்சத்தின் வயது சுமார் 1400 கோடி ஆண்டுவரை இருக்கலாம். உலகம் உட்பட சூரியக் குடும்பத்தின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டு ஆகும். உலகில் முதன் முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான். முதலில் தோன்றியவை பாக்டீரியா போன்ற ஓரணு உயிரிகளே. இன்றுள்ள அனைத்துச் செடிகொடிகளும், விலங்கு பறவைகளும் ஒரே மூலத்தில் தோன்றியவையே ஆகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலட்சம் தனி இனங்கள் (Species) கண்டுபிடிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளன. இன்னும் இனம் கண்டுபிடிக்கப்படாதவையும், பெயர் சூட்டப்படாதவையும், குறிப்பாக நிலைத்திணை, நுண்ணுயிரிகள், சிற்றுயிர்கள் மும்மடங்கு  இருக்கும் என்று அறிவியலார்கள் கருதுகின்றனர்.

இன்றைக்கு 24 கோடி  ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தடவையும், ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு தடவையும் பேரழிவுகள் ஏற்பட்டு அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த உயிரினங்களுள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. மிகப் பெரிய விண் கொள்ளிகள்  (Meteors) உலகில் விழுந்ததால் அப்பேரழிவுகள் ஏற்பட்டிருக்காலம் என்கின்றனர். இப்பொழுது உள்ள பாலூட்டிகள் (Mammals) அனைத்துமே 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஒரு சிறிய எலி போன்ற பருமனுடைய விலங்கிலிருந்து படிமலர்ச்சி அடைந்தவையே. குரங்குகளுக்கும் மனிதனுக்கும் மூதாதையான லெமூர் (Lemur) விலங்கு (ஏறத்தாழ 250 கிராம் எடை) உருவான காலம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். (பூச்சிகள் தோன்றி 50 கோடி ஆண்டும் எறும்புகள் தேனீக்கள் தோன்றி 10 கோடி ஆண்டுகளும், கரையான் தோன்றி 28 கோடி ஆண்டுகளும் ஆகின்றன)

 மனிதன் எப்படித் தோன்றினான்?  

மனிதக் குரங்கினத்துக்கும் (சிம்பன்சி, கொரில்லா) மனிதனுக்கும் பொதுவான வேறு ஓர் உயிரினம் இன்றைக்கு ஏறத்தாழ 50 லட்சம் ஆண்டுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. இன்று உலகெங்கும் உள்ள 650 கோடி மனிதர்களுமே, அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே ஹோமோ சேபியன்ஸ், சேபியன்ஸ் அல்லது தற்கால மனிதர் என்ற (Homo Sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த ஒரே தாயிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலார்கள் அனைவரும் ஏற்ற முடிவு. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved