🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர் 7.

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (6-ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம்: 'உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது '

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம். தீப ஒளி வீசும் தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாளுக்குப் பிறகு தங்களைச் சந்திப்பதில்  அளவில்லா ஆனந்தமே... அனைவரும் தீபாவளியை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன். தீபாவளிப் பரிசாக வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பும் தங்களுக்கு கூடுதல் சந்தோசத்தை அளித்திருக்கும் என்ற எண்ணத்தில் இந்த வாரத் தொடரைத் தொடங்குகிறேன்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் கதாநாயகியாக நடித்தவர்களில் புரட்சி தலைவி ஜெயலலிதா, கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி மற்றும் லதா போன்றோர் முக்கியமானவர்கள். அதில் எம்ஜிஆர் உடன் ஜெயலலிதா 28 படங்களிலும், சரோஜாதேவி 26 படங்களிலும், லதா 13 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் ஜெயலலிதா மிகவும் முக்கியமானவர். 1960 ல் மக்கள் திலகம் எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான "பாக்தாத் திருடன்" படத்தில் பாலையாவின் ஜோடியாக ஜெயலலிதாவின் அன்னை சந்தியா நடித்திருப்பார். அப்போது நடந்த படப்பிடிப்பின் பொழுது, அன்னையுடன் ஜெயலலிதாவும் பதினொரு வயது சிறுமியாக  அங்கு வந்திருப்பார். அப்போது அவரிடம் இருந்த சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்ட எம்ஜிஆர்,  1965 ல் அவர் நடித்து வெள்ளி விழா கண்ட "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில்  ஜெயலலிதாவை முதன்முதலில் தனக்கு ஜோடியாக அறிமுகம் செய்கிறார். இந்தப் படத்தில் எம்ஜிஆர், 'நமது தேவையே பிறருடைய நன்மைதான், நமக்கென்று சேர்த்து வைக்கும் எண்ணம் வந்துவிட்டால், பிறருக்காக நாம் எதையும் செய்ய முடியாது' என பேசும்பொழுது, மக்களின் கரகோசத்தால் அரங்கமே அலறும்... அடுத்து சண்டைக் காட்சியில் நம்பியார்: நான் தோல்விகளையே சந்திக்காதவன் என்பார், உடனே எம்ஜிஆர்: நான் தோல்விகளையே எதிரிகளுக்கு பரிசாகக் கொடுத்துப் பழக்கப்பட்டவன் என்று பதிலளிப்பார். அதேபோல்  அரசியலில் தன் எதிரிகளுக்கு தோல்விகளை மட்டுமே பரிசாக அளித்து வாழ்ந்தவர் எம்ஜிஆர்.



இந்தப் படத்தில் "பூங்கொடி" என்ற பெயரில் ராஜகுமாரியாக நடித்த ஜெயலலிதாவிடம், சற்றுப்பொறு பூங்கொடி கொஞ்சம் விளையாடி விட்டு வருகிறேன் என்று சொல்லும் பாணியும் சரி, வாள்வீச்சில் காட்டும் பாணியும் சரி மிகவும் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் 2014-ல் வெளியிட்டார்கள். அப்பொழுது சென்னையில் 190 நாட்கள் ஓடி மீண்டும் வெள்ளிவிழா கண்டபோது, அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், என் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்ட படம் இந்த "ஆயிரத்தில் ஒருவன்" என்று குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆருடன் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயலலிதா ஆவார். 

எம்ஜிஆர் எந்த ஒரு அதிகாரப் பதவியில் இல்லாத பொழுதும் மக்கள் சேவைக்காக, பல்வேறு நாடுகளால் அழைக்கப்பட்டு அங்கெல்லாம் கௌரவிக்கப்பட்ட  ஒரே நடிகர் இவர் மட்டுமே என்பது இவரின் தனிச் சிறப்பு . அப்படி ஒருமுறை நம் அண்டை நாடான இலங்கையில் இருந்து, தொண்டு நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைச் சங்கங்கள் இணைந்து எம்ஜிஆர் அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்து இருந்தது . (அப்பொழுது இலங்கையில் உள்நாட்டுப் போர்  தொடங்கவில்லை). அதை ஏற்று  தான் பிறந்த மண்ணுக்கு, அதுவும் நம்  தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகள் அதிகம் உள்ள நாடுகளில் முக்கிய நாடான இலங்கைக்கு, நடிகை சரோஜாதேவி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரையும் உடன் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

அங்கு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர். பின்னர் இலங்கை அரசு, எம்ஜிஆருக்கு முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணி வகுப்புடன் சுமார் 15 கி.மீ தூரம்  சிறப்பான வரவேற்பு அளிக்கிறது. அதன் பிறகு யாழ்ப்பாணத்தில் நடந்த வரவேற்புக் கூட்டத்தில் இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கி பேசுகிற பொழுது, எம்ஜிஆர் சிறந்த கலைஞர் மட்டும் அல்ல, அவர் ஒரு சிறந்த கொடையாளியும் ஆவார் என்கிறார். தொடர்ந்து பேசிய அவர் இப்படி ஒரு கூட்டத்தை இதற்கு முன்  நான் பார்த்தது இல்லை என்றும், இலங்கையிலும் தன்னைப் பார்க்க இப்படி ஒரு பெருங்கூட்டம் கூடும் என்பதை எம்ஜிஆர் நிரூபித்து விட்டார் என்றும் பேசினார். அடுத்து இலங்கை பிரதமர் டட்லி சேனநாயகாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த எம்ஜிஆர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தந்தத்தினாலான நேரு சிலையையும், தன் சார்பாக தந்தத்தினாலான மேஜை விளக்கையும் பரிசாக அளிக்கிறார். பிறகு சிங்களத் திரைப்படக் கலைஞர்கள் அங்குள்ள விஜயா ஸ்டூடியோவில் எம்ஜிஆருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். இறுதியாக அக்டோபர் 22 ல் கொழும்பு  விளையாட்டு அரங்கில் எம்ஜிஆருக்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெறுகிறது. அதில் இலங்கையின் உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை ஆற்றுகிறார். பின்னர் பெய்த  அடை மழையிலும் இலட்சக் கணக்கான மக்கள் நனைந்தபடியே எம்ஜிஆரின்  பேச்சை ஆர்வமாகக் கேட்கின்றனர். அப்பொழுது அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா அவர்கள் எம்ஜிஆருக்கு 'திருத்திய சக்கரவர்த்தி' என்று பட்டம் வழங்கி சிறப்பிக்கிறார். இதுபோல் சென்ற இடங்களில் எல்லாம் பாராட்டு மழையில் நனைந்தவர் எம்ஜிஆர் என்பதே வரலாறு. 

திரைப் படங்களிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று  மக்களின் அன்புமழையில் நனைந்து கொண்டு  இருந்தவர் எம்ஜிஆர். 1966 ல் எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான "முகராசி" படம் வெறும் பன்னிரெண்டு நாட்களில் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக நூறு நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்தது. இதை அடுத்து எம்ஜிஆரின் நடிப்பில் உருவான "தாலிபாக்கியம்" படத்தின் சில காட்சிகள் மைசூர் அருகில் நடந்தது. இதற்காக இப்படத்தின் குழுவினர் மைசூரில் உள்ள ஒரு  ஹோட்டளில் தங்குகின்றனர். அப்பொழுது பிரபல நடிகை கண்ணாம்பாவின் கணவரும், இந்தப் படத்தை தயாரித்து இயக்கியவருமான நாகபூசணம் பதறியபடி எம்ஜிஆரிடம் வருகிறார். பின்பு  தன்னிடம் தயாரிப்பு செலவுக்காக இருந்த மூன்று இலட்சம் ரூபாய் தொலைந்து விட்டதாகச் சொல்லி கண் கலங்குகிறார். இதைக் கேட்ட எம்ஜிஆர் அவருக்கு ஆறுதல் கூறியதுடன், சென்னையில் இருந்த தன் அண்ணனின் மைத்துனர் குஞ்சப்பனிடம் மூன்று இலட்சம் ரூபாய் கொண்டு வரச்சொல்லி, அதைக் கொடுத்து உதவுகிறார். அது மாத்திரமல்ல அந்த பணத்தைத் திரும்பத்தர வேண்டாம் எனவும் கூறி விடுகிறார். இதுபோல் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் ௭ன்ற வள்ளலாரின் கூற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்து சரித்திரம் படைத்த, கொடுத்து கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் தான் ௭ம்ஜிஆர் அவர்கள். 

இதைத் தொடர்ந்து அரசியல் துறையிலும் வளர்ச்சி அடையத் தொடங்குகிறார்.  எம்ஜிஆர். 1967 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது. எம்ஜிஆர் பரங்கிமலை தொகுதியில் திமுகவின் வேட்பாளராக முதல்முறையாக களம் இறங்குகிறார்.  ஜனவரி 1,2 தேதிகளில் நடைபெற்ற விருகம்பாக்கம் சிறப்பு மாநாட்டில் பேசிய எம்ஜிஆர் ஒரு இலட்சம் தேர்தல் நிதி தருவதாக அறிவிக்கிறார். இதையடுத்துப் பேசிய அண்ணா, எம்ஜிஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருப்பது போன்றது, அது எங்கும் போய்விடாது. அவர் தமிழகம் முழுவதும் ஒரு மாத காலம் கழகத்திற்காக சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்றும், அவர் முகம் காட்டினால் கழகத்திற்கு முப்பாதாயிரம் வாக்குகள் கிடைக்கும் என்றும் பேசுகிறார். அண்ணாவின்  வேண்டுகோளை  அப்படியே ஏற்ற எம்ஜிஆர், ஒரு மாதகாலம் படப்பிடிப்புகளை எல்லாம் நிறுத்திவிட்டு தமிழகம் முழுவதிலும் பட்டி, தொட்டி என  தேர்தல் பிரச்சாரத்தில் சூறாவளியாக வலம் வருகிறார்.  அப்போது எம்ஜிஆர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. 


சரித்திரம் தொடரும்..

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved