🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வன்னியரின் உயிர் தியாகம் தான் பிறசாதிகளுக்கும் MBC இடஒதுக்கீடு பெற்றுத்தந்ததா? மருத்துவருக்கு கேள்வி.

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்,  நீதிமன்றம் எழுப்பிய ஏழு கேள்விகளுக்கு பதில் அளிப்பதாகக்கூறி நீதிபதிகள் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் வடிவமைத்திருந்தார். 

இதுதவிர, சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடே பிற சமுதாயங்களுக்கும் சேர்த்து தாங்கள் பெற்றுத்தந்ததாகவும்,  இதற்காக வன்னியர்கள் 21 உயிர்களை தியாகம் செய்துள்ளதாக கூறுவதோடு, மற்ற சமூகங்களுக்கு இடஒதுக்கீடு தேவையெனில் நீங்களும் போராடிப் பெறவேண்டியது தானே என்பதோடு, பிற சமூகங்களை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக தரம் தாழ்ந்து பேசிவருகின்றார்கள்.  இதனால் கொதித்துப்போயுள்ள பிற சமுதாயத்தினர் MBC இடஒதுக்கீட்டில் நடைபெற்ற உண்மைகளையும், பலனடைந்தவர்களையும்,  இதுவரை நடைபெற்ற மோசடிகளையும் தோலுரித்து வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக சோசலிச மையத்தின் தோழர் மருதுபாண்டியன் மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு கேள்விக்கனைகளை தொடுத்துள்ளார்.  அதன் விபரம் வருமாறு...

மரியாதைக்குரிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கு சில கேள்விகள்:

 பல்வேறு கருத்து முரண்கள் இருந்தாலும் தமிழக அரசியலில் தாங்கள் மிகவும் முக்கியமானவர்.   தமிழ் வழி கல்வி, சூழலியல் பாதுகாப்பு, உழவர் நலன், மதுவிலக்கு, தமிழீழ விடுதலை ஆதரவு போன்ற பல்வேறு விடயங்களில் தாங்கள் சிறந்த நிலைப்பாட்டை பல நேரங்களில் எடுத்துள்ளீர்கள். வன்னியர் சமுதாயத்திற்குப் பாதுகாப்பு அரணாக அரசியல், சமூக தளங்களில் விளங்கி கொண்டிருக்கிறீர்கள். பொதுத்தளத்தில் தமிழ் இனம் சார்ந்த, தமிழர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்.

சமூகத்திற்குப்  பயனளிக்கக் கூடிய பல்வேறு தளங்களில் நீங்கள் பயணித்து இருந்தாலும், சில இடங்களில் நீங்கள் சறுக்கி விடுகிறீர்கள். குறிப்பாக சமூக நீதி குறித்த உங்கள் பார்வை பல நேரங்களில் மெச்சத் தகுந்தாக இருந்தாலும் சில சமயங்களில் நீங்கள் தடம் புரண்டு விடுகிறீர்கள். 

குறிப்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டம் குறித்த விடயத்தில் தாங்கள்  நடத்தும் நாடகங்கள் சகிக்க முடியாததாக உள்ளது. 

இவை குறித்து அடியேன் எழுப்பும் சில ஐயங்களுக்கு தாங்கள்  விடையளிக்க வேண்டுகிறேன். 

1. 10.5% இட ஒதுக்கீட்டு சட்டம் எந்த சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது என்பதை நேர்மையாக விளக்க முடியுமா? தேர்தல் நாள் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவசர அவசரமாகச் சட்டமன்றத்தைக் கூட்டி இந்தச் சட்டத்தை எதற்காக  நிறைவேற்றினார்கள்? அரசியல் ஆதாயத்திற்காகத்தான் இந்தச் சட்டத்தை அவசரகதியில் நிறைவேற்றினார்கள் என்பதை மறுக்க முடியுமா?

 2.  எந்த ஒரு சட்டமும் இயற்றுவதற்கு முன்பு சட்டப்பேரவையில் நன்கு விவாதித்து, சமூக ஊடகத் தளங்களில் அரசியல் அறிஞர்களால் விவாதிக்கப்பட  வேண்டும் என்ற கருத்தில் உங்களுக்கு ஏதாவது மாறுபாடு உண்டா? இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் அப்படி ஏதேனும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதா?

3. இட ஒதுக்கீடை  மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே வழங்குவதுதான் சமூக நீதியா?  மண்டல் ஆணையம் வரையறுத்த மற்ற முக்கியக் கூறுகளைக் கணக்கில் கொள்ள வேண்டாமா? இட ஒதுக்கீட்டில் மக்கள் தொகையை மட்டுமே முக்கிய அலகாகக் கொண்டால் , மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட சமூக மக்களுக்கு எப்படி உரிய சமூக நீதி கிடைக்கும்?

 4. இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆதாரமாக அம்பாசங்கர் ஆணைய அறிக்கையை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறீர்கள். அம்பாசங்கர் ஆணைய அறிக்கை என்பது ஒரு மோசடியான அறிக்கை என்று அந்தக் குழுவில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கூறியதை நீங்கள் அறிவீர்களா? மாட்டீர்களா? அம்பாசங்கர் அறிக்கையை மறுத்து,  குழுவில் இருந்த 21 பேரில் 14 பேர் மாற்று அறிக்கையை சமர்ப்பித்தது உஙகளுக்குத் தெரியுமா? 

 5. 1971 சட்டநாதன் ஆணைய அறிக்கையில் சீர்மரபினர் மக்கள்தொகை 30 இலட்சமாக இருந்தது. 1985 அம்பாசங்கர் அறிக்கையில் வெறும் 15 இலட்சமாக குறைந்துள்ளது.   15 ஆண்டுகள் கழித்து ஒரு மக்கள் சமூகத்தின் எண்ணிக்கை கூடுமா? குறையுமா? இந்த அறிக்கையை ஏற்கும் நீங்கள் இதற்கு என்ன விளக்கம் தருகிறீர்கள்? இந்த அடிப்படை உண்மையைக் கூட உணராமல் மீண்டும் மீண்டும் அம்பாசங்கர் அறிக்கையை வலியுறுத்துவது மோசடி இல்லையா?

 6. எம் பி சி நாங்கள்தான் உருவாக்கினோம் என்று உங்களுடைய கட்சிக்காரர்களையும், உங்கள் சமூக மக்களையும் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே! என்றாவது ஒரு நாளாவது எம்பிசி இட ஒதுக்கீடு வேண்டும் என்று நீங்கள் போராட்டம் நடத்தியது உண்டா? எம் பி சி என்ற இட ஒதுக்கீடு முறை உங்கள் போராட்டத்திற்கு முன் இல்லவே இல்லை என்று உங்களால் வாதிட முடியுமா?   1957இல் காமராசர் தானே எம்பிசி என்பதை கொண்டு வந்தார். வண்ணார்கள் மாநாடு நடத்தி காமராஜரிடம் வேண்டுகோள் வைத்தனர். அதனால் உருவாக்கப்பட்டதுதான் எம்பிசி  என்ற வரலாறாவது உங்களுக்குத் தெரியுமா? வண்ணார் சமூகத்தின் முன்முயற்சியில் பெற்ற  பலனை அன்று போராடாமலேயே  வன்னியர்களும்  அனுபவித்ததை மறுக்க முடியுமா?

 7. சில நாட்களுக்கு முன் பாமக தலைவர் கோ. க . மணி அவர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்து மனு கொடுத்து, இட ஒதுக்கீடு தொடர்பாக  வெள்ளை அறிக்கை கேட்டது ஏன்?   வெள்ளை அறிக்கை கேட்பதே இவை குறித்த புள்ளி விபரங்களை அறிந்து கொள்ளத்தானே. பின் எப்படி எந்த புள்ளி விபரமும் இல்லாமலேயே வன்னியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று முடிவுக்கு வந்தீர்கள்? எந்த புள்ளி விபரத்தின் அடிப்படையில் வன்னியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறீர்கள்?

8. 1989லிருந்து இன்று வரை MBC பிரிவில் எந்தச் சமூகம் அதிக பலன்கள் பெற்றது என்ற புள்ளி விபரம் உண்டா? வன்னியர்கள் குறைந்த பங்குதான் பெற்றார்கள் என்பதற்கு  புள்ளி விபர ஆதாரங்கள் உண்டா?

9. சமூகநீதி என்பது ஒரு சாதிக்கு மட்டுமானதா? சமூக நீதியில் அக்கறையுள்ள தலைவராக இருந்திருந்தால் தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர் உள்ளிட்ட 68 DNT சமுதாய மக்களின் புள்ளி விபரங்களை சேகரிக்க மத்திய அரசு மாநில அரஸுகளை  கேட்டுக் கொண்டபொழுது, அப்படி DNT மக்களின் விபரங்களை சேகரித்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமென்று அதமிழக அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தீரே, இது சமூகநீதி காவலருக்கு அழகா?

10. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆறிக்கை மட்டும் வெளியிடுகிறீர்களே, நீங்கள் அங்கம் வகிக்கும் மத்திய அரசுக்கு என்றாவது மிரட்டல் விடுத்தது உண்டா?

11.நீதியரசர்.குலசேகரன் ஆணையம் என்ன பணி செய்தது? இப்பொழுது ஆணையம் என்ன ஆனது என்று கேள்வி கேட்டது உண்டா?

12. எல்லா MBC  சாதியினருக்கும் வன்னியர்களே இடஒதுக்கீடு பெற்றுக்கொடுத்ததாக அள்ளி விடுகின்றீரே, என்றாவது தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர்கள் என தற்பொழுது குலசேகரன் ஆணையம் வரை தொடர்ந்து வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டுவருகிறார்களே, பிற MBC சமுதாயங்களுக்கு கொடுக்கச்சொல்லி கேட்டதுண்டா?

உங்கள் அறிவாற்றலுக்கு இவை எளிய வினாக்களாக இருந்தாலும், உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன் ஐயா.

தோழமையுடன்

மருதுபாண்டியன்.
சோசலிச மையம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved