🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! தொடர்-13

எம்ஜிஆரின் தத்துவம், "கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்,கடமை இருந்தால் வீரனாகலாம், பொறுமை இருந்தால் மனிதனாகலாம்,மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்".

 1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 அன்று தமிழக அரசியல் வரலாற்றில் அதுவரை இல்லாத பெரும் எழுச்சியுடன்  20 ஆயிரம் கிளைகள் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கமாக  அதிமுகவை கோலாகலமாகத் தொடங்குகின்றார். எம்ஜிஆர்.அப்பொழுது சில சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட  ஏராளமான பொதுமக்களும் அதிமுகவில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். கழகத்தின் தற்காலிக அமைப்புச் செயலாளராக கே.ஏ.கிருஷ்ணசாமி நியமிக்கப் படுகிறார். இவருக்குச் சொந்தமான "தென்னகம்" ஏடு அதிமுகவின் அதிகாரப் பூர்வ ஏடாக அறிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் மூலை முடுக்குகளில் எல்லாம், "என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன் பிறப்புகளே" என்ற "எம்ஜிஆரின்" குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்குகின்றது.  இதற்கு முன்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூர் அரசு அந்நாட்டின் வளர்ச்சிக்காக எம்ஜிஆர் அவர்களை, கலை நிகழ்ச்சிகள் நடத்திட  வருமாறு அழைப்பு விடுக்கிறது. அதை ஏற்ற எம்ஜிஆர் அவர்கள், ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் அங்கு சென்று இறங்குகிறார். அப்பொழுது எம்ஜிஆர் அவர்களுக்கு சிங்கப்பூர் மேயர் வாகன அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார். இங்கிலாந்து ராணி "எலிசபெத்துக்குப்" பிறகு எம்ஜிஆருக்கு மட்டுமே அப்படி ஒரு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பிறகு கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதில் இந்தி நடிகர் சசிகபூரும் வந்து சேருகிறார். எம்ஜிஆரைக் காணவும், கலை நிகழ்ச்சியைக் கண்டு மகிழவும்  ஏராளமான பொதுமக்கள் கூடுகின்றனர். இந்தச் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்ஜிஆர் அவர்கள், கலை நிகழ்ச்சி மூலம் (செலவு போக) சுமார்  ஒரு லட்சம் டாலர் சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன்.

அன்றைய அந்த வரவேற்பை என்னால் என்றும்  மறக்க முடியாது என்று 1973 ஆம் ஆண்டு ஜனவரி மாத 'பிலிமாலயா' இதழில்  குறிப்பிட்டுள்ளார். பின்னர்  பரபரப்பு நிறைந்த அரசியல் சூழ்நிலையில், 1972 அக்டோபர் 29 அன்று சென்னை சீரணி அரங்கில்  பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில்  எம்ஜிஆர் அவர்களுக்கு, "புரட்சித் தலைவர்"  என்ற  புதியதோர் பட்டத்தை மகுடம் சூட்டுகிறார் கே.ஏ. கிருஷ்ணசாமி. திமுகவிலிருந்து விலகிய ஈ.வி.கே சம்பத் தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கிய பொழுது, அதைத் திமுகவினர் 'குட்டி காங்கிரஸ்' என்றனர்.

இப்பொழுது எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை 'ஒட்டு காங்கிரஸ்' என்கின்றனர் திமுகவினர். இதன்பின்னர் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் பணிகள் தீவிரமாயின. அக்டோபர் 31 ல் செய்தியாளர்களிடம் பேசிய எம்ஜிஆர், திமுக அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியல் ஒன்றை ஆளுநரிடம் அளிக்கப் போவதாகக் கூறுகிறார். அதேபோல் நவம்பர் 4 அன்று எம்ஜிஆரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய  மாநிலச் செயலாளர் கல்யாணசுந்தரமும்  அன்றைய ஆளுநர் "கே. கே.ஷா" அவர்களிடம் திமுக மீது ஊழல் புகார் மனுவைக்  கொடுக்கின்றனர். அவரோ அரசியல் சட்டத்தின்படி ஊழல் புகாரை முதலில் மாநில முதலமைச்சருக்கு அனுப்பி, அவரின் கருத்தையும் அறிந்த பிறகு தான் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியும் என்கிறார். அதன் பிறகு அதிமுகவும், இ. கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து, சென்னையில் நவம்பர் 10  அன்று  மாபெரும் ஊர்வலம் நடத்தின. பின்னர் நவம்பர் 11 ல் நேரடியாக டெல்லி சென்று அன்றைய ஜனாதிபதி 'வி.வி. கிரி' அவர்களிடம் அந்த ஊழல் புகார் பட்டியலைக் கொடுக்கின்றனர். அதையடுத்து அந்தக் கோப்புகள் அனைத்தும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் செல்கிறது. இந்த நிலையில் சுதந்திரா கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் ஹச்.வி.ஹண்டே, தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் சட்டமன்றத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்கிறார். இதையடுத்து நவம்பர் 13 ல் சட்டமன்றம் கூடுகிறது.

பின்னர் சட்டமன்றத்தில் பேசிய எம்ஜிஆர் அவர்கள், இன்றைய அமைச்சரவை தங்கள் கட்சியினரின் நம்பிக்கையையும் , நாட்டு மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது. எனவே இந்த அமைச்சரவை நீடிப்பது சட்டவிதி ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டதா? எனக் கேள்வி எழுப்புகிறார். இதற்குப் பதில் அளித்துப் பேசிய அன்றைய முதல்வர் கருணாநிதி, அமைச்சரவை மீது கொண்டு வரப்பட  இருக்கும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை விவாதிக்கத் தயார் என்கிறார். அப்பொழுது அன்றைய சபாநாயகர் 'கே.ஏ. மதியழகன்', இன்று கிளப்பப்பட்டுள்ள பிரச்சினை அசாதாரணப் பிரச்சினை என்பதால்,இதற்கு ஓர் அசாதாரணமானத் தீர்வு கண்டு தான் சமாளிக்க முடியும். எனவே இதற்கு தீர்வு காண சட்டசபையைக் கலைக்கும்படி கவர்னருக்கு, முதலமைச்சர் அவர்கள் சிபாரிசு செய்யவேண்டும் என்ற யோசனையை 30 ஆண்டு கால நண்பர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கே மக்களைச் சந்திக்க தயாரா? என எம்ஜிஆர் கேட்கிறார், அதற்கு முதலமைச்சர் ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறாரா? எனக் கேட்கிறார். இதைக்கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி கூச்சலில் ஈடுபடுகின்றனர். இதைக்கண்ட இ. கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.டி. கே. தங்கமணி, காங்கிரஸ் உறுப்பினர் பொன்னப்பா நாடார் உள்ளிட்டோர் அவையை ஒத்தி வைப்பது நல்லது எனப் பேசுகின்றனர். இதை ஏற்ற சபாநாயகர் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு சட்டசபையை ஒத்தி வைக்கிறார். இப்படி அரசியல் களம் பரபரப்பாகக் காணப்பட்டது.

பின்னர் திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜாங்கம் மரணம் அடைந்ததால், அதற்கு 1973 ஆம் ஆண்டு மே மாதம் இடைத்தேர்தல் என்ற அறிவிப்பு வெளியாகிறது. உடனே மாநிலத்தில் ஆளும் கட்சியான திமுகவும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இறங்குகிறது. அரசியல் களத்தில் புதிய கட்சியான அதிமுகவும் முதல் முறையாக களம் காணத் தயாராகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் எம்ஜிஆர் பேச்சு வார்த்தை நடத்தியதன் விளைவாக, அந்தக் கட்சி போட்டியிலிருந்து விலகி, அதிமுகவை ஆதரிப்பதாக சங்கரய்யா அறிவிப்பு வெளியிடுகிறார். எம்ஜிஆர், அதிமுகவின் புதிய சின்னமான இரட்டை இலையில் மாயத்தேவர் என்பவரை வேட்பாளராக அறிவிக்கிறார். இ.கம்யூனிஸ்ட் ஏற்கனவே அதிமுகவை ஆதரித்தது. எம்ஜிஆர் அவர்கள் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் தன் பிரச்சாரத்தைத் தொடங்கி, தொகுதி முழுவதும் வலம் வருகிறார்.

இதற்கிடையில் எம்ஜிஆர் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை வெளியிடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அதற்கு  ஏராளமான தடைகள் வந்தபோதும் அதை எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்  மே 11 அன்று திரைப்படம் வெளியாகி   பிரமாண்ட வெற்றியைப் பெறுகிறது.தியேட்டர்களில் எம்ஜிஆரின் ரசிகர்களாக வெற்றியைக் கொண்டாடியவர்கள், தேர்தல் களத்தில் தொண்டர்களாக மாறி, கட்டுக் கடங்கா காட்டாறு வெள்ளமெனத் திரண்டு பணியாற்றியதைக் கண்ட இரு கம்யூனிஸ்ட்களும், அவர்களுடன் இணைந்து தங்களின் பணிகளையும் முடுக்கிவிடுகின்ற னர். "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் வரும் 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்ற பாடல் தேர்தல் பிரச்சாரத்தில் ஒலித்ததைக் கண்டவர்கள், இதை தேர்தல் வெற்றியின் முன்னோட்டம் ஆகவே உணரத் தொடங்கினர். தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆருக்கு மக்களிடம் நல்ல செல்வாக்கு இருந்ததால், எம்ஜிஆர் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் அலை மோதியது எனவும், எம்ஜிஆரின் படம் பார்க்கத் தியேட்டரில் எப்படிக் கூட்டம் முண்டியடித்ததோ அதேபோல், வாக்குப்பதிவான மே 20 ல், எல்லா வாக்குச்சாவடிகளிலும், மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது எனவும் கூறுகின்றனர்.

தேர்தலில் மொத்தம் பதிவான 5,05,253 வாக்குகளில், அதிமுக 2,60,930 வாக்குகள் பெற்று இமாலய வெற்றியைப் பெறுகிறது. இரண்டாவது ஸ்தாபன காங்கிரசின் என். எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகள் பெறுகிறார். திமுகவோ (பொன். முத்துராமலிங்கம்) 93,496 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்குத்  தள்ளப்படுகிறது. இப்படித் தேர்தல் முடிவுகள் வெளியானதும், எம்ஜிஆர் தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கிறார் எனச் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகிறது. திண்டுக்கல் தோல்வி திமுகவிற்கு பெரும் பின்னடைவைத் தந்தது என்று கருணாநிதியே பிற்காலத்தில் சொல்லும் அளவுக்கு அந்த தேர்தல்  அமைந்தது. இந்த இமாலய வெற்றியைக் கண்டு சுதந்திரா கட்சியிலிருந்து வெளியேறிய ஹெச்.வி. ஹண்டே ஜூன் 19 அன்று அதிமுகவில் சேருகிறார். பின்னர் அவரை கட்சியின் முதல் 'தலைமை நிலையச் செயலாளராக' நியமனம் செய்கிறார் எம்ஜிஆர்.அதன் பின்னர் 1980 ல் அண்ணா நகர் தொகுதியில்  699 வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதியிடம் வெற்றி வாய்ப்பை இழந்த ஹண்டேவை, எம்ஜிஆர் மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்து  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பொறுப்பையும் வழங்கி அழகு பார்க்கிறார்.

சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved