🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வேர்களுக்கு மருத்துவம்! விழுதுகளில் தொடரும் பேரன்பு! மகிழ்ச்சியில் மருத்துவர்!

"திருப்பூர் நுரையீரல் மருத்துவமனை",  இது வெறும் மருத்துவமனையின் பெயரல்ல. கொரோனா இரண்டாம் அலையில் மறுஜென்மம் எடுத்தவர்களின் "கருவறை". இந்த மருத்துவமனையின் நிறுவனரும், தலைமை மருத்துவருமாக இருப்பவர் திரு.பொம்முசாமி.  நுரையீரல் மருத்துவத்தில் சிறப்பு பட்டயம் பெற்றவர். இவரது துணைவியார் திருமதி.யோகேஸ்வரி அவர்களும் திருப்பூர் அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.


75-ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் இன்று வரை பேருந்துகள் கக்கிச்செல்லும் கார்பன் வாயுவை சுவாசித்திராத கிராமங்களில் ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள "சுக்கா நாயக்கனூர்" கிராமமும் ஒன்று.  மேற்கிலிருந்து பாய்ந்தோடி ஓடி வரும் பவானி ஆற்றுக்கு வடபுறம், வடக்கிலிருந்து கரைபுரண்டோடி வரும் காவிரி ஆற்றின் மேற்குப்புறம், என இரு வற்றாத நதிகளின் சமதூரத்தில் அமைந்திருக்கும் இயற்கை எழில்கொஞ்சும் கிராமம் "சுக்கா நாயக்கனூர்". அங்கு சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் எளிய ஏழை விவசாயி "கேத்த நாயக்கர்" தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் பொம்முசாமி.

அன்று முதல் இன்று வரை "கோவணம்" பவானி ஆற்றங்கரை விவசாயிகளின் "தேசிய ஆடை"யாக இருப்பதை இப்போதும் பார்க்கலாம். மார்கழி மாத குளிருக்கு போர்த்தும் போர்வை மட்டுமே ஆண்களை ஆரத்தழுவும் முழு ஆடை. இன்னும் சாயம் போகா அப்பழுக்கற்ற விவசாயிகள் வாழும் புனித மண். “கேத்த நாயக்கரும்” அதில் விதிவிலக்கல்ல.


இருமாதம் கழித்தே இந்திராகாந்தி இறந்த செய்தி சுக்காநாயக்கனூர் வந்துசேர்ந்ததென்றால், எம்ஜிஆர் இறந்த செய்தி இன்று வரை பலருக்கு எட்டவில்லையென்றால் தெரிந்து கொள்ளுங்களேன் நிலைமையை. “கரண்ட்” வந்ததெல்லாம் கடையில் பேச கேட்டிருப்பர். தொலைத்தொடர்பு சாதனங்கள் அந்த வழி வருவோர் போவோர் தான்.


ஆரம்பக்கல்வியை பொம்முசாமி முடிக்கும் வரை “கேத்த நாயக்கருக்கு” மகன் சாதாரண 80’ஸ் கிட்ஸ்தான். வகுப்புகள் உயர உயர தன் மகன் பொம்முசாமி குறித்து வரும் செய்திகள் பாமர விவசாயிக்கு “கனவு”களை அறிமுகம் செய்து வைத்தது. நாட்கள் செல்லச்செல்ல “கேத்த நாயக்கர்” கனவுகளுக்கு வண்ணமும் கூடிக்கொண்டே சென்றது.


நெருப்பிலிருந்து தோன்றிய பூமியில் மனிதன் நெருப்பை கண்டுகொண்டது தான் மகத்தான சாதனையாம். அந்த சாதனையின் மறுவடிவம் தான் மண்ணெண்ணை மனம் வீசும் அரிகேன் விளக்கு. அரிக்கேன் விளக்கு பணக்காரர்களின் பவுசு. “கேத்த நாயக்கர்” வீட்டில் அரிக்கேன் விளக்கே அறிமுகமாயிருக்கவில்லை. அவர் வீட்டில் மருந்து பாட்டில்கள் தான் மாற்று ஏற்பாடு. தேடித்திரிந்தாலும் அதற்கு “திரி” கிடைக்காது. கந்தலாகிப்போன “காடாத்துணி”யை, மருந்து பாட்டிலின் மூடியை துளைத்து உள்ளே நுழைத்தால் “விளக்கு திரி” தயார். பாட்டிலை விட “மூடி”யை காப்பது தான் முக்கியம்.


கேத்த நாயக்கரின் பெருங்கனவு! ஆசிரியர்களின் அரவணைப்பு! ஊரார் அளித்த உற்சாகம்! உறவுகள் தந்த ஊக்கம்! மருந்து பாட்டில்! மண்ணெண்ணெய் விளக்கு! பொம்முசாமியை மருத்துவராக்கிய உபகரணங்கள். அரைக்கை சட்டையை அரிதாய் போடும் ஆண்களுக்கு மத்தியில், சுக்காநாயக்கனூர் சுற்றுவட்டாரத்தில் “கோட்-சூட்” அணிந்த முதல் மனிதர்.   


மண்ணைத்தின்று வளர்ந்தவரை மருத்துவராக்கி திருப்பூருக்கு தாரை வார்த்தது சுக்காநாயகனூர். வாரமொருமுறை தாய் மண் வந்து வந்து போனாலும், ஊரார், உறவுகள் நல்லா இருக்கீங்களா தம்பி… என்று மருத்துவரையே பரிசோதிக்கும் மாறாத பேரன்பு கிராமங்களில் எஞ்சியிருக்கும் மாற்றமடையாத மரபணு. இவர்களுக்கு என்ன செய்ய, எதைச்செய்ய என்று கையறு நிலையில் “கான்செப்ட்” கிடைப்பதற்குள் கால்நூற்றாண்டு கடந்தே விட்டது. 


நல்லாயிருக்கீங்களா?.... நல்லாயிருக்கீங்களா?.... பார்த்தவுடன் கேட்கும் பழமை மாறாப்பண்பு “மாற்றங்களே மாறாதது” என்ற தத்துவத்தை விஞ்சி, மண்ணில் எஞ்சி நிற்கும் எச்சம். அப்படித்தான் நல்லாயிருக்கீங்களா எனக்கேட்கும் உறவுகளும், ஊராரும் உண்மையிலேயே “நல்லா இருக்காங்களா?” என்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மருத்துவர் பொம்முசாமிக்கு வந்தது.

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல்”. “நோயற்ற வாழ்வே குறைவற்ற சொல்வம்”. ஆம், மானுடம் நோயின்றி இருப்பதும், இறப்பதுமே உலகில் பெரிய செல்வம். எந்த மண் தன்னை வளர்த்து மருத்துவராக்கியதோ அதே மண்ணில், எந்த இதயங்கள் தன் மீது அன்பைப்பொழிந்ததோ, அவர்களின் இதயங்களில் “ஸ்டெதஸ்கோப்” வைத்தபொழுது தான் கால்நூற்றாண்டு கழித்து  “மருத்துவர்” என்பதை பொம்முசாமி முழுமையாக உணர்ந்து கொண்டார்.


இன்னும் பேருந்துகளுக்கு ஏங்கும் சுக்காநாயக்கனூர் வாசிகளுக்கு “சர்வதேச தரத்தில்” முழுமையான இலவச மருத்துவ பரிசோதனை முகாமினை நடத்தி, “எங்க வீட்டுப்பிள்ளை”, மோர் குடுச்சுட்டுப்போ சாமி, வா சாமி எளநி குடிச்சுட்டுப்போலாம்… காபித்தண்ணி குடி சாமி…. கலரு வாங்கீட்டு வரட்டா சாமி என்று உதடுகள் மட்டும் சொல்லவில்லை, உள்ளமும் சொன்னதை 200-க்கும் மேற்பட்டோர்  நாடி பிடித்து பார்த்து உறுதி செய்துகொண்டார் “பொம்முசாமி”. 


கால்நூற்றாண்டுக்கு முன் பொம்முசாமியை மருத்துவாராக்கிய அந்த மண்ணில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.12.2021) நடத்திய மருத்துவ முகாம் மூலம் “பொம்முதேவர் சாமி” ஆக்கியுள்ளனர் அம்மக்கள். ஆம், அவர்கள் அடைந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் “மருத்துவர்.பொம்முசாமி” யையும் தொற்றிக்கொண்டது. இந்த மருத்துவ முகாமிற்கு முன்னதாக  கடந்த இருமாதங்களுக்கு முன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நடத்திய "மாதந்தோறும் மருத்துவம்" தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகம் முழுவதிலிமிருந்து பங்கெடுத்த உறவுகளுக்கு காணொளி  மருத்துவ ஆலோசனை வழங்கியிருந்தார் மருத்துவர்.பொம்முசாமி.

இதன் தொடர்ச்சியாக கோவை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர் பொம்முசாமி அவர்களிடம் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினர்.  தொடர்ந்து மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் வழங்க உறுதிபூண்டுள்ள பொம்முசாமி அவர்கள், நமது வேண்டுகோளை ஏற்று கோவை, திருப்பூர்,கரூர்,ஈரோடு மாவட்டங்களில் அடுத்தடுத்து மருத்துவ முகாம் நடத்தி நம் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய சம்மதித்துள்ளார். இதற்கான ஒருங்கிணைப்பை சென்னை, வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் செய்து வருகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved