🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! தொடர்-12

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (11-ஆம் வாரத் தொடர்ச்சி)

எம்ஜிஆரின் தத்துவம் "தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்,கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்". 

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உரை தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆதலால்  1972 அக்டோபர் திங்கள் 10 ஆம் நாளில் திமுக தலைமை, அதன் செயற்குழுவின் 31 மொத்த   உறுப்பினர்களில் 26 பேர் கையெழுத்துடன் எம்ஜிஆரிடம் விளக்கம் கேட்டு கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்தது. இது திமுகவில் இருக்கும் எம்ஜிஆரின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்,சாலை மறியல், கண்டன ஊர்வலங்கள் என  போராட்டக்  களமாக மாறியது . தமிழகத்தின் எல்லா திசைகளில் இருந்தும் எம்ஜிஆரின் ஆதரவாளர்கள் சென்னையை நோக்கி வரத் தொடங்கி, தங்கள் ஆதரவுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். அத்துடன் எம்ஜிஆர் ரசிகர் பட்டாளமும் களத்தில் இறங்கினர். சென்னையின் எல்லா சாலைகளும் மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தன. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை கோவில்பட்டி பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில், ஓடி வந்த ஒரு பெண்மணி  நீங்கள் எம்ஜிஆர் கட்சியா? என அண்ணாவிடம் கேட்க, அதற்கு அண்ணாவும் சிரித்துக்கொண்டே ஆமாம் எனச் சொன்னாராம். அப்படிப்பட்ட எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கிவிட்டார்களே என்ற மக்களின் ஆவேசம் தான் இந்தப் போராட்டக் களம் என்பதை நாட்டிற்குப் பறை சாட்டியது என்கின்றனர். இதைக் கண்ட சத்யவாணி முத்து, எம்ஜிஆர் 1000 வோல்ட் மின்சக்தி, அதில் நாம் கை வைத்தால் பாதிப்பு நமக்குத் தான் என எச்சரித்தார். எம்ஜிஆர் மீது நடவடிக்கை எடுத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும் என நாஞ்சில் மனோகரன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் சொல்லிப் பார்த்தனர். எம்ஜிஆர் மீது நடவடிக்கை வேண்டாம் என இரா. செழியன், முரசொலி மாறன் ஆகியோர் வாதாடினர்.எம்ஜிஆரை  நீக்கிவது அண்ணாவையே திமுகவிலிருந்து நீக்குவதற்குச் சமம். எம்ஜிஆர் மகாபாரத அர்ச்சுனன் போல் தனித்துப் போராடுகிறார். அவரை ஆதரித்து, வெற்றி வீரர் ஆக்குங்கள்   என்று மூதறிஞர் ராஜாஜி  அறிக்கை விடுகிறார். அந்த நேரத்தில் எம்ஜிஆர் "இதயவீணை" படப்பிடிப்பில் இருக்கிறார். நீக்கம் பற்றிய விபரம் அறிந்தவுடன் அங்கிருந்த அனைவருக்கும் பாயாசம் கொடுத்து, தானும் அருந்தி மகிழ்ச்சியடைகிறார். பின்னர்  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடியும் தர்மமே வெல்லும் , நிச்சயம் இதில் நான் வெற்றி பெறுவேன் என்று எம்ஜிஆர் அறிக்கை வெளியிடுகிறார்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும் களத்தில் இறங்குகிறார். அவர் கடமை, கண்ணியம். கட்டுப்பாடு என்று அண்ணா சொன்னார், அதில் கட்டுப்பாடு பற்றி திமுகவிற்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், கட்டுப்பாடு குலைந்தால் நீதிக் கட்சியின் நிலை தான் உங்களுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார். பிறகு திமுகவில் இருந்து முரசொலி மாறன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் மூலம் எம்ஜிஆரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்படுகிறது. பின்னர் அக்டோபர் 13 ல் பெரியாரின் அழைப்பின் பேரில், எம்ஜிஆர் பெரியாரைச் சந்தித்து தன் தரப்பு நியாயங்களை விளக்கிக் கூறுகிறார். அக்டோபர் 14 ல் சென்னை தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆரின் அலுவலகத்தில் மாறன், மனோகரன் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே போகும் அதே நேரத்தில், அங்கு ரத்தம் வடிந்த நிலையில்  சட்டமன்ற உறுப்பினரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவருமான முசிறிபுத்தன் பதற்றத்துடன் வருகிறார்.இதைப் பார்த்ததும் வெகுண்டெழுந்த எம்ஜிஆர், ஒருபுறம் சமரசம் பேச உங்களை அனுப்பி விட்டு, மறுபுறம் எங்கள் ஆட்களைத் தாக்குவது என்ன நியாயம்? என ஆவேசப்படுகிறார். பேச்சுவார்த்தை பாதியிலேயே முறிந்து விடுகிறது.

பின்னர் அக்டோபர் 14 அன்று நடந்த திமுக பொதுக்குழுவில் எம்ஜிஆர் விமர்சனம் செய்யப்படுகிறார். உடனே எம்ஜிஆர் மன்றத்தினரும் சுவரொட்டிகள் மூலம் பதிலடி தருகின்றனர். இப் படி பரபரப்பான சூழ்நிலையில்  திமுகவின் 277 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் எம்ஜிஆர் நீக்கம் செய்யப்படுகிறார். இந்த நீக்கம் பற்றி கவிஞர் கண்ணதாசன் இப்படிச் சொன்னதாகத் தெரிய வருகிறது. திடீர்னு ஒரு நாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து என்னப்பா செய்யலாம் என்று கேட்டார். சரி அவர் கணக்கு  தானே கேட்கிறார், எல்லா ஊர்களிலிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் போட்டு, அதன்பின் ஒத்திவைத்து விடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம் என்று நான் சொன்னேன். ஆனால் செயற்குழுவிற்கு முதல் நாள் எனக்கு டெலிபோன் செய்த கருணாநிதி இல்லை இல்லை அது ஒன்றும் நடக்காது, இன்று ஒரேயடியாக ஒழித்து விடவேண்டியதுதான் என்று சொன்னார். அதற்கு நான் சொன்னேன் மக்கள் பின்னணி இருக்குமே என்று, என்ன பத்துபேர் கத்துவான் பார்த்துக்கலாம் என்றார்.

மறுநாள் நான் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நண்பர் 'சோ' அவர்கள் எனக்கு டெலிபோன் செய்து தெரியுமா விசயம்? என்று கேட்டார்.என்ன? தெரியாது என்றேன். எம்ஜிஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள் என்றார். இருக்காதே என்றேன். இப்பொழுது தான் எனக்கு செய்தி வந்தது என்றார். இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது. அவர் டெலிபோன் வைத்தவுடனேயே டெலிபோன் அடித்தது, கருணாநிதி பேசினார். முதன் முதலாக உனக்கு தான்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா? என்றார். உங்களுக்கு முன்னாடி 'சோ' போன் பண்ணினார்யா என்றேன். என்ன நினைக்கிறாய் என்றார். கொஞ்சம் கலகம் இருக்குமே என்றேன். என்ன பத்து ஊரில் கலகம் செய்வார்கள் பார்த்துக் கொள்ளலாம் என்றார் அவர். ஆனால் அவர் போட்ட கணக்கு தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே, அது பெரும் கூட்டமாகத் திகழும் என்பதை நான் பல கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். அதற்கு 1971 பொதுத் தேர்தலே சான்று. பின்னர் எம்ஜிஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருப்பதை கருணாநிதியும் கண்டார்.இது இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல் இருந்தது என்றும், அதிமுகவை தொடங்க வேண்டிய நிர்பந்தம் எம்ஜிஆருக்கு ஏற்பட்டது என்றும் கண்ணதாசன் பதிவு செய்துள்ளார் எனக் கூறுகின்றனர்.

இதன் பின்னர் எம்ஜிஆரும் திமுகவிலிருந்து விலகிவிட்டதாக அறிக்கை வெளியிடுகிறார். அப்பொழுது எம்ஜிஆர் "நேற்று இன்று நாளை" படப்பிடிப்பில் இருக்கிறார்.அந்த விபரம் அறிந்து அங்கு ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி எம்ஜிஆருக்கு ஆதரவான கோசங்களை எழுப்பத் தொடங்குகிறார்கள்.  தமிழகம் முழுவதிலும் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.திமுக தொண்டர்கள் இரண்டு கூறுகளாகப் பிரிகின்றனர். இந்த நிலையில் "இதயவீணை" படப்பிடிப்புக்காக காஷ்மீரில் உள்ள ஒரு ஹோட்டலில் எம்ஜிஆர் தங்குகிறார். அப்பொழுது அங்கு வந்த ராணுவத்தினர் தங்களின் நலச் சங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற எம்ஜிஆர் அவர்களுக்கு நிதி அளிக்க விரும்புகிறார். அப்பொழுது அவர் கொடுக்க நினைக்கும் அளவுக்கு  அவ்வளவு பெரிய தொகை கையில் இல்லாததால், அங்கிருந்த தொழில் அதிபர் ஒருவரிடம் கடன் பெற்று நிதி வழங்குகிறார். இதையறிந்த அந்த தொழிலதிபர், நிதி இவ்வளவு பெரிய தொகையா ? என அசந்துபோய் வியப்புடன் கேட்கிறார். அதற்கு எம்ஜிஆர், அவர்கள் நாட்டின் எல்லையில் கண் விழித்து கடமை ஆற்றுவதால் தான் நாம் நிம்மதியாக வாழ்கிறோம். அவர்களின் உழைப்பு, தியாகத்திற்கு முன்னால் இந்தப் பணம் மிகவும் குறைவு தான் என்று பதில் அளிக்கிறார்.

இந்தப் படத்தில்  வரும் ஒரு பாடலின் இடையில் எம்ஜிஆரிடம், ஆமா நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க என்று கதாநாயகி கேட்பார். அதற்கு எம்ஜிஆர், சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா, சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவம் அம்மா என்று பாடல் மூலம் பதிலளிப்பார்.இதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் அவர்களுக்கு "மக்கள் திலகம்" பட்டம் கல்கண்டு இதழ் ஆசிரியர் தமிழ்வாணன் அவர்களால்  சூட்டப்படுகிறது.

  சரித்திரம் தொடரும்....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved