🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! தொடர்-4.

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (மூன்றாம் வாரத் தொடர்ச்சி)

"பொன்நிற மேனி, தனியொரு பாணி இதுவே எம்ஜிஆர்" 

எம்ஜிஆர் மீண்டும் கதாநாயகனாகத்  தோன்றி வெள்ளித்திரையில்  ஜொலித்த மருதநாட்டு இளவரசி 1950 ல் வெளியாகிறது. இதில் கதாநாயகியாக வி.என்.ஜானகி முதன் முதலில் ஜோடி சேருகின்றார். இவர் தோற்றத்தில் எம்ஜிஆரின் முதல் மனைவி பார்கவியைப்போல் இருப்பதால், இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டு, அதுவே  நாளடைவில் காதலாக மலர்கிறது. அடுத்து இதே ஆண்டில் எம்ஜிஆர்  நடித்த மந்திரிகுமாரி படம் வெளியானது. இந்தப் படத்தில் கருணாநிதி எழுதிய வசனத்தை எம்ஜிஆர் சிறப்பாகப் பேசி நடித்திருப்பார். அந்த வசனத்தை  உங்களின் பார்வைக்கு கொண்டு வருவது நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன். இதோ அந்த வசனம் : வீரர்களே சிங்கங்கள் உலவும் காட்டிலே சிறுநரிகள் திரிவதுபோல, இன்று  நமது நாட்டைச் சுற்றி அலைகிறது ஒரு சுயநலக்கூட்டம். எண்ணிக்கையில் குறைந்த அந்த இதயமற்ற கூட்டம் வஞ்சகத்தால் வாழ்கிறது. நிரபராதிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்கிறது. அனாதைகளின் ரத்தத்தை அள்ளிக் குடிக்கிறது. நாட்டிலே ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி கிளம்புகிற  அளவுக்கு அவர்களின் அட்டகாசம். இனி பொறுமையில்லை... அந்த கொள்ளைக் கூட்டத்தை விட்டு வைப்பதாக உத்தேசமுமில்லை... கொதித்துக் கிளம்புங்கள். அவர்கள் சிலர்! நாம் பலர்!! அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள்! நாம் சூரர்கள்!! சிங்கத் தமிழர்களே! சீறி எழுங்கள் என்று அருமையாக, உணர்ச்சி பொங்க பேசி மக்களின் ஏகபோக வரவேற்பைப் பெற்றிருப்பார். 

எம்ஜிஆர் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த இந்த நேரத்தில் தான் முதன் முதலாக மதுரையில் ரசிகர் மன்றம் தொடங்கப்படுகிறது. அதன் பின்னர் எம்ஜிஆர் பெயரில்  பல்வேறு இடங்களில் ரசிகர் மன்றங்களைத் தொடங்கினார்கள். பின்பு 1960 களில் இவற்றையெல்லாம், ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் ஒன்றிணைத்து எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் என்று பெயர் சூட்டப்பட்டது. பிறகு எம்ஜிஆர்  திமுகவில் இருந்தபொழுது, திமுக தலைமையின் அங்கீகாரத்துடன் அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர் மன்றமாக மாற்றப்படுகிறது.

1951 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் மர்மயோகி, அடுத்து ஏக்தா ராஜா என்கிற இந்திப் படம், இதைத் தொடர்ந்து சர்வாதிகாரி என மூன்று படங்கள் வெளியாயின.1952 ஆம் ஆண்டு  எம்ஜிஆர் நடித்த அந்தமான் கைதி, குமாரி, என் தங்கை போன்ற படங்கள் வெளியானது. அப்பொழுது மணப்பாறையைச் சேர்ந்த உறந்தை உலகப்பனின் வசந்தகலா நாடக மன்றம் திருச்சியில் உள்ள தேவர் ஹாலில் நாடகம் நடத்திக் கொண்டு இருந்தது. அந்த நாடகத்தின் இடைவேளையின் போது எம்ஜிஆர் அவர்களுக்கு உறந்தை உலகப்பன் அளித்த புரட்சி நடிகர் பட்டத்தை கருணாநிதி மூலம் அறிவிக்கச் செய்கிறார். இதற்கு முன்னர்(1950 க்கு முன்) ஆரம்ப காலங்களில் பொதுவுடைமைக் கருத்துக்களை ஏற்ற எம்ஜிஆர் அவர்கள் , பிறகு தேசத் தந்தை மகாத்மா காந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோரால் தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, கதர்சட்டை, கழுத்தில் ருத்திராட்சைக் கொட்டை என உலா வரத் தொடங்குகிறார். பின்னர் எம்ஜிஆர் அவர்களுக்கு அரசியல் ஆர்வம் துளிர்விடத் தொடங்குகிறது. அதன் பிறகு காலப்போக்கில் சிவாஜி கண்ட  இந்து சாம்ராஜ்யம் என்ற அண்ணாவின் நாடகத்தில் நடிப்பதற்காக, டி.வி.நாராயணசாமி என்பவரால் அண்ணாவிடம் எம்ஜிஆர் முதன் முதலில் அறிமுகம் ஆகிறார். அதன் பின்னர் அண்ணா, தான் எழுதிய பணத்தோட்டம் ௭ன்ற  நூலை ௭ம்ஜிஆரிடம் கொடுக்கிறார். அதைப் பெற்றுப் படித்த எம்ஜிஆர், அண்ணாவின் எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலால் கவரப்பட்டு 1953 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைகிறார். 

எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்தபோதும், தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து வருகின்றார். ஆதலால் எம்ஜிஆர் நாடக மன்றம் தொடங்கி, ஆர்.எம்.வீரப்பனை அதன் நிர்வாகியாக நியமனம் செய்கின்றார். இந்த நாடக மன்றத்தின் முதல் நாடகம் 'இடிந்த கோயில்' என்பதாகும். அது கல்லக்குடி போராட்ட நிதிக்காக அக்டோபர் முதல் வாரத்தில் திருச்சியில் நடைபெற்றது. பின்னர் இடிந்த கோயில் என்பதை ஆர்.எம்.வீரப்பன்  யோசனையின் பேரில் இன்பகனவு என மாற்றுகிறார். அதற்குப் பிறகு எம்ஜிஆர் படங்கள் தொடர்பான வேலைகளையும் அவர் கவனிக்கத் தொடங்குகின்றார். திரையுலகில் எம்ஜிஆர் நடித்து 1954 ல் வெளியான மலைக்கள்ளன் படம் பிரமாண்டமான வெற்றியைப் பெறுகின்றது. அத்துடன் திரை உலகில் இரு துருவங்களான எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படமும் இதே ஆண்டில் வெளியாகிறது. 

இதேபோல் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டே, எம்ஜிஆர் மக்களிடம் நல்ல செல்வாக்குப் பெற்று வருகின்றார்.அதே நேரத்தில் அண்ணாவின் தலைமையிலான திமுகவும் தேர்தல் அரசியலில் களம் காண விரும்புகிறது.ஆதலால்  1956 ல் மே 17  முதல் 20 வரை,   திமுகவின் இரண்டாவது மாநில  மாநாட்டை திருச்சியில் நடத்துகிறது . அந்த நான்கு நாள்  மாநாட்டில் தொண்டர்கள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி, தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்படுகிறது. அடுத்து சென்னையில் ஜுன் 26 ஆம் தேதி ம.பொ.சி. அவர்களின் பொன்விழா நடைபெறுகிறது. அந்த மேடையில் பேசிய எம்ஜிஆர் தமிழை மழை போல் பொழியும் 'சிவஞானம் ' எனப் பாராட்டிப் பேசுகின்றார். இதே போல் திராவிட முன்னேற்ற கழக மேடைகளிலும் பேசத் தொடங்கி, அரசியல் பணியிலும் ஈடுபட்டு வருகின்றார். 1957 ல் திமுக முதன் முறையாக தேர்தல் அரசியலில் களம் காண்கிறது. எம்ஜிஆரும் அரசியல் களத்தில் முதல் முறையாக திமுகவிற்கு பிரச்சாரம் செய்யத் தொடங்குகின்றார். அண்ணா உட்பட கழக முன்னணியினரும் களத்தில் இறங்குகின்றனர். இந்த தேர்தலில்  124 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக,15 தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்தில் நுழைகின்றது. அத்துடன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 11 இடங்களில் நின்று 2 இடங்களில் வெற்றி பெறுகிறது. அதன் பிறகு எம்ஜிஆர் சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்த தொடங்குகின்றார். 

அதேசமயம் 1958 ஆம் ஆண்டு ஜனவரி 5 ல் அப்போதைய பிரதமர் நேரு சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி போராட்டம் அறிவிக்கப் படுகிறது. அந்த போராட்டத்திற்கு தயாரான எம்ஜிஆரை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நள்ளிரவில் கைது செய்கிறார்கள். பின்பு நேரு வந்து, திரும்பிய பிறகு  விடுவிக்கப் படுகிறார். அப்போது சிறையில் தனக்கு கொடுக்க வந்த சிறப்பு வசதிகள் எதையுமே ஏற்க மறுத்து விடுகிறார். அதுமட்டுமல்ல தன்னை சந்திக்க வருபவர்கள் அவருக்காக வாங்கி வரும் உணவுப் பொருள்களை, சிறையில் இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து தன் வள்ளல் தன்மையை அங்கும் தொடர்கிறார்.இதே ஆண்டில் எம்ஜிஆர் தன் எதிர்கால கனவுப் படமான *நாடோடி மன்னன்* என்ற காவியத்தை உருவாக்கி, அதுவரை தான் கற்ற வித்தை மற்றும்   வியர்வை  சிந்தி சம்பாதித்த பணம் என எல்லாவற்றையும் மொத்தமாகக் கொட்டி, அது போதாத போதும் அதிகக் கடன் பெற்று மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என பல பரிமாணங்களில்  பிரமாண்டமான வெற்றியைப் பெறுகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் பொழுது எம்ஜிஆர், உணவுக்காக செலவு செய்த பணத்தைக் கொண்டு இன்னொரு படமே ௭டுத்திருக்கலாம் ௭னச் சொல்கின்றனர். இந்த படத்தைப் பற்றி எம்ஜிஆர் அவர்கள் , படம் வெற்றி பெற்றால் நான் மன்னன், தோல்வி அடைந்தால்  நாடோடி ௭ன்று சூளுறைக்கிறார். இதைக் கண்ட தமிழக மக்கள் நீங்கள் நாடோடி அல்ல, என்றுமே ௭ங்கள் மன்னன் தான் என்று உதட்டளவில் சொல்லாமல் வசூல் மூலம் நிரூபித்து மகுடம் சூட்டுகின்றனர். இந்தப் படத்தில் வரும் வசனங்கள் எம்ஜிஆரின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பொருத்தமாக இருந்தது. அந்த வசனத்தை இங்கே பதிவிடுவது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதோ அந்த வசனம்....

எம்ஜிஆர்: என்னை நம்புகிறாயா மனோகரி?

எம்.என். ராஜம்: நம்புகிறேன் அண்ணா நம்புகிறேன். நானென்ன, இனி இந்த நாடே உங்களை நம்பித்தான் ஆக வேண்டும்.

எம்ஜிஆர்: என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பி கெட்டவர்கள் எவருமில்லை என்று பேசும்பொழுது, ரசிகர்களால் திரை அரங்கமே அதிரும். இதை அடுத்து  அமைச்சரிடம்,எம்ஜிஆர்:  நான் சாதாரணக் குடியில் பிறந்தவன். பலமில்லாத மாடு, உழமுடியாத கலப்பை, அதிகாரம் இல்லாத பதவி இவைகளை நான் விரும்புவதே இல்லை… அமைச்சரே, உங்கள் கட்டாயத்திற்காக நான் மன்னனாக இருக்க சம்மதிக்கிறேன்.ஆனால் சட்டம் இயற்றும் அதிகாரம் அத்தனையும், என் கையில் தான் இருக்க வேண்டும் என்பார். பின்பு அமைச்சரே! நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறவர்கள், நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன். பெரிய இடத்தின் உள்ளே புகுந்ததால் என் உலகம் மாறியிருக்கிறது. ஆனால் என் உள்ளம் மாறி விடவில்லை. நான் இங்கிருந்து போக விரும்புவதெல்லாம், வெளியே மக்களுக்கு தொண்டு செய்யத்தான், அதை இங்கிருந்தே செய்ய முடிந்தால் தான் உங்கள் திட்டத்திற்கு இணங்குவேன் என்று பேசும்போது மீண்டும் ரசிகர்களின் கரவொலி விண்ணையே  அதிர வைக்கும். இதேபோல் பாடல் வரிகளும் சிறப்பாக இருக்கும். அதில் சில வரிகள் மட்டும் இங்கே காண்போம்: காடு விளையட்டும் பொண்ணே-நமக்கு காலம் இருக்குது பின்னே, காலம் இருக்குது பின்னே. நானே போடப்போறேன் சட்டம்-பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்! நாடு நலம் பெரும் திட்டம்!! என பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி புரியப்போவதை, முன் கூட்டியே பாடல் மூலம் மக்களிடம்  சொல்லிய எம்ஜிஆர் ஓர் தீர்க்கதர்சி என்பதை, நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

                                              சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved