🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தார்களின் முதற்கட்ட வழக்காடு நிதி 2.05 லட்சம் வழங்கப்பட்டது!

கம்பளத்தார்களின் முதற்கட்ட உச்சநீதிமன்ற வழக்காடு நிதி 2.05 லட்சம் வழங்கப்பட்டது!

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 116 சாதிகளுக்கு வழங்கப்பட்டுவந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வன்னியர் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு வழங்கி முந்தைய எடப்பாடி.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கடந்த பிரவரி மாதம் 8/2021 சட்டம் கொண்டுவந்தது அனைவரும் அறிந்ததே. இச்சட்டத்தை எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 DNC/DNT சமூகங்களை உள்ளடக்கிய "சீர்மரபினர் நலச்சங்கம்" சார்பில் இடைக்கால தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டதை அடுத்து, இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட்டது. 


இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றதாலும், அதனையடுத்து கொரோனோ இரண்டாவது அலையின் காரணமாகவும் வழக்கு விசாரணை சற்று தாமதமானது.

அதற்குப்பின் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில்  இச்சட்டத்தால் தங்களுக்கான உரிமைகள் பாதிக்கப்படுவதாகக்கூறி வழக்கை விரைந்து நடத்த நீதிமன்றத்தை வலியுறுத்தியது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதத்திலிருந்து வழக்கு விசாரணையை  காணொளி மூலம் நடத்த தொடங்கியது. இருந்தபோதிலும் விசாரணை அமர்வில் இருந்த நீதியரசர்கள் அடுத்தடுத்து வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொண்டதால் வழக்கின் நிலை குறித்து அச்சம் தொற்றிக்கொண்டது. இறுதியாக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் நீதியரசர்கள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கர் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


அதிமுக்கியத்துவம் வாயந்த இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே வழக்கு விசாரணையை தினசரி அடிப்படையில் பிற்பகல் அமர்வில் இருதரப்பு வாதங்களையும் நீதியரசர்கள் கேட்டு வந்தனர். ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் மற்றும் அரசுதரப்பு, பாட்டாளி மக்கள் கட்சி தரப்பு வாதங்களை கேட்ட நீதியரசர்கள், இறுதியாக அக்டோபர் 22-ஆம் தேதி விசாரணையை நிறைவு செய்தனர். விசாரணை முடிந்து தீர்ப்பு வர ஒரிரு மாதங்களாவது நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் என்று இருதரப்புமே கருதி வந்த நிலையில், ஒரே வாரத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி தீர்ப்பு வழங்க இருப்பதாக அக்டோபர் 30-ஆம் தேதி நீதிபதிகள் அறிவித்ததை அடுத்து, தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கடந்த நவம்பர் 01-ஆம் தேதி காலை 11 மணியளவில் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய நீதியரசர்கள், வன்னியர் 10.5 விழுக்காடு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி ரத்து செய்து உத்தரவிட்டது. இதை சற்றும் எதிர்பாராத பாமக தரப்பு வழக்கறிஞர்கள், தாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தீர்ப்பை ஒருவார காலம் நிறுத்தி வைக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை காதில் வாங்கிக்கொள்ளாத நீதியரசர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாமக-வினர் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவித்தனர்.


இந்த வன்முறையை முதலில் மென்மையாக கையாண்ட தமிழக காவல்துறை, ஓரிருநாளில் சுதாரித்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யத் தொடங்கியவுடன் போராட்டங்கள் "புஸ்வானமானது". 

தீர்ப்பு வெளியானவுடனே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அறிவித்தார். அவர் அறிவித்தது போலவே தமிழக அரசு சார்பில் இருவாரங்களுக்கு முன்பு உச்சநீதீதிமன்றத்தில் நான்கு வழக்குகளை தாக்கல் செய்தது. அதேபோல் பாமக தரப்பில் மூன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.


மேலும் அரசு தரப்பில் ஆஜராக உச்சநீதிமன்றத்தில் பிரபலமான முகில் ரோத்தகி, அபிசேக் சிங்வி, வில்சன் போன்ற மூத்த வழக்கறிஞர் பட்டாளம் ஆஜராக்வுள்ளதாக தெரிகிறது. இதேபோல் பாமக-வும் அரசுரன் இணைந்து பிரபலமான வழக்கறிஞர்களை அமர்த்தி முதற்கட்ட விசாரணையின் போதே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை வாங்கிவிட முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கு பதிலடியாக தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதிகளின் "சீர்மரபினர் நலச்சங்கத்தின்" சார்பில் "கேவியட்" மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ள முதற்கட்ட விசாரணையில் "தடை" கிடைக்காமல் செய்துவிட்டால், இறுதி வெற்றி தங்களுக்கு சாதகமாக வருவதற்கு அனைத்து சட்ட வாய்ப்புகளும் இருப்பதாக நம்பும் "சீர்மரபினர் நலச்சங்கத்தினர்", முதற்கட்ட விசாரணைக்கு தங்கள் தரப்பிலும் அரசியலமைப்பு சட்டத்தில் நிபுணத்தும் வாய்ந்த ஒருசில பிரபலமான மூத்த வழக்கறிஞர்களையாவது நியமிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வந்தது. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கான கட்டணம் வாய்தா/நிமிட அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால், சில பத்து லட்சங்களாவது முதற்கட்டமாக திரட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, கடந்த சில நாட்களாக பல அமைப்புகள் அவரவர் சாதி மக்களிடம் நிதி திரட்டி வருகின்றன.


தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை பொறுத்தவரை முதற்கட்ட நிதியாக ரூ.200000/- (இரண்டு லட்சம்) வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதின் அடிப்படையில், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை, சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஆகிய அமைப்புகள் தங்கள் சமுதாயத்தினரிடம் நிதி திரட்டி வந்தன. அதேநேரத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தின் மூத்த வழக்கறிஞர் தேடுதலும் நிறைவுபெற்று புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் "ராஜீவ் தவான்" அவர்களிடம் வழக்கை ஒப்படைத்துள்ளது. இவரோடு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கை நடத்திய மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், கர்னல்.பாலகிருஷ்ணன், யோகேஷ்கண்ணா ஆகியோரும் ஆஜராக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கிடையே மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து நேற்று (10.12.2021) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கு நேற்று பட்டியலிடப்படவில்லை. தற்பொழுது வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை (14.12.2021) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உயர்நீதின்ற தீர்ப்பு வெளியானதிலிருந்தே வழக்கை எதிர்கொள்ள தயாராகி வந்த சீர்மரபினர் நலச்சங்கம் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் பல சமூகங்களை சேர்ந்தவர்கள் வழக்காடு நிதியை வழங்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் திரட்டப்பட்டு வரும் வழக்காடு நிதியில் முதற்கட்டமாக ரூ.205000/- (ரூபாய் இரண்டு லட்சத்து ஐந்தாயிரம்) இன்று மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி முனைவர்.எம்.இராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில் "சீர்மரபினர் நலச்சங்கத்தின்" பொருளாளர் பள்ளிக்கரணை ஜெயராமன் அவர்களிடம் காசோலை வழங்கப்பட்டது.

இன்று (11.12.2021) காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மேன்மக்கள் அறக்கட்டளை தலைவர் பி.இராமராஜ், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜ் ஆகியோர் காசோலையை வழங்கினர். இந்நிகச்சியில் டிஎன்டி போராட்டக்குழு தலைவரும், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவருமான கொ.நாகராஜன், மேன்மக்கள் அறக்கட்டளையின் செந்தில் அப்பையன், பாலகிருஷ்ணன், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் துணைத்தலைவர் பெருமாள், ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், பாடி புதுநகர் குருசாமி, முகப்பேர் ராஜா, ஆறுமுகச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இநிகழ்வின்போது வழக்காடு நிதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததைவிட கூடுதலாக ஐந்தாயிரம் வழங்கி, வழக்கிற்கும், கூட்டமைப்பிற்கும் உறுதுணையாக இருந்த தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved