🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! தொடர்-15

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (14 ஆம் வாரத் தொடர்ச்சி)

எம்ஜிஆரின் தத்துவம், 

விழிபோல எண்ணி நம்மொழி காக்கவேண்டும்

தவறான பேர்க்கு நேர்வழி காட்டவேண்டும்

ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் 

தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்...

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம். புதிதாய் மலரும் ஆங்கிலப் புத்தாண்டாம் 2022 ஆம் ஆண்டு தங்கள் அனைவரின் வாழ்விலும் ஈடில்லா இன்பமும், இணையற்ற ஏற்றமும் கொண்ட மணம் நிறைந்த ஆண்டாக அமைய என் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பகைக்கு அஞ்சாது பரங்கியரை எதிர்த்து படை நடத்தி பகை முடித்த, வீரத்தின் விளைநிலமாம், பாஞ்சை மண்ணின் மைந்தனாம், வேலெடுத்து வேரறுத்த வேங்கையாம், அவரே வீரபாண்டிய கட்டபொம்மனாம்.. பாஞ்சையில் அவதரித்து மகுடம் சூடிய அவ்வேந்தனின் 263 ஆம் ஆண்டு பிறந்தநாளான ஜனவரி 3 அன்று (அரசின் கட்டுப்பாடுகளுடன்) மதுரையில் சங்கமிப்போம்... சங்கநாதம் எழுப்புவோம்...

பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் நடித்த "உரிமைக் குரல்" படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் எம்ஜிஆர் நமது விவசாயிகளின் சூழ்நிலைகளை அழகாகப் பிரதிபலித்திருப்பார். இதில் துரைசாமியாக வரும் நம்பியாரிடம், கோபத்துடன்... டேய் துரைசாமி, எனப் பேசத் தொடங்குவார். எம்ஜிஆர் தன் தனி மனித வாழ்க்கையில் மட்டுமல்லாது பொது வாழ்க்கையிலும் சரி, திரைப்படங்களிலும் சரி எவரையும் போடா வாடா என்று பேச மாட்டார். ஆனாலும் இந்தக் காட்சியில் டேய் போட்டு பேசுகிறார் என்றால், தாங்கள் தாயாக நினைக்கும்  விவசாய நிலத்தை அபகரிப்பவனின் மீது கொண்ட கோபத்தின் உண்மை வெளிப்பாடே என்பதை அனைவரும் அறிவர். அப்படி விவசாய மக்களின் மனம் கவர்ந்த அந்த வசனத்தை உங்களிடம் பகிர்வதில் உள்ளபடியே மிகவும் பெருமை கொள்கிறேன். 

இதோ எம்ஜிஆர் பேசிய அந்த வசனம் : எங்கப் பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது. மானம் மரியாதை உள்ள எவனும் உயிரே  போனாலும் கூட, தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான். என் தாய் எனக்குப் பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய் எனக்குச் சோறூட்டி வளர்த்தாங்கடா. இந்தத் தாயை விட்டுக் கொடுக்கிற அளவுக்கு நான் கோழை இல்லைடா. ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யிற பரம்பரையில் வந்தவன்டா நான். டேய் நூறு என்ன? ஆயிரம் என்ன? லட்சம் பேரைக் கூட்டி வந்து படை எடுத்தாலும் இந்த மண்ணுல இருந்து என்னைப் பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தா இந்த மண்ணைத் தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில  தான்டா போகும். ஆனா அந்த நேரத்தில நான் எழுப்புற உரிமைக் குரல் இங்க மட்டுமில்ல, எங்கெங்க உழைக்கிறவன் இருக்கானோ, எந்தெந்த மண்ணில அவன் வியர்வைத் துளி விழுதோ, அங்கெல்லாம் என் உரிமைக் குரல் ஒலிச்சுக்கிட்டே தான்டா இருக்கும் என்று விவசாயிகளின் உள்ளக் குமுறலை அப்படியே வெளிப்படுத்தி  இருப்பார்.

அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் மீது விமர்சனம் செய்த எதிரிகளுக்கு பதில் சொல்வது போலவும், இன்றைய விவசாயிகளுக்கு எதிராக மீத்தேன் திட்டம், ஷேல் கேஸ் திட்டம், கெயில் குழாய் பதிக்கும் திட்டம் ஆகியவற்றால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைக் கண்டு விவசாயிகள் பொங்கி எழும் உண்மை நிலையை உணர்த்துவது போலவும் இருக்கும். இப்படி ஒவ்வொரு முறையும் சமூக கருத்துக்களைச் சொல்வதில் எம்ஜிஆருக்கு நிகரானவர் எவரும் இல்லை  என்பதை நாடு நன்கு அறியும்.

1975 ல் நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டு வாழ்க போன்ற வெற்றிப் படங்களைத் தருகிறார். அதில் "நினைத்ததை முடிப்பவன்" படத்தில் வரும் ஒரு பாடலுக்கு கண்ணதாசன் முதல் வாலி வரை பல கவிஞர்கள் பாடல் எழுதியும் எம்ஜிஆருக்கு திருப்தி ஏற்பட வில்லை. இதைக் கண்ட  கவியரசர் கண்ணதாசன், எம்ஜிஆரிடம் இந்தப் பாடலை யார் எழுதினால் சரியாக வரும் என்பது உங்க மனசுக்கே தெரியும். ஆதலால் பேசாம காசி அண்ணனையே ( கவிஞர் மருதகாசியை ) கூப்பிட்டு எழுத சொல்லிடுங்க என்கிறார்.

அதை ஆமோதித்த எம்ஜிஆரும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை வரவழைத்து நலம் விசாரித்ததுடன் , விருந்து கொடுத்து உபசரிக்கிறார். பின்னர் குடும்பதினர் நலம் விசாரித்த எம்ஜிஆர் பிள்ளைகளின் எதிர் காலத்திற்கு ஏதாவது சேமித்து வைத்துள்ளீர்களா? என உரிமையோடு கேட்கிறார். அதற்கு உங்களைப் போல நல்ல இதயங்களைத் தவிர வேறு எதையும் சேமிக்க முடியவில்லை என்று மனம் திறக்கிறார் மருதகாசி. அதன் பிறகு எம்ஜிஆர் அந்த பாடலுக்கான சூழலை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார். மறுநாள் பாடலுடன் வருகிறார் மருதகாசி. அந்தப் பாடலில் எம்ஜிஆருக்கு திருப்தி இருந்தாலும், சரணத்தில் சிறியதொரு திருத்தம் செய்ய வேண்டும் என்கிறார். 'கண்ணை நம்பாதே' என்று தொடங்கும் அந்த பாடலில் " பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு, தன் வழியே போகிறவர் போகட்டுமே, என் மனதை நானறிவேன் என் உறவை நான் மறவேன், எதுவான போதிலும் ஆகட்டுமே, நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்", என்று பாடல் எழுதிய மருதகாசியிடம்,  அண்ணே வந்தவழி மறந்துவிட்டு தன் வழியே போகிறவர் போகட்டுமே என எழுதி இருக்கீங்க. அதிலே தன் வழியே என்பது தப்பில்லை. அந்த வழி நல்ல வழியாக இருந்தால் அவங்களை நாம ஏன் குத்தம் சொல்லணும். அவங்க யாரையோ நம்பி ஒரு மாயைல போறாங்க என்பதால் அது தப்பான வழின்னு நாம சொல்கிறோம். அதனால் 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்பதற்குப் பதிலாக 'கண் மூடிப் போகிறவர் போகட்டுமே' என்று மாற்றினால் சரியாக இருக்கும் என்கிறார் எம்ஜிஆர். அதை ஏற்று மருதகாசியும்  மாற்றம் செய்கிறார்.

பாடலில் முழு திருப்தி அடைந்த எம்ஜிஆரும்  அவருக்கு சம்பளமாக பெரியதொரு தொகையைக் கொடுக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட மருதகாசியும் மகிழ்ச்சி பொங்க வீடு திரும்புகிறார். வீடு சென்ற அவருக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இதற்கு முன்பே பணக் கஷ்டத்தின் காரணமாக தன் வீட்டை அடமானம் வைத்து இருந்தார் மருதகாசி. இப்பொழுது அதை  அறிந்த எம்ஜிஆர், அடமானத்தில் இருந்த வீட்டை  தன் சொந்த பணத்தில்  மீட்டுப் பத்திரத்தைக் கொடுக்கிறார். மன்னர் ஆட்சியில் கவி எழுதும் புலவனுக்கு வாரிக் கொடுக்கும் மன்னரை படங்களில் பார்த்திருப்போம். ஆனால் மக்கள் ஆட்சியில் மக்களுக்கு மட்டும் அல்லாது  கவி எழுதும் கவிஞருக்கும்  வாரிக் கொடுக்கும் வள்ளல் எம்ஜிஆர் என்பதே உண்மை. 

தமிழ் படங்களிலேயே மிகப் பெரிய வெற்றி படமாக எம்ஜிஆரின் "இதயக்கனி" திகழ்ந்தது. இதன் முன்பதிவில் சென்னையில் வெறும் 3 நாட்களில் மட்டும் வசூல் 90,000 தாண்டியது என்கிறார்கள். அந்த நாட்களில்  டிக்கெட்டின் கட்டணம் அறிந்தவர்களுக்கு இந்த வசூலின் சாதனை நன்கு புரியும். அந்நாட்களில் பல தடைகளைக் கடந்து சத்யம் தியேட்டரில் முதன் முதலாக 100 நாட்களுக்கும் மேலாக ஓடிய படம் "இதயக்கனி". இப்படத்தில் வரும் 'நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற'என்ற வரிகள் மக்களின் மனம் கவர்ந்த பாடலாகும். சென்னையில் நடந்த இப்படத்தின் வெற்றி விழாவில் தெலுங்கு முன்னணி நடிகர் என்.டி. ராமராவ், பாலசந்தர், சௌகார் ஜானகி ஆகியோருடன் கலந்து கொண்ட முக்தா சீனிவாசன் பேசும்போது, மற்ற நடிகர்களின் பல படங்கள் பெரும் வசூலை எம்ஜிஆரின் ஒரே படம் பெற்று விடுகிறது. எம்ஜிஆர் படங்கள் மூலம் அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. இதன் மூலம் எம்ஜிஆர் அரசாங்கத்தின் நண்பராக விளங்குகிறார் எனப் பாராட்டிப் பேசினார். அதுமட்டும் அல்ல இந்த படம் 'ரஷ்யாவின் தாஷ்கண்டில்' நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டது.

அடுத்த படமாக எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த நாளை நமதே என்ற படமும் வெற்றி பெறுகிறது. இந்த படத்தில் எம்ஜிஆர், முதன் முதலாக கண்களில் லென்ஸ் பொருத்திக் கொண்டு நடித்திருப்பார். இதில் வரும் 'நாளை நமதே, இந்த நாளும் நமதே, தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால் நாளை நமதே' என்ற பாடல் எழுச்சி மிகுந்த பாடலாகும். அந்தக் காலகட்டத்தில் எம்ஜிஆரின் படங்களில் மட்டுமே இப்படிப்பட்ட எழுச்சிப் பாடல்கள் இடம் பெற்று இருக்கும். அடுத்து பல்லாண்டு வாழ்க படம் வெளியாகி வெற்றி பெறுகிறது. இந்த படத்தில் ஜெயிலராக வரும் எம்ஜிஆர், குற்றவாளிகளாக இருக்கும் எம்.என். நம்பியார், மனோகர், வி.கே. ராமசாமி, தேங்காய் சீனிவாசன் போன்ற இன்னும் சில பேரை திருத்தி வாழவைப்பார். இதில் 'ஒன்றே குலம் என்று பாடுவோம், ஒருவனே தேவன் என்று போற்றுவோம்' என்ற பாடலில் "இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார், அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார், அந்த வழி காணலாம், சொன்ன வழி போகலாம், நாளை நமக்காக வரலாறு உருவாகலாம் " என்ற பாடல் வரிகள் மூலம், தான் நேசித்த தலைவர் பற்றிய ஆழமான கருத்துக்களை அழகாகப் பாடி இருப்பார்.

       சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved