🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-3

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் ( இரண்டாம் வாரத் தொடர்ச்சி )

என் உயிரின் உயிரான உறவுகளே! நண்பர்களே!! வணக்கம்.

இந்த மாதம் அக்டோபர் 16 அன்று, அந்நியனுக்கு அடிபணிந்து அடிமையாய் வாழ்வதை விட, கட்டை புளியமரத்தில் தூக்கு கயிற்றுக்கு முத்தமிடுவதே மேலானது என்ற உயரிய நோக்கோடு, வெள்ளையனை வேரறுக்க வீறு கொண்ட வேங்கையாக, வீரத்தின் விளைநிலமாம் பாஞ்சை மண்ணில் அவதரித்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 222 ஆம் ஆண்டு புகழ் அஞ்சலி விழா கயத்தாரில் நடைபெற இருக்கின்றது. எனவே அன்றைய நாளில் அரசின் கொரொனா கட்டுப்பாடு விதிமுறையைக் கடைபிடித்து, அதில் கலந்து கொள்ள தங்களை அன்புடன் வேண்டுகிறேன். அந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவர்கள் மதுரையில் உள்ள அப்பெரும் தியாகியின் சிலைக்கு  மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படியும், அதுவும் முடியாதவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அந்த வீரப் பெருமகனாரின் சிலைகளுக்கு மாலை மரியாதை செய்யும்படியும், அதுவும் முடியாதவர்கள் அவரவர் வீட்டின் முன் அந்த தேச தியாகியின் உருவப் படத்திற்கு  மலர் தூவி  மரியாதை செய்து, நமது தேசப்பற்றினை நாட்டுக்குப் பறைசாற்றிடும் வகையினில் புகழ் அஞ்சலி செலுத்திட வீர சபதம் ஏற்போமாக...


இனி சென்ற வாரத் தொடர்ச்சியைக் காண்போம்....

முதல் வாரத்தில் குறிப்பிட்டதைப் போல் இந்த சரித்திர சகாப்த நாயகன் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அதிமுகவின் 50 ஆம் ஆண்டு பொன்விழா இந்த மாதம் அக்டோபர் 17 ஆம் நாளில் தமிழகம் மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களிலும் கொண்டாடப்பட உள்ளது என்பதை தங்கள் நினைவுக்கு கொண்டு வருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

எப்பொழுதும் புன்சிரிப்பு,எங்கெங்கும் சுறுசுறுப்பு என்பதே எம்ஜிஆர்.

1924 ஆம் ஆண்டு எம்ஜிஆர் தன் ஏழு வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேருகின்றார். அந்த கம்பெனியின் நிறுவனர் எஸ்.எம்.சச்சிதானந்தம் பிள்ளை என்பவராவார். இந்த கம்பெனி நாடகங்களை எழுதி இயக்கும் வாத்தியாராக எம். கந்தசாமி முதலியார் இருந்தார். இவர் நாடக நடிகர் எம். கே. ராதாவின் தந்தையாவார். எம்ஜிஆர்,சக்ரபாணி ஆகியோருக்கு நடிப்புக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக நடிகர் காளி என். ரத்தினம் இருந்தார். ஸ்ரீ ராமுலு என்பவர் நடனம் கற்றுக் கொடுத்தார். எம்ஜிஆர் நாடகக் கம்பெனியில் சேரும்பொழுது மாதச் சம்பளம் நாலனாவாம். அடுத்து  ஐந்து ரூபாயாக மாறி, பின்னர்  மாதம் முப்பது ரூபாய் ஆக உயர்ந்திருக்கிறது. எம்ஜிஆர்,சக்ரபாணி ஆகியோர் மீது எம்.கே.ராதாவுக்கு அதிக அன்பு உண்டு. ஆதலால் அவர் எம்ஜிஆரிடம்  எதிர்காலத்தில் பெரிய நடிகனாவாய் என்று சொல்வாராம். அதேபோல் எம்ஜிஆரும் அவரிடம் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். ஆதலால் தான் எம்ஜிஆர், என்னைப் பெற்ற என் அன்னை எனக்கு பெரும் செல்வமாக என் உடன் பிறந்த அண்ணன் சக்ரபாணியை தந்தது போல்,எனக்கு மேலும்   மூன்று உடன் பிறவா அண்ணன்கள்  இருக்கின்றார்கள் என்று கூறுவாராம். அதில் கலைத்தாய், கலைவானர் என். எஸ்.கிருஷ்ணன் மற்றும் எம். கே. ராதா ஆகிய இரு அண்ணன்களையும், மூன்றாவதாக அரசியல், அறிவுச் செல்வமாம் அண்ணா அவர்களை வழிகாட்டியாகவும், இணையற்ற தலைவராகவும் எனக்கு தந்தது என்றும் கூறுவாராம்.

பிற்காலத்தில் எம்ஜிஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சரான சமயத்தில், நேரில் சந்தித்து எம்.கே.ராதா வாழ்த்துக்கள் தெரிவிக்க நினைக்கின்றார். ஆனாலும் அவர் உடல் நிலை சரியில்லாமல் படுத்த நிலையில் இருப்பதை அறிந்த  எம்ஜிஆர், உடனே தானே நேரடியாகச் சென்று வாழ்த்துக்கள் பெற்று வருகிறார். அந்த அளவுக்கு இருவரும் அன்பு செலுத்தியுள்ளனர்.

எம்ஜிஆர் முதன் முதலாக மகாபாரத  நாடகத்தில் அர்ச்சுனனுக்கு அம்பு எடுத்துக் கொடுக்கும் உத்தரன் வேடத்தில்  நடித்திருக்கிறார். இரண்டாவதாக நல்லதங்காள் நாடகத்தில் கிணற்றில் வீசப்படும் ஏழாவது குழந்தையாக நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.  1931 ல் தன் பதினான்கு வயதில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி வாத்தியார் கந்தசாமி முதலியார் உதவியுடன், பி.யு.சின்னப்பா, பி.ஜி.வெங்கடேசன் ஆகியோருடன் பர்மாவுக்குச் சென்று, அங்கு ஒரு மாதம் நடைபெற்ற நாடகத்தில் நடித்து கணிசமான சம்பளத்துடன் கும்பகோணம் திரும்பியுள்ளார்.


1932 ஆம் ஆண்டு தனது பதினைந்தாவது வயதில்  திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் குடும்பத்துடன் சென்னைக்குப் புறப்பட்ட எம்ஜிஆர், சென்ட்ரல் இரயில் நிலையம் அருகிலுள்ள யானைக்கவுனி ஏரியாவில் ஒரு சிறிய வீட்டில் குடியேறுகிறார். பின்னர் நாடகம் இல்லாத நாட்களில் பல சினிமா கம்பெனிகளில் வாய்ப்புக் கேட்டு முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் அவ்வளவு எளிதில் சினிமா வாய்ப்பு கிடைத்ததாகத் தெரியவில்லை. இதற்கிடையில் 1935ல் பதிபக்தி நாடகத்தில் சிறுவேடத்திலும், இராமாயணத்தில் வாலி வேடத்திலும் நடித்திருக்கிறார். பின்னர் மீண்டும் நாடகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியவர், ராஜபார்ட் வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து தொடர்ந்து நடித்து வருகின்றார்.

அதன் பின்னர் நாடகத்துறையில் பன்னிரெண்டு ஆண்டுகள் நன்கு அனுபவம் பெற்று, தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, கந்தசாமி முதலியார் மூலம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. 1936 ல் தன் பத்தொன்பது வயதில் சதிலீலாவதி என்ற படம் மூலம் போலீஸ்காரராக சிறுவேடத்தில் அறிமுகம் ஆகிறார். சினிமாவில் முதல் சம்பளமாக நூறு ரூபாய் பெற்றவர், அடுத்து  இரு சகோதரர்கள் திரைப்படத்தில் நடிக்கின்றார். பிறகு 1938 ல் வீரஜெகதீஸ் படத்தில் நடித்து படம்  வெளியான பொழுது, அண்ணன் சக்ரபாணி -தங்கமணி ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறக்கிறது.

இதன்பின்னர் எம்ஜிஆருக்கும் அவரது அன்னை சத்யா அவர்கள் பாலக்காடு பார்கவி என்ற ஓர் அழகானப் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஆனால் எம்ஜிஆரோ கதாநாயகனாக நடித்து  வருமானம் உயர்வு பெற்றவுடன் திருமணம் செய்யலாம் எனக் கருதுகிறார். எனினும் தெய்வத்தாய் பெற்றெடுத்த  தாய் சொல்லைத் தட்டாத எம்ஜிஆர், தன் தாயின் விருப்பதின்பேரில் தன் இருபத்தியொரு வயதில் திருமணம் முடிக்கிறார். எம்ஜிஆரின்  திருமண வாழ்க்கை  வாரங்கள் , மாதங்கள் என கடந்து செல்கிறது. என்றாலும் காலம் செய்த கோலம் எம்ஜிஆரின் மனைவி பார்கவி திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மாரடைப்பால் திடீரென்று இறந்து விடுகிறார். காலன் செய்த இந்த கொடுமையை எண்ணி எம்ஜிஆர்  மனமுடைந்து மிகவும் கவலை அடைகிறார்.

பின்பு காலப்போக்கில் மன ஆறுதலைப்பெற்றவர் 1939 ஆம் வருடம் மாயா மச்சீந்திரா, பிரகலாதன் போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து படம் வெளியாகிறது. அடுத்து 1941 ல் சீதா ஜனனம், அசோக்குமார் ஆகிய படங்கள் வெளியானது. அதன் பிறகு 1942 ல் தமிழறியும் பெருமாள் வெளிவருகிறது. அடுத்த படமாக தாசிப்பெண் 1943 ஆம் ஆண்டு வெளியிடப்படுகிறது. 1944 ல் அரிச்சந்திரா,1945 ல் மீரா, சாலிவாகனன் படங்கள் அடுத்தடுத்து வெளியாயின. 1946 ஆம் ஆண்டில் வெளியான ஸ்ரீமுருகன் படத்தில் எம்ஜிஆர் சிவன் வேடத்தில் ஆடிய சிவதாண்டவ நடனம் அவரை அடுத்த நகர்விற்கு கொண்டு சென்றது.

இப்படத்தைத்தொடர்ந்து சாயா என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் முதன் முதலில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவருக்கு ஜோடியாக அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த குமுதினி என்பவரை  ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால் அது சில காரணங்களால் தடைபட்டு நின்று விடுகிறது. அதற்குப் பிறகு ஒரு சரித்திரப்படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. இப்படத்திற்காக எம்ஜிஆர் யானையேற்றம், குதிரையேற்றம், வாள் சண்டை, வேல் சண்டை, வில் பயிற்சி, மல்யுத்தம், சிலம்பம் என அத்தனையையும் முறையாகக் கற்றுத் தேருகிறார். இப்படப்பிடிப்பில் எம்ஜிஆர் வாளெடுத்து விளையாடிய அழகைப் பார்த்து டைரக்டர் நந்தலால் மெய்சிலிர்த்துப் போகிறார். ஆனாலும் இறுதியில் இப்படமும் கைநழுவி பி. யு. சின்னப்பாவுக்கு போய் விடுகிறது. சிலம்பத்தில் முக்கியமானது மாடி எனப்படும் மான் கொம்பு சுழற்றும் கலை, அதில் எம்ஜிஆர் எந்த அளவுக்கு கைதேர்ந்தவர் என்பதற்கு அவர் நடித்த உழைக்கும் கரங்கள் படமே சாட்சி. இப்படத்தில் மான்கொம்பு சண்டையில் பிரமாதமாக நடித்திருப்பார்.

அடுத்து நீண்ட முயற்சிக்குப் பின்னர் ஸ்ரீ முருகன் பட இயக்குனர் ௭ஸ்.ஏ.௭ஸ் சாமி அவர்களின் மூலம் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைகிறது. திரைப்படத்துறையில் தன் பத்தொன்பது வயதில் நடிக்கத் தொடங்கி பதினோரு ஆண்டுகளுக்கு பிறகு முப்பது வயதில், 1947 ஆம் ஆண்டு  இராஜகுமாரி திரைப்படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக வெள்ளித் திரையில் ஜொலிக்கத் தொடங்குகிறார்.அடுத்து  இதே ஆண்டில் வெளியான பைத்தியக்காரன் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். 1948 ல் ௭ம்ஜிஆர் அபிமன்யு,ராஜமுக்தி மற்றும் மோகினி போன்ற படங்களிலும்,1949 ல் ரத்னகுமார் என்ற படத்திலும்  சிறு வேடங்களில் நடித்து படங்கள் வெளியானது.

இந்நிலையில் அன்னை சத்யா அவர்கள், எம்ஜிஆருக்கு சதானந்தவதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வைக்கிறார். திருமணம் முடிந்த சில மாதங்களில் எம்ஜிஆரின் மனைவி சதானந்தவதி கர்ப்பம் அடைந்து, பின்னர் சில மாதங்களிலேயே காச நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். இப்படி முதல் மனைவியின் இறப்பு, கதாநாயகனாக உயர்ந்தும் அடுத்து சிறு வேடங்களே கிடைத்தது, தற்பொழுது இரண்டாவது மனைவியும் காச நோயால் பாதிக்கப்பட்டது ௭ன அடுத்தடுத்த சோதனைகளால் எம்ஜிஆர் மிகவும் வருந்துகிறார். இதைக்கண்ட அன்னை சத்யா அவர்கள் ௭ம்ஜிஆருக்கு ஆறுதல் கூறி தேற்றுகிறார். பின்னர் எம்ஜிஆரும் அன்னையின் ஆறுதலைப் பெற்று மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.

இதே ஆண்டில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.  அப்பொழுது பகுத்தறிவுப் பகலவன் பெரியாருடன் ௭ற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய அறிஞர் அண்ணா அவர்கள், செப்டம்பர் 17 ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்குகிறார். அப்பொழுது  பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் ஈ.வி.கே சம்பத், கே.ஏ.மதியழகன், என். வி.நடராஜன் போன்றோர் ஐம்பெரும் தலைவர்களாக கருதப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு மே மாதத்தில் கலைஞர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைகிறார். எம்ஜிஆர் திரைப்படங்களில் தொடர்கிறார்.

சரித்திரம் தொடரும்.....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved