🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவீரன் கட்டபொம்மனின் இறுதி யுத்த நாட்கள்.... வீரம் செறிந்த வரலாற்று தகவல்கள்!

ஆறடி மனிதன் ஒருவனின் இடுப்பு உயரத்திற்கு இருக்கும் வெறி கொண்ட கொடூர வேட்டை நாய்களை அழைத்துக் கொண்டு சிலர் அந்தக் காட்டில் முயல்களை வேட்டையாட சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தக் காட்டில் உலவிய முயல்களைப் பார்த்ததும்,அந்த வேட்டை நாய்கள் நாலு கால் பாய்ச்சலில் விரட்டத் துவங்கின.கொலைவெறி சீற்றங்கொண்ட அந்நாய்களிடம் சிக்காமல் பல பர்லாங்குகள் தூரத்திற்கு அம்முயல்களும் சளைக்காமல் ஓடின. அது வழக்கமான வேட்டை தான் என்றாலும், அன்றைக்கு நாய்களின் பாதை வேறாக இருந்தது. முயல்களை விடாமல் விரட்டிக் கொண்டு நாய்களும்-நாய்களை விரட்டிக் கொண்டு அம்மனிதர்களும் ஓடினர்.

புழுதிபறக்க ஓடிய முயல்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குள் வந்ததும் அப்படியே நின்றன.

தம்மை விரட்டி வந்த வேட்டை நாய்களை ஏறெடுத்து நிதானமாக கண்ணுக் கண்ணாகப் பார்த்தன.

அடுத்த நொடி...

அந்த முயல்கள்-கண்ணில் கொலை வெறி கொண்ட அந்த வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கின.

நாய்கள் பின்னங்கால்கள் பிடறியில் பட அந்த மண்ணை விட்டு ஓடத் தொடங்கின.

"பாஞ்சாலங்குறிச்சி".

அந்த மண் தான், முயல்கள் - கொடூர வேட்டைநாய்களை எதிர்த்து நின்ற அந்த மண் தான் பாஞ்சாலங்குறிச்சி.

அந்த பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் மன்னனும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் உச்சிகால பூசை முடித்து, அந்த ஆலயத்தின் வெங்கல மணி அடித்த பின்னர் - அம்மணியின ஓசையைக் கேட்ட பின்னர்,தன் உணவில் கை வைத்தவனும்,

தெற்குச் சீமையில் எங்கள் மாமன்னர் மாவீரன் பூலித்தேவருக்கு பின்னர் - பரங்கியரை எதிர்த்து நின்றவருமான,

வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வாழ்க்கையைப் பற்றிய முழு வரலாற்றுப் பதிவு இது....

ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு 3.1.1760-ல் பிறந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில்,கட்டபொம்மனின் மூதாதையர்-வேட்டையாடச் சென்ற வேளையில் வெறி கொண்ட வேட்டை நாய்களை எதிர்த்து முயல்கள் நின்ற அம்மண்ணில்,வீரம் ஊட்டும் சக்தி இருப்பதை அறிந்து வியந்து,தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அமைத்து ஆண்டு வந்தனர்.இந்த அரச மரபில் 47வது வேந்தராக வந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை,துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும்,ஈசுவரவடிவு,துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.

2.2.1790 இல் பாஞ்சாலங்குறிச்சியில் அரசுக் கட்டில் ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனது துணைவியார் பெயர் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.

ஆட்சிக் கட்டிலில் 9 ஆண்டுகள் 8 மாதங்கள் 14 நாட்கள் பொறுப்பிலிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனிடம், கிழக்கிந்தியக் கும்பெனியார் கி.பி 1793ல் கப்பம், கிஸ்தி, திரை கேட்டனர். தர மறுத்த கட்டபொம்மன் மீது கி.பி. 1797ல் முதன் முதலாக ஆலன்துரை என்பவர் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு படையெடுத்து வந்தார். 1797-1798ல் முதல் முறையாகத் தொடுக்கப்பட்ட அந்தப் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் படைகள் முன்னர் நிற்க முடியாமல் ஆலன்துரை தோற்று ஓடினார்.

அந்தப் போரில் தோற்றது பிரிட்டீஷ் படைகளுக்குப் பேரதிர்ச்சியாக இருந்து. எனவே அன்றைய நெல்லை மாவட்டக் கலெக்டராக இருந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார். ஆனாலும் அந்தச் சந்திப்பு முறையாக நடக்கவில்லலை. பல இடங்களுக்கு அலைக் கழித்தார். இறுதியில் 10.9.1798-ல் இராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி விலாசத்தில், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் - கட்டபொம்மனுக்கும் இடையே அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சந்திப்பு நடந்தது. அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார் அந்த கலெக்டர். ஆனால் வீரபாண்டியக் கட்டபொம்மன் போரிட்டு வெற்றி வீரராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தடைந்தார். இராமநாதபுர விலாசத்தில் கட்டபொம்மனிடம் தோற்ற அந்த நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் தான் ஜாக்சன் துரை. 

கட்டபொம்மனை சமாளிக்க பெரும் படையுடன்,மேஜர் ஜான் பானர்மென் என்ற தளபதி தனது ஆங்கிலக் கும்பினிப் பட்டாளத்துடன் 1799 செப்டம்பர் 4-ல் பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி நோக்கி சீவலப்பேரி மார்க்கமாக விரைந்து சென்றார். 

காப்டன் ஓரீலி(OReilly), ப்ரூஸ்(Bruce), காலின்ஸ்(Collins), டக்ளஸ்(Douglas), டார்மீக்ஸ்(Durmieux), ப்ளேக்(Blake), ப்ரௌன்(Brown) போன்ற ஆங்கிலேய அதிகாரிகளும் பாஞ்சாலங்குறிச்சியைச் சுற்றி தங்களது படைவீரர்களுடன் போருக்கு ஆயத்தமாக நின்றனர்.

வெள்ளையர் படை 5.9.1799 அன்று அதிகாலையில் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தது. கோவில்பட்டியிலிருந்தும், கயத்தாற்றிலிருந்தும் இராணுவ வீரர்கள் வந்து வெள்ளையர் படையோடு சேர்ந்து கொண்டனர்.லெப்டினென்ட் டல்லாஸ் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தனது குதிரைப் படையுடன் சுற்றி வளைத்துக் கொண்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் படையில் சேனாதிபதி வீரன் வெள்ளையத் தேவன், தளபதி வீரன் சுந்தரலிங்கம், வீரன் சிவத்தையா நாயக்கர்,தானாபதிப் பிள்ளையின் தம்பி வீரபத்திர பிள்ளை, சம்பிரதி பொன்னப்பபிள்ளை, தன்னலங் கருதாத ஊமைத்துரை,மற்றும் பலரும் இருந்தனர்.

போர் துவங்குவதற்கு முன்னர் மேஜர் ஜான் பானர்மென் தம்முடைய துபாஷியான ராமலிங்க முதலியாரை ஹவில்தார் இப்ராஹிம் கான், அரிக்கரன்சாமி ஆகியவர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் அனுப்பி வைத்தார். அவர்கள் கட்டபொம்மனைச் சந்தித்தனர். பின்னர் கட்டபொம்மன் பானர்மென்னைச் சந்திக்கும்படி சொல்லி அனுப்பிய செய்தியையும் கட்டபொம்மனிடம் தெரிவித்தனர். தனக்கு எழுத்து மூலமாக ஏதேனும் ஓர் உத்திரவு வந்தாலன்றி, மேஜர் பானர்மென்னைப் பார்க்க முடியாது என்று கட்டபொம்மனும் அதற்கு பதில் சொல்லி அனுப்பினார். சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை.வெள்ளையருக்கு அடங்கி ஒடுங்கிப் போகவும் திறை செலுத்திடவும் அஞ்சா நெஞ்சங் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தயாராகவும் இல்லை. எனவே காலத்தால் அழியாத,வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கின்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர் துவங்கிற்று.

பாஞ்சாலங்குறிச்சியின் தெற்குக் கோட்டை வாசலும்,வடக்குக் கோட்டை வாசலும் வெள்ளையரின் படையினரால் தாக்கப்பட்டது. போரில் வெள்ளையர் பக்கம் சேதம் அதிகமாக இருந்தது. நான்கு ஐரோப்பிய அதிகாரிகள் போரில் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் காயம் பட்டனர். போர் வேகமாக நடைபெற்றது. வெள்ளையரின் பேய்வாய்ப் பீரங்கிகள் கோட்டைச் சுவர்களைத் துளைத்து உடைத்தெரியத் தலைப்பட்டன. கோட்டை விழுந்து விடுமோ என்ற நிலை ஏற்படலாயிற்று. தீவிர ஆலோசனை செய்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்துவிட்டு விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்றுவிட்டு, ஒரு தண்டிகை,ஏழு குதிரைகள்,ஐம்பது வீரர்கள்,தம்பியர்,தானாபதிகளோடு இரவு பதினொரு நாழிகையில் சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (7.9.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை வழியே விரைந்து சென்றார். பொழுது விடிவதற்குள் வீரபாண்டிய கட்டபொம்மன் நாகலாபுரத்தை அடைந்தார். அங்கு இரவப்ப நாயக்கர் அவரை அன்போடு உபசரித்தார். அங்கிருந்து விடைபெற்று கோசுகுண்டு வழியாக கோலார்பட்டியை வந்தடைந்தார். அங்கு இராஜகோபால நாயக்கர் அவரை எதிர் கொண்டழைத்து அன்போடு உபசரித்தார்.

சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 24 ஆம் நாள் 9.9.1799 காலை பத்து நாழிகையில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை மேஜர் பானர்மென் கைப்பற்றிக் கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறிச் சென்றிருக்கும் திசையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்ட மேஜர் பானர்மென் பல பாளையக்காரர்களுக்கும் கடிதங்கள் அனுப்பி வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொருவருடைய குணத்திற்கும் கட்டபொம்மன் மீது கொண்டிருக்கும் அவர்களுடைய அபிப்பிராயத்திற்கும் ஏற்றவாறு வெவ்வேறு விதமாக அந்தப் பாளையக்காரர்களுக்கு பானர்மென் கடிதம் எழுதியதாக அவரே அரசுக்கு 11.9.1799 இல் நாகலாபுரத்திலிருந்து எழுதிய கடிதத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.(வெள்ளையரின் வஞ்சக எண்ணமும், நம்மவர்களை அவர்கள் எப்படி யெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் கடிதம் சான்று பகர்கிறது).

லெப்டினென்ட் டல்லாஸ் தலைமையில் இரண்டு குதிரைப் படைகளையும், காப்டன் ஓரெய்லி தலைமையில் 400 குண்டு வீச்சாளர்களையும் இடது பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு முக்கிய படைகளுடன் மேற்கு பக்கமாக மேஜர் பானர்மென் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சிறிது தூரம் சென்றதும் எட்டயபுரம் பாளையக்காரர் தனது படைவீரர்களுடன் கட்டபொம்மனைப் பிடிப்பதற்குச் செல்வதாகவும், தனக்கு உதவியாக மேலும் சிப்பாய்களை அனுப்பும்படியும் தகவல் தந்தார். அதன்படி காப்டன் ஓரெய்லியும் லெப்டினென்ட் டல்லாஸ“ம் எட்டயபுரம் படையினருக்கு துணையாகச் சென்றனர்.

கோட்டையை விட்டு வெளியேறிச் சென்ற வீரபாண்டிய கட்டபொம்மனை கோலார்பட்டி கோட்டைப் பகுதியில் எட்டயபுரத்தாரின் படைகள் 10.9.1799 இல் எதிர்கொண்டன. அங்கு போர் நடைபெற்றது. இரு தரப்பிலும் பெரிய சேதமேற்பட்டது. கட்டபொம்மனது படையினர் வீரப் போரிட்டனர். வெள்ளையர் தரப்பில் 37 பேர்களும், கட்டபொம்மன் தரப்பில் 16 பேர்களும் போரில் மாண்டனர். ஆறு பேர்களுடன் குதிரைகளில் ஏறி வீரபாண்டிய கட்டபொம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றார். தானாபதி சிவசுப்பிரமணிய பிள்ளை,அவரது தம்பி வீரபத்திரபிள்ளை,ஆதனூர் வெள்ளைச்சாமி நாயக்கர், அல்லிக்குளம் சுப்பா நாயக்கர்,முள்ளுப்பட்டி முத்தையா நாயக்கர்,கொல்லம்பரும்புக் குமாரசாமி நாயக்கர் முதலிய 34 பேர்களை வெள்ளைக் கும்பினியர் கைது செய்தனர்.

கோலார்பட்டி போரின் போது தானாபதி சுப்பிரமணியபிள்ளை கைது செய்யப்பட்டதற்காக எட்டயபுரத்துப் படையினருக்கு வெள்ளையர் தகுந்த சன்மானங்களை அளித்தனர். நாகலாபுரம் கிராமத்தின் முக்கியப் பகுதியில் சுப்பிரமணிய பிள்ளையை தூக்கிலே தொங்கவிட்டு, அவருடைய தலையை வெட்டி எடுத்துச் சென்று ஈட்டியில் வைத்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிருந்த பகுதியில் காட்சிப் பொருளாக வைத்தனர்.

நாகலாபுரம் பாளையக்காரரின் தம்பியாகிய சௌந்திரபாண்டிய நாயக்கர் 12.9.1799 இல் கைது செய்யப்பட்டார். பின்னர் சர்ஜன் எனும் தளகர்த்தரின் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் இராமநாதபுரம் எல்லையிலுள்ள கோபாலபுரம் கிராமத்திற்கு கொண்டு சென்று 13.9.1799 காலையில் அங்கு அவரும் தூக்கிலே தொங்க விடப்பட்டார்.

நாகலாபுரம் ஜமீன் மானேஜர் சாத்தூரப் பிள்ளை,கோலார்பட்டி ஜமீன்தாரின் மைத்துனரும் மானேஜருமான சவுந்தரலிங்க நாயக்கர், குளத்தூர் தானாபதி ஆறுமுகம் பிள்ளை, காடல் குடித்தானாபதி கோமதிநாயகம் பிள்ளை, ஏழாயிரம் பண்ணைத் தானாபதி தருமப் பெருமாள் பிள்ளை ஆகிய ஐவரையும் ஆயுள்காலம் வரை அயலிடம் செல்ல ஆணை பிறப்பிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். நாகலாபுரம் பாளையக்காரர் இரவப்ப நாயக்கரையும், ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர் காளை வன்னியனாரையும்,குளத்தூர் பாளையக்காரரின் மகன் சின்ன வெட்டூர் நாயக்கரையும் சென்னைப் பட்டிணம் கொண்டு போய் அங்கு அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, குளத்தூர் இவை அனைத்தும் கும்பெனியாரின் ஆதிக்கத்தின் கீழ் அப்போது வந்தன.

அழகும், வேகமும்,அறிவும் கொண்ட வெள்ளை நிறங் கொண்ட தனது பட்டக் குதிரை முத்துராமில் இருந்து கொண்டு வடதிசை நோக்கி விரைந்து கொண்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கில தளகர்த்தர்கள் டல்லாசும், போயனும் விரட்டிக்கொண்டு வந்தனர். கடிய வேகமுடைய 200 குதிரையாளர்கள், கொடிய வெடி வேல்களை உடைய 1100 படைவீரர்களும் பின் தொடர்ந்தனர். ஆனால் காற்றினும் வேகமாக கட்டபொம்மனின் குதிரை பறந்து சென்றது. கடுவேகமாக நெடுந்தூரம் தாவிப் போக நேர்ந்ததால் பட்டக் குதிரை முத்துராம் தனது ஆவியை இழந்தது. தனது பட்டக் குதிரை இறந்ததைக் கண்ட, கட்டபொம்மன் கண்­ணீர் சிந்தினார். வேகம் குறைந்து விடும் நிலையில் இருந்த மீதி இரண்டு குதிரைகளையும் வழியே விட்டு விட்டு கால் நடையாய் கட்டபொம்மனும் உடன் வந்தவர்களும் நடக்கத் துவங்கினார்கள்.

கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்த கட்டபொம்மன் சிவகங்கை நாட்டின் வடமேற்கு எல்லையில் மறவர் மரபில் கள்ளர் என்னும் பிரிவினர் தங்கி வாழும் ஆனியூர் என்ற கிராமத்தை வந்தடைந்தார். இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்த கட்டபொம்மனையும் மற்றும் அவருடனிருந்த ஊமத்துரை, மைத்துனர்கள் முத்தையா நாயக்கர், குமாரசாமி நாயக்கர், முத்துக்குமாரசாமி நாயக்கர் அந்தரங்க ஊழியர் வீரண்ண மணியக்காரன், அண்ணன் ஆகிய ஆறுபேர்களையும் பாதுகாப்புக் கருதி மலைச் சாரலுக்கு அழைத்துச் சென்று மறைவாக இருக்க வைத்த பெருமைக்குரியவர்கள் ஆனியூர் காளிமுத்துவும், பெரிய நம்பியும் ஆகும். ஏழு நாட்கள் ஆனியூரில் கட்டபொம்மன் தங்கியிருந்த வேளையில், ஏழாம் நாள் இரவு காடல்குடி, ஜமின்தார் வீர கஞ்சய நாயக்கர் நேராக வந்து கட்டபொம்மனைச் சந்தித்தார். தானாபதி பிள்ளை தூக்கிலிடப் பட்டதையும், பாளையங்கள் வீழ்ந்த விவரங்களையும் தெரிவித்தார். அங்கிருந்து திருச்சிக்கு, புதுக்கோட்டை வழியாகச் செல்லத் திட்டமிட்டார் கட்டபொம்மன்,சோளபுரம் என்னும் ஊரை அடைந்தார். அங்குள்ள மடத்தில் தங்கியிருந்தார் கட்டபொம்மன். பின் அங்கிருந்து புதுக்கோட்டைச் சீமையில் திருக்களம்பூர் என்னுமிடத்திற்கு மேற்கில் கலியாப்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள காட்டினை அடைந்தார். 8.9.1799 இல் ராமநாதபுரத்திலிருந்து கலெக்டர் லூஷிங்டன்,புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமானுக்கு-கட்டபொம்மனைப் பிடிக்க உதவுமாறு கடிதம் எழுதினார். விஜய ரகுநாதத் தொண்டைமானும் அதற்கு இசைந்தான்.

பரங்கியர் மற்றும் விஜயரகுராதனின் கூட்டுப் படைகளின் முயற்சியால்,கலியாப்பூர் காட்டிலே கைது செய்யப்பட்டபோது தன்னைத் தானே கொன்று உயிரை மாய்த்துக் கொள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் முன் வந்தார். இந்த சம்பவத்தை தொண்டைமான் பிரிட்டீஷாருக்கு எழுதிய கடிதத்தில் அவரே குறிப்பிட்டுள்ளார்.

"எனது படையினர் கட்டபொம்மனது கரங்களைக் கட்டி கைது செய்து கொண்டு வந்து விட்டார்கள். கட்டபொம்மனைப் பற்றி உங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவரைப் பாதுகாப்பாக ஒரு நாள் வைத்துக் கொள்வது கூட மிகவும் கடினமான காரியமாகும்" என்று அந்தக் கடிதத்தில் தொண்டைமான் குறிப்பிட்டதிலிருந்து கட்டபொம்மனின் பேராற்றலை நாம் நன்கு உணர முடிகிறது.

கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் ஐந்து பட்டாக் கத்திகள், நான்கு பிச்சுவாக்கள், ஒரு கத்தி, ஒரு பாக்குவெட்டி ஆகியவையும் இருந்தன. கட்டபொம்மன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் மேஜர் பானர்மென் உடனே கட்டபொம்மனையும் அவரைச் சேர்ந்தவர்களையும் தகுந்த பாதுகாப்புடன் மதுரையிலிருக்கும் கமாண்டிங் ஆபிசரிடம் ஒப்படைக்க கோரி 29.9.1799 இல் கயத்தாற்றிலிருந்து,ஜோசய்யாவெப் என்ற அரசுச் செயலாளருக்கு அவசரக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலேயே,"கும்பெனி அரசுக்கு எதிராக கலகம் விளைவிக்கும் பாளையக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்திட எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மேற்கொள்ள கட்டபொம்மனை மதுரையிலிருந்து கயத்தாற்றிற்கு கொண்டுவர எனது ராணுவத்தினரின் ஒரு பிரிவை அங்கு அனுப்பி வைக்கிறேன். உங்களின் முந்தையப் பிரகடனப்படி கட்டபொம்மனை அரசுக்கு எதிராகக் கலகம் விளைவித்தவர் என்று சூழ்நிலைகளினால் குறிப்பாக சுட்டிக்காட்டப்படுவதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை எனது கடமையாகவே கருதுகிறேன்" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் கட்டபொம்மனை தூக்கிலே போடுவது என்று ஏற்கனவே பானர்மென் முடிவு செய்துவிட்டது புலனாகிறது.

வெள்ளைக் கும்பெனிப் படையினரால் மதுரையிலிருந்து 5.10.1799 இல் வீர பாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றிற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு திருநெல்வேலி பாளையக்காரர்கள் எல்லோரையும் வரவழைத்து ஒரு கூட்டத்தைக் கூட்டத் தயாரானார் மேஜர் பானர்மென்.

16.10.1799 இல் மந்தமான பனி படர்ந்து கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில் தென்பகுதியைச் சேர்ந்த பாளையக்காரர்கள், குறிப்பாக திருநெல்வேலி சீமையைச் சேர்ந்தவர்களும் நூற்றுக் கணக்கில் கூடியிருந்தனர். அவர்களுக்கு கௌரவமான இருக்கைகள் அளிக்கப்பட்டு, மற்றைய பாளையக்காரர்கள் அங்கு வரிசை வரிசையாக உட்கார்ந்திருந்தனர்.

சூரியன் உதயமாகி நாழிகை ஏழானது.சிறையிலிருந்த கட்டபொம்மனை படையினர் மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். (வீரபாண்டிய கட்டபொம்மனை சிறை வைத்திருந்த அந்தக் கட்டிடம் இன்றும் கயத்தாற்றில் உள்ளது). மேஜர் பானர்மென் அங்கு விசாரணையைத் துவங்க ஆரம்பித்தார். ராபர்ட் ட்யூரிங் (Robert Turing), ஜார்ஸ் ஹ“யஸ் (George Hughes), பிர்கட்டு (Pirkett), பிரௌன் (Brown) முதலிய தளகர்த்தனர் பானர் மென்னுடைய இருபக்கமும் அமர்ந்திருந்தனர். குதிரைப்படைகளும், காலாட்படையினரும் டர்னர் (Turner) டல்லாசு தலைமையில் அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர். 16.10.1799 காலை 10 மணிக்கு கயத்தாற்றில் விசாரணை துவங்கியது.

விசாரணை முடிந்து கீழ்க்கண்ட குற்றச்சாட்டுக்கள் கட்டபொம்மன் மீது விதிக்கப்பட்டன.

1. கும்பெனிக்குரிய கிஸ்தியை செலுத்தவில்லை.

 2. கலெக்டர் லூஷிங்டன் விடுத்த உத்திரவுகளுக்கு சரியான பதில் தரவில்லை. தம்மை வந்து கண்டுபோகும்படி பலமுறை அவர் விரும்பி அழைத்தும் அந்த உத்திரவினை கட்டபொம்மன் உதாசினப்படுத்தினார்.

 3. கும்பெனியாரின் பொறுப்பிலுள்ள திருவைகுண்ட தானியக் கிடங்கை கொள்ளையடித்த தானாபதி பிள்ளையை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கட்டபொம்மன் ஒப்படைக்க மறுத்தார்

4. தனது இராணுவ நடவடிக்கைகளினால் தென் பிராந்திய பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த கும்பெனியின் படை அதிகாரிகள் பலருடைய கொலைக்கு கட்டபொம்மன் காரணமாக இருந்தார்.

கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும்படி கட்டபொம்மனிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு கட்டபொம்மன்,

1. நான் இது வரையில் யாருக்கும் கிஸ்தி செலுத்தியதில்லை. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் எவருக்கும், அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், எப்பொழுதும் அவருக்கு கிஸ்தி செலுத்த வேண்டும் என்று நினைக்கவே இயலாது. ஆகவே நான் கிஸ்தி செலுத்த மறத்தேன். என்னுடைய நண்பர்களானாலும், பகைவர்களானாலும் யாரும் என்னை அவமரியாதை குற்றஞ் சுமத்திட முடியாது. கும்பெனி சர்க்காரின் அதிகாரிகள் தங்களுடைய கடமைகளின் நிமித்தம் என்னை வந்து பார்த்து, என்னோடு உரையாடி இருக்கிற பொழுதெல்லாம், அவர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அழைத்துக் கேட்டால் இதனை அவர்களே உறுதிப்படுத்துவார்கள்.

திருநெல்வேலிக்கு வந்து கலெக்டர் அலுவலகத்திலே கலெக்டரைப் பார்ப்பதற்கு காத்திருக்க வேண்டும் என்ற உத்திரவினால் நான் மிகுந்த சினங் கொண்டேன். நான் கலெக்டரின் சொந்தப் பணியாளர் அல்ல.

2. திருவைகுண்டத்தில் என்னுடைய அமைச்சர் தானாபதி பிள்ளை செய்தது தவறுதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். கும்பெனியாரின் தானியக் கிடங்கை கொள்ளையடித்தது சரியான காரியமல்ல. ஆனால் அந்த வேளையில் மிகுந்த வறட்சி நிலவியது. மழையும் பொய்த்துப் போயிற்று. யாருக்கும் ஒருவிதமான தானியங்களும் கிடைக்கவில்லை. ஆதலால் தானியக் கிடங்கைப் பலவந்தமாகத் திறந்து மக்களை அங்கிருக்கும் தானியங்களை எடுத்துச் செல்ல அவர் அனுமதித்திருப்பார் என்று நம்புகிறேன். என்னுடைய அனுமதி இல்லாமல் இந்தக் காரியத்தை செய்ததற்காக அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். கம்பெனியாரால் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்று என்னுடைய பாதுகாப்பையும் நாடினார். நான் அவருக்குப் பாதுகாப்பு நல்கினேன். தன்னிடம் அடைக்கலம் புகுந்த ஒரு மனிதனை காட்டிக் கொடுப்பது கட்டபொம்மு நாயக்கரால் ஆகக்கூடிய காரியமல்ல. அதற்குப் பின்னும் கொள்ளையடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட எழுநூறு கோட்டை தானியங்களுக்குரிய 3300 ரூபாயுடன் அபராதம் எழுநூறும் சேர்த்து நாலாயிரம் ரூபாயினைக் கொடுப்பதற்கு நான் முன் வந்தேன். ஆனால் கும்பெனியார்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 

3. தங்களுடைய விவசாயிகள் மற்றும் குடிமக்களால் ஏற்படும் கலவரங்களை ஒடுக்க எனது உதவியை என்னுடைய சகோதரப் பாளையக்காரரான சிவகிரிப் பாளையக்காரர் உட்பட பலர் நாடியிருக்கிறார்கள். அவர்கள் அழைத்ததின் பேரில் அவர்களுக்கு உதவிட நான் சென்றிருக்கிறேன். கும்பெனி சர்க்கார் அவர்களுக்கு ஒருபோதும் உதவியதும் இல்லை. அவர்களைப் பற்றி கவலைப் பட்டதும் இல்லை. 

4. எனதருமை பாஞ்சாலங்குறிச்சியை முதன் முதலாக தாக்க வந்தது கும்பெனியாரின் தளகர்த்தர்களாகிய நீங்களே. என் போன்ற பண்பும், சுயமரியாதையுமுள்ள ஒரு மனிதன் என்ன செய்வான் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சரண் அடைந்து விடுவானா? அல்லது உங்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வானா?.... பின்னதாக எனது அருமைக் கோட்டை உங்களால் முற்றுகை இடப்பட்டு உங்களது பீரங்கிகள் எனது கோட்டைச் சுவர்களுக்கு நேராக குறிபார்த்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில், இத்தகைய சூழ்நிலைகளை திருச்சிராப்பள்ளியில் இருக்கும் கும்பெனியாரின் உயர் அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து விரிவாக விளக்க வேண்டுமென்பதற்காக எனது விசுவாசமுள்ள உதவியாளர்களுடன் ரகசியப்பாதை வழியாக தப்பிச் சென்றேன். ஆனால் நான் எனது மக்களை நிர்கதியாக கைவிட்டு விட்டு ஓடிவிட்டதாக கேவலமான வதந்தியைப் பரப்பினீர்கள். என்னை உயிருடன் பிடிப்பதற்காக என் தலைக்கு ஒரு விலையை நிர்ணயித்தீர்கள் நான் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடிபடுவதற்கு உதவிட புதுக்கோட்டை தொண்டைமான், எட்டயபுரம் பாளையக்காரர்கள் மற்றவர்களுக்கு அந்த ஆசை காட்டுதல் போதுமானதாக இருந்தது.

இதற்கிடையில் பாஞ்சாலங்குறிச்சியில் கிடைத்தது அத்தனையும் கொள்ளையிட்டீர்கள். கொள்ளையிட்ட அந்தக் கும்பலுக்கு நீங்களே தலைமை தாங்கிச் சென்றீர்கள். அப்படிப்பட்ட நீங்களே இன்று என்மீது குற்றஞ் சுமத்துபவராகவும் ஆகி இருக்கிறீர்கள். (இரு தரப்பினர் போரிட்டபோது, ஒரு தரப்பிற்கு தலைமை தாங்கிய ஒருவரே (பானர்மென்) மற்றொரு தரப்பை (கட்டபொம்மனை) விசாரிக்கும் நீதிபதியாக இருந்த விந்தைச் செயல், யுத்த கால வரலாற்றில் நடைபெற்றிராத ஒரு சம்பவமாகும்) என்னை வாதாடச் சொல்கிறீர்கள்? இதில் வாதாட என்ன இருக்கிறது? இது தான் தலைவிதி; நான் இதனை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் இஷ்டப்படுவது போல் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என்றார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

விசாரணைக்குத் தலைமை தாங்கிய மேஜர் பானர்மென் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்து,

மேலும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று திரும்பவும் கேட்டபோது,கட்டபொம்மன் மௌனம் சாதித்தார் கட்டபொம்மன்.

விசாரணை நடத்திய அந்தக்குழு சிறிது களைப்போடு, அவர்களுடைய குறிப்புக்களைத் திருப்பிப் பார்த்துக் கொண்டது, அவர்களுக்குள் சிறிது ஆலோசனையும் செய்தது. அப்போது மதிய நேரமாயிற்று, மாலையின் நிழல்கள் சென்னைக்குச் செல்லும் அந்த நெடுஞ்சாலையின் மீது படியத் துவங்கியது. காவலுக்கு நின்ற வீரர்களின் குதிரைகள் திமிர ஆரம்பித்தன; சலசலத்தன. கரிய மேகங்கள் வானத்தில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. கட்டபொம்மனின் பதிலுக்குப் பின்னர் தலை நரைத்து ஓய்ந்து போன உருவமாக மேஜர் பானர்மென் நிசப்த நிலையில் தோற்றமளித்தார். பின் ஏற்கனவே திட்டமிட்டபடி கட்டபொம்மனுக்கு தூக்கின் மூலம் மரண தண்டனை விதித்திட வேண்டுமென்ற தீர்ப்பினை எழுதி, அத்துடன் இந்தத் தண்டனை இன்றைய தினத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உடனிருந்த மற்ற வெள்ளை அதிகாரிகள் அங்கிருந்து எழுந்து சென்றார்கள். உடனடியாக கும்பெனிப் படையினரும், கும்பெனியின் விசுவாச ஊழியர்களும் கட்டபொம்மனை பொறுப்பேற்றுக் கொண்டார்கள். திட்டமிட்டபடி தூக்குத் தண்டனையை நிறைவேற்றிடத் தயாரானர்கள்.

ஏற்கனவே தூக்குமரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கட்டை புளிய மரத்தடிக்கு கட்டபொம்மனை அழைத்துச் சென்றார்கள். ஒரு படை வீரன் மரத்தின் மீது ஏறினான். ஒரு கிளையிலிருந்து ஒரு கயிற்றைக் கட்டி அந்த முடிச்சை கீழே தொங்க விட்டான். மற்றொரு வீரன் ஒரு சிறிய ஏணிப்படியை அந்த தொங்கும் கயிற்றுக்கு அருகில் தள்ளி வைத்தான். தற்காலிகமாகச் செய்யப்பட்ட அந்த ஏணியின் ஐந்து படிகளில் கட்டபொம்மன் ஏறிச் சென்றார். நினைவுகளில் தன்னை மறந்தவராக, தொண்டையை கனைத்துக் கொண்டு தன்னைச் சுற்றிலுமிருந்த கூட்டத்தை கடைசியாகப் பார்வையிட்டார் கட்டபொம்மன். அதன் பின் அந்த தூக்கு முடிச்சைக் கையிலெடுத்து தனது கழுத்தை அதற்குள் தானே செலுத்திக் கொண்டார். வெள்ளைக்காரர்களுடன் சுதேசி வீரர்களும் கட்டபொம்மனைச் சுற்றி பேச்சற்ற நிசப்தமாக நின்று கொண்டிருந்தனர்.

கட்டபொம்மன் இறுதியாக மிகுந்த சப்தமிட்டு,

"ஓ! முருகக் கடவுளே" என்று திருச்செந்தூரின் முருகனை நோக்கிக் கூறிவிட்டு, தன் கீழுள்ள படியைத் தானே உதைத்துத் தள்ளினார். கழுத்து நெறிக்கப்பட்டு, கயிறு கழுத்தைச் சுற்றி இறுகியது. இரண்டு மணி நேரம் தொங்கிய உடல் மேலும் இரண்டு மணி நேரம் எல்லோரும் பார்க்கும் வண்ணம், கட்டபொம்மனது உடல் அந்த மரத்தில் தொங்கியது. முந்தைய இரவில் கட்டபொம்மனுடன் சிறையிலிருந்த தம்பி ஊமத்துரையும், அவரது சொந்தப் பணியாளரும் கட்டபொம்மனின் இறுதிக்கிரியைகள் செய்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள். அருகிலிருந்த இடிந்து போன ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் காய்ந்து போன மரக்கிளையில் ஒரு பெரிய நெருப்பு உண்டாக்கப்பட்டது.

39 வயது நிரம்பிய தங்களது தலைவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்களும், பெண்களும் அழுது கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்த கூட்டத்தினர் தலைவணங்க நின்று கொண்டிருக்க கட்டபொம்மனது உயிரற்ற உடல் எரியூட்டப்பட்டது.....

பாஞ்சை பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 வது பிறந்தநாள் இன்று....

நன்றி: ஜி.துரை மோகன்ராஜ் பதிவிலிருந்து...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved